என் மலர்tooltip icon

    ஈரோடு

    அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பெருந்துறையில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமை தாங்கி பேசினார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தொண்டனாக இருந்த என்னை படிப்படியாக மாவட்ட செயலாளராக உயர்த்தினார்.

    2012-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னை அமைச்சராக நியமித்தார். நான் பெருந்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கருதி அம்மா எனக்கு இந்த பதவியை வழங்கினார். பெருந்துறை வளர்ச்சிக்காக நான் குடிநீர் திட்டம், புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், புதிய நீதிமன்ற கட்டிடம், டி.எஸ்.பி. அலுவலகம் கொண்டு வந்துள்ளேன். 3 குளங்களை தூர் வாரி சிறுவர் பூங்கா அமைத்துள்ளேன். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை ரூ.500 கோடி மதிப்பில் நிறைவேற்றி உள்ளேன்.

    புதிய குடிநீர் திட்டம் போதுமானதாக இல்லை. இதற்காக கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் 2014-ம் ஆண்டு 110 விதியின் கீழ் சட்டசபையில் அம்மா அறிவித்தார். இதில் 8 பேரூராட்சிக்கும் 72 கிராம பஞ்சாயத்துக்கள் பயன்பெறும் வகையில் ரூ.128 கோடி செலவில் போர்க்கால அடிப்படையில் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் இந்த திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேறி இருக்கும். ஆனால் இதுவரை நிறைவேறவில்லை.

    நாங்கள் கூவத்தூரில் தங்கி இருந்தபோது சின்னம்மா (சசிகலா) முதல்வராக வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க் களும் முடிவு செய்தோம். அவர் சிறை சென்ற காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தோம். ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொண்டு அவருடன் சேர அழைத்தார்.


    ஓ.பி.எஸ். அணியில் வெறும் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். நான் ஒருவன் சேர்ந்திருந்தால் அது 13 ஆகத்தான் உயர்ந்திருக்கும். அவரால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியாது. அந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் கவிழ்ந்து விடும். ஓ.பி.எஸ்.சும் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தோம்.

    கூவத்தூரில் இருந்த போது தங்கமணி, வேலுமணி இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் என்னை அழைத்து சென்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு விழா முடிந்த பிறகு உங்களுக்கு (எனக்கு) மாவட்ட செயலாளர் பதவி தருவதாக கூறினார்.

    அதற்கு நான் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அமைச்சராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளேன். எனக்கு இதுவெல்லாம் தேவையில்லை. எனது தொகுதியின் வளர்ச்சிக்கு 3 திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்றேன். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நான்கு வழி புறவழிச்சாலையில் மேம்பாலங்கள் வேண்டும் என்றேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி சரி என்றார்.


    இப்போது ஆட்சி அஸ்திவாரமாக இருப்பது ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு வந்து ரூ.720 கோடியில் திட்டங்களை அறிவித்தார். அதற்கு முந்தைய நாள் திட்ட அறிக்கையில் பெருந்துறை தொகுதிக்கு ஒரு திட்டங்கள் கூட இல்லை. அவர் சம்மதம் தெரிவித்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டமும் இல்லை. இவை இருந்திருந்தால் நான் முதல் ஆளாக விழாவில் கலந்திருப்பேன். பெருந்துறை தொகுதியை புறக்கணித்ததால் நான் மிகுந்த மனவேதனையுடன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. என்னால் இந்த ஆட்சிக்கு எந்த நெருக்கடியோ... இடையூறோ வராது. முதல்-அமைச்சரிடம் நான் தக்க மரியாதை வைத்துள்ளேன். தடங்கல் எங்குள்ளது...? என்று எனக்கு தெரியவில்லை. முதல்வர் எனது கோரிக்கையை நிறைவேற்ற தயாராக இருந்தாலும் இதை தடுப்பது யார்? என்று தெரியவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில உள்ள அமைச்சர்கள் (கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்) எல்லா தொகுதிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.

    தேர்தலின்போது உள் கட்சி சண்டையாலேயே வாக்கு சதவீதத்தை இழந்து இருக்கிறோம். நமது கட்சியை சார்ந்தவர்களே நமது வேட்பாளர்களை தோற்கடித்து உள்ளனர். இது உள்கட்சி காரணம்தான் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். கடந்த ஓராண்டில் பெருந்துறை தொகுதிக்கு ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் நான் கேட்ட 3 திட்டங்களை நிறைவேற்றினால்தான் பெருந்துறை தொகுதி மக்கள் ஆட்சியை ஏற்றுக் கொள்வார்கள். இதனை நிறைவேற்றாவிட்டால் தேர்தலின்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

    இதேபோல் மணல் பிரச்சனைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும். ஊத்துக்குளி வெண்ணைக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் அம்மா அறிவித்த திட்டங்களை இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். பெருந்துறை பகுதியில் இந்த திட்டங்களை நிறைவேறாததால் சிலர் போராட்டம் செய்ய முடிவு செய்தனர். நான் அவர்களை தடுத்து அம்மா ஆட்சி உங்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என கூறி உள்ளேன்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறினார்.
    ஈரோட்டில் தண்டவாளத்தை கடந்து சென்ற வாலிபர் மீது ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் மூதாட்டி இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதிக்கு உட்பட்ட காவிரி ரெயில் நிலையம்-ஆனங்கூர் இடையே தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நபரின் சட்டை பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் இறந்து போனவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம்(வயது40) என்று தெரியவந்தது.

    செல்வம் ஆனங்கூர் ரெயில் நிலையத்தை கடந்த போது ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் ரெயில் மோதி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    எனினும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போன்று ஈரோடு பகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த மூதாட்டி மஞ்சள், ரோஸ் கலர் பூப்பட்ட சேலை, மஞ்சள் கலர் பாவாடை சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.இறந்த மூதாட்டி உள்ளூர் நபரா? அல்லது ரெயிலில் பயணம் செய்யும் போது தவறி விழுந்து இறந்தாரா? என்று தெரியவில்லை.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலத்தில் வியாபாரி முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வீரபத்ரா தெருவை சேர்ந்தவர் செல்வ குமார். இவர் அத்தாணி சாலையில் மளிகைக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டினார். கடையில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அவரது வீடு கடையின் அருகில் 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே கடையில் இருந்து வீட்டுக்கு செல்வகுமார் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    வீட்டுக்கு ஒரு சந்து வழியாக செல்ல வேண்டும். இரவு 10.45 மணிக்கு அந்த இடத்தை செல்வகுமார் நெருங்கி சென்று கொண்டிருக்கும்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர்.

    2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி செல்வகுமாரின் முன்னால் சென்றனர். ஒரு மர்ம நபர் கீழே இறங்கி செல்வகுமாரின் பின்னால் சென்றார்.

    ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் செல்வகுமாரின் பின்னால் சென்ற அந்த நபர் ‘அண்ணே...’ என்று அழைத்தார். சத்தம் கேட்டு செல்வகுமார் திரும்பி பார்த்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் செல்வகுமாரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் கண் எரிச்சலால் கூச்சலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வகுமார் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்தனர்.

    பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இந்த துணிகர பணம் பறிப்பு சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ரூ. 70 ஆயிரம் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்வது நல்லதல்ல என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    ஜெயலலிதா காலத்தில் எப்படி சட்டசபை நடத்தினார்களோ அதே மாதிரி தான் தற்போதும் சர்வாதிகாரத்துடன் சட்டசபையை நடத்துகிறார்கள்.

    ஒரு வி‌ஷயத்தை விவாதத்துக்கு கேட்கிறபோது கருத்துக்களே சொல்லக்கூடாது என்று அடக்கு முறையாக வெளியே அனுப்புவது ஏற்புடையது அல்ல. ஜெயலலிதாவுக்கு பிறகும் அந்த கட்சி அதேபோன்று இருப்பது வேதனையாக உள்ளது.

    கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கிறார். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் சபாநாயகராக இருக்கும்போது இவர்கள் எல்லாம் சேர்ந்து ஜனநாயக முறைப்படி சட்டசபையை நடத்தாமல் அடக்குமுறையுடன் நடத்துவது வருத்தமாக உள்ளது.

    எம்.எல்.ஏ.க்களுக்கு பண பேரம் பேசப்பட்டது. வீடியோ மூலம் ஆதாரமாக வெளி வந்துள்ளது. கூவத்தூரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இது சட்டசபைக்கு தொடர்புடையது.

    தேசிய அளவில் இந்த விவகாரம் கரும்புள்ளியாக உள்ளது. எனவே அதை விவாதித்து உண்மையை நிரூபிக்க வேண்டியதுதானே. டி.வி. பேட்டி கொடுத்த எம்.எல்.ஏ.வை சட்டசபையில் பேச வைக்க வேண்டியது தானே.

    அதை மறைக்க முயல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு என்ன மதிப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டு முதல்வர் சபாநாயகருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.


    சபாநாயகர், முதல்வர் பொறுத்தவரை எப்படியாவது தி.மு.க.வை சபையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்றுதான் உள்ளனர்.

    தினமும் அ.தி.மு.க பற்றி தான் தலைப்பு செய்திகளாக வருகிறது. தினகரன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., தீபா இவர்களை பற்றிதான் தொலைக்காட்சிகளில் ஹாட் நியூசாக வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல். அனைத்தும் சசிகலா, தினகரன் தலைமையில் நடக்கிறது.

    ஓ.பி.எஸ்.சை பின்னால் இருந்து இயக்குவது அவர்கள்தான். மக்கள் சசிகலாவையும், தினகரனையும் எதிர்க்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காகவே ஓ.பி.எஸ்.சை வெளியே போகிற மாதிரி போக வைத்து இயக்குவது அவர்கள்தான். பின்னர் இணைப்பு என்பார்கள்.

    எனவே இனிமேலும் தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி தொடர்வது நல்லதல்ல.

    ஜி.எஸ்.டி.வரி குறித்து தெளிவு இல்லை. விவசாயத்துக்கு அடுத்து ஜவுளி தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. எனவே ஜவுளி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று பெண்கள் உறுதியாக கூறியதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மதுக்கடையை பூட்டினர். இச்சம்வத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த நேரு நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை அடுத்துள்ள நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே புதியதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

    புதியதாக திறக்கப்பட்ட கடையுடன் மேலும் 2 மது பானக்கடைகள் திறக்கப்பட உள்ளன. தற்போது மாலை நேரத்தில் மதுக்கடையில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் மேலும் இரு கடைகள் திறக்கப்பட்டால் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேருநகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்தி-கோபி இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பெண்கள் உறுதியாக கூறியதால் வேறு வழியின்றி அதிகாரிகள் மதுக்கடையை பூட்டினர்.

    சத்தியமங்கலம்-கோபி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய போலீசார்.
    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் பவானிசாகர் அணை நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 39.73 அடியாக இருந்தது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டிமலை பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நேற்று இரவில் இருந்து அணைக்கு தண்ணீர்வரத்து கொஞ்சம் அதிகரித்து உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 20 கன அடி மட்டுமே தண்ணீர் வந்தது. நேற்று நள்ளிரவில் இருந்து இது கொஞ்சம் உயர்ந்து வினாடிக்கு 287 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் இதனால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
    கோபி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி ரோட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    கோபி:

    சத்தியமங்கலம் வடக்குபேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 35). இவர் சென்னை ஆவடி ராணுவ பண்டக சாலையில் ஊழியராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி கலைசெல்வி (வயது 28). இவர்களின் மகன் நிஷாந்த் (வயது 1½).

    இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு போய்விட்டு காரில் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை உறவினர் அசோக்குமார் ஓட்டி வந்தார். இவரது மனைவி சித்ரகலா.

    கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் அருகே உள்ள வளைவில் கார் வந்த போது ரோட்டின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி ரோட்டில் கார் கவிழ்ந்தது.

    இதில் காரில் வந்த குழந்தை நிஷாந்த் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே நிஷாந்த் பரிதாபமாக இறந்தான்.

    மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சிறுவலூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள்.
    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளன. இதனால் ஜவுளி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜீலை முழுவதும் 1-ந் தேதி(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.

    இதனால் சிறு, குறு தொழில் குறிப்பாக ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(15-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தன.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

    இது குறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறும் போது.-

    ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி தொழிலுக்கும் அதன் சார்ந்த நிறுவனங்களுக்ம் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வேட்டி, சேலை, ஜாடா, மல்லு போன்றவைகளுக்கு இது வரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.வரிவதிப்பு நடைமுறைக்கு வந்தால் 5 சதவீதம் வரி கொடுக்க வேண்டு இருக்கும்.

    இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று நடந்த கடையடைப்பு போராட்டதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளன. இதனால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் போராட்டத்திற்கு ஈரோடு இந்திரா நகர் பகுதி வணிகர் சங்கம், ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் அசோசியேசன், ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம், ஈரோடு மில் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன், ஈரோடு சலவைபட்டறை உரிமையாளர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் ஆதரவு தெரிவித்து எங்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    ஜவுளி நிறுவனங்களின் கடையடைப்பால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிரப் ரோடு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற இடங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் அமைதியாக காட்சி அளித்தது.

    இதே போன்று பவானி, மொடக்குறிச்சி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கெடுப்புக்காக பேரம் பேசப்பட்டது பற்றி தகவல் கூறப்பட்ட வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் தாமாகவே முன் வந்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்தார். அவர் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    தேசிய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி மற்றும் நுழைவு தேர்வு(நீட்) நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது.

    ஆனால் உயர்நீதி மன்றத்தின் அந்த தடையை நீக்கி தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தனது அதிகார பலத்தை மையப்படுத்தி மாநில அரசுகளுக்கான உரிமையை படிப்படியாக பறிக்க முயல்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

    தற்போது 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருப்பதால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டி உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு நெருக்கடியும், மன உளைச்சலும் ஏற்படும். எனவே பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் 10-ம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு “பிரி யுனிவர்சிட்டி” வகுப்புகளாக அறிவித்து செமஸ்டர்(பருவமுறை) தேர்வுகள் கொண்டு வர வேண்டும்.



    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கெடுப்புக்காக பேரம் பேசப்பட்டது பற்றி தகவல் கூறியதாக கூறப்பட்ட வி‌ஷயத்தில் உரையாடலில் ஈடுபட்டு இருப்பவர் அந்த குரல் அவருடையது இல்லை என்று மறுத்திருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன் வந்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 1¼ லட்சம் விண்ணப்பங்கள் காலியாக உள்ளது. அதற்கு நேர்மாறாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி. போன்ற படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 200 இடங்களுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்த படிப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 20 சதவீதம் இடங்களை அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் பக்கத்து வீட்டு நபருடன் மாயமான மனைவியை மீட்டு தாருங்கள் என்று கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு, கணபதி நகர், பெரிய செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 32).

    சம்பவத்தன்று கிருத்திகா செட்டி பாளையத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக மொபட்டில் சென்றார். நீண்ட நேரமாகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த தியாகராஜன். மனைவி கிருத்திகாவை உறவினர் வீடுகள், தோழிகள் வீடுகளில் தேடினார்.

    எனினும் கிருத்திகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தியாகராஜன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். அதில் தனது மனைவி கிருத்திகா பக்கத்து வீட்டில் வசித்த வந்த நபருடன் மாயமாகி விட்டதாகவும், மனைவியை மீட்டு தர வேண்டி என்று கூறி இருந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கிருத்திகாவை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் தள்ளு வண்டி வியாபாரி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம், மரப்பாலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது65).

    ராமசாமி தள்ளு வண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரத்துக்காக வீட்டை விட்டு சென்ற ராமசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ராமசாமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எனினும் ராமசாமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராமசாமி குடும்பத்தினர் புகார் அளித்தனர்.அதில் மாயமான ராமசாமியை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    காணாமல் போன அன்று ராமசாமி வெள்ளை நிற முழுக்கை சட்டையும், புளு கலர் கட்டம்போட்ட லுங்கியும் அணிந்திருந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ராமசாமியை தேடி வருகிறார்கள்.

    தாளவாடி அருகே பல லட்சம் மதிப்புள்ள அரிய மரங்களை வெட்டி கடத்திய குற்றவாளிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அடுத்த பையனா புரத்தில் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான வேளாண் பயிற்சி மற்றும் கடனுதவி ஆகியவற்றை வழங்கி வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படாமல் புதர் மண்டி மூடிக்கிடக்கிறது. நிறுவன அலுவலர்கள் வெளியூரில் உள்ளதால் கவனிப்பாறின்றி கிடந்தது.

    இந்த நிலையில், சிலர் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரியவகை 67 மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இது குறித்து, கிராமமக்கள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரை கேட்டு கொண்டுள்ளனர்.

    இந்த அரிய வகை மரங்களை கடத்திய குற்றவாளிகள் யார்? அவர்களை உடனே பிடிக்க வேண்டும். தப்பி விடக்கூடாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
    ×