என் மலர்tooltip icon

    ஈரோடு

    இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்து உள்ளது என நம்பியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில தலைமை கழக பேச்சாளர் ஐ.லியோனி பேசியதாவது:-

    கடந்த, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 11 முறை டி.விகளிலும் செய்திதாள்களிலும் செங்கோட்டையன் அமைச்சர் ஆவார் என கூறினர். ஆனால் அது இப்போது சசிகலாவின் அடிமையாகி காலில் விழுந்த பிறகுதான் அமைச்சர் ஆகியுள்ளார்.

    தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அவைகள் அனாதையாக கிடக்கின்றன.

    கலைஞர் தான் குடியிருந்த வீட்டை கூட மருத்துவமனைக்காக எழுதி கொடுத்துள்ளார்.

    குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக சிறந்த தலைவராக உள்ளார். ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் கலைஞர். தேசிய கட்சிகளுக்கு கூட சின்னங்கள் மாறியுள்ளன. ஆனால் ஒரே சின்னத்தில் உதயசூரியன் சின்னத்தில் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். யாரும் படைக்காத சாதனை.

    தங்களின் கட்சி சின்னத்தையே பறித்த கட்சிக்கு குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்து உள்ளது அ.தி.மு.க. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பினாமியாக உள்ளார். வரும் காலத்தில் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் பெற வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே சூரியம்பாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவி அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.

    கடந்த 23-ந் தேதி இந்த போட்டிகளை முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். டென்னிஸ் பந்தில் தலா 6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடந்தது.

    ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. கடந்த 3 நாட்களாக நடந்த இந்த போட்டிகளுக்கான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    இதனைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    விளையாட்டில் வெற்றியையும், தோல்வியையும் சமநிலையில் பார்க்க வேண்டும். வெற்றியடைந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தோல்வியடைந்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    விளையாட்டு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் விரைவில் கொண்டு வரப்படும். தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் பெற வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் அரசு, விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போட்டிகளில் பெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, பகுதி செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் துறை மாநில தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பெரியசேமூர் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் என்.நந்தகோபால், வார்டு செயலாளர் துரைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
    அந்தியூர் அருகே இன்று சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மாத்தூர், மாரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் குமாரசாமி (வயது23).

    இவருக்கும் திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த அம்மாசை மகள் கவுசிகா(17) என்பவருக்கும் இரு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்தனர்.

    இன்று மாத்தூர் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு குமாரசாமிக்கும், கவுசிகாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்களும், நண்பர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு உறவினர்களும் ஈடுப்பட்டிருந்தனர்.

    திருமணம் குறித்து அந்தியூர் தாசில்தார் செல்லைய்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிலவருவாய் ஆய்வாளர் ஜமுனாராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து பெண் வீட்டார் எங்கள் மகள் திருமணத்தை 18 வயதுக்கு பிறகு நடத்தி கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு திருப்பூர் சென்றனர். இதனால் சிறுமி திருமணம் தடுத்த நிறுத்தப்பட்டது. இதனால் கல்யாண வீடு களை இழந்தது. இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    ரமலான் பண்டிகையையொட்டி சத்தியமங்கலத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு 1.5 டன் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    இங்கு விளையும் பூக்களை பறித்துச் சென்று சத்தியில் உள்ள பூக்கள் விற்பனை சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். இங்கு விற்கப்படும் முதல் தர மல்லிகைப்பூக்களை கொள்முதல் செய்து அதனை ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்து அனுப்புகின்றனர்.

    கோவையில் உள்ள வேன்கார்டு என்ற பூ ஏற்றுமதி நிறுவனம், சத்தியில் உயர்தரப் பூக்களை கொள்முதல் செய்து அதனை ஓரிடத்தில் கொட்டுகின்றனர். பூக்கள் மேலும் தரம் பிரிக்கப்பட்டு சாதாரண தண்ணீரில் நனைத்து அதன் இயற்கையாக பூக்களில் உள்ள வெப்பத்தை தணித்து அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றனர்.

    பின்னர், பூக்களை மாலை போல கட்டுவதற்கு தயார்படுத்துகின்றனர். இதற்கென பணிபுரியம் பெண்களுக்கு 200 கிராம் அளவில் விடு பூக்களை கொடுத்து அதனை 6 அடி நீளமுள் சரமாக கட்டுகின்றனர். சரவடிவில் உள்ள பூக்கள் மேலும் உதிராமல் உள்ளதா? என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தை உறுதி படுத்துகின்றனர்.

    தொடர்ந்து, ஏற்றுமதிக்கு ஏற்றவாறு மலர்களை குளிரூட்டுவதற்கு ஐஸ்ஜெல் என்ற பாக்கெட்டை பெட்டிக்குள் வைத்து பதப்படுத்துகின்றனர். சில இடங்களுக்கு விடுபூக்கள் விரும்புவதால் அதனையும் அதில் வைத்து பேக்கிக் செய்து வேன் மூலம் கொச்சின் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சவுதிஅரேபியாவில் உள்ள ரியாத், ஜெட்டா மற்றும் துபாய்க்கு அனுப்பப்படுகிறது.

    ரமலான் பண்டிகையையொட்டி என்பதால் ஞாயிற்றுகிழமை 1.50 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று ரமலான் கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரிக்கும் என பூ விவசாயிகள் தெரிவித்தனர். ரமலான் பண்டிகையையொட்டி கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அங்கு பல்வேறு அரசு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.-

    மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொது தேர்வுகளையும் சமாளிக்கும் வகையில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நீட் தேர்வுக்காக கேள்வி தாள் அடங்கிய 54 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி எந்த தகவலும் வரவில்லை. கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. அதில் படகு இல்லம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வேட்டைக்காரன் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

    ஈரோட்டில் காதல் கைகூடாததால் மகள் வி‌ஷம் குடித்த விரக்தியில் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு சூளை ஓடைப்பள்ளம் மல்லி நகர் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 55). இவரது மனைவி கமலவேணி. இவர்களது மகள் அக்‌ஷயா (17).

    இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்த சித்தோடு கொங்கம் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

    பிரகாஷின் அக்காள் வீடு மல்லி நகரில் உள்ளது. அங்கு பிரகாஷ் அடிக்கடி வந்து சென்றபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது.

    காதல் கைகூடாததால் காதலர்கள் மனம் வருந்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய அக்‌ஷயாவும், பிரகாசும் ரெயிலில் ஏறி திருச்சிக்கு சென்றனர்.

    திருச்சி பொங்கி கார்னரில் 2 பேரும் வி‌ஷம் குடித்தனர். இதில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அக்‌ஷயா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்‌ஷயாவின் தாய் கமலவேணி உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    திருச்சிக்கு சென்றிருந்த பாலசந்தர் 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தார். ஆனால் அவர் மனம் உடைந்த நிலையிலேயே காணப்பட்டார். நேற்று இரவு வரை அக்கம் பக்கத்தினர் அவரை பார்த்தனர்.

    இன்று காலை அவரது நடமாட்டம் இல்லை. அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து பார்த்தனர். எந்த பதிலும் வராததால் பூட்டிக் கிடந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

    அப்போது பாலச்சந்தர் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து வீட்டுக்குள் சென்று பாலச்சந்தரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் கைகூடாததால் மகள் வி‌ஷம் குடித்த விரக்தியில் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தந்தை இறந்த வேதனையில் உடலில் மண்எண்ணை ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அகத்தியர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் இவரது மனைவி ஜான்சா (வயது 40).

    ஜான்சாவின் தந்தை லத்தீப் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சா மிகவும் வேதனையுடன் இருந்தாராம்.

    இந்த நிலையில் ஜான்சா வீட்டில் இருந்த மண் எண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் வலியால் துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மகன் சாகுல்ஹமீது கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பெருந்துறை சிப் காட் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் அதிகளவில் கரும்பு கையை வெளியேற்றுவதாகவும், சுத்திகரிப்பு செய்யாமல் சாயக் கழிவுகளை வெளியேற்றி வருவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பெருந்துறை சிப் காட் பகுதிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிப்காட் வளாகத்தில் உள்ள 7 டெக்ஸ்டைல் நிறுவனங்களில் இந்த ஆய்வு நடந்தது.

    அப்போது 2 நிறுவனங்கள் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் கரும்புகை வெளியிட்டது தெரியவந்தது. இதன் பேரில் அந்த 2 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கலெக்டரின் இந்த ஆய்வுப் பணி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சார்பில் உண்ணாவிரதம் இருந்த 40 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க திரண்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல் கானிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர். ஆனால் அவர் அலுவலக வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால் அவர்கள் திரும்பி வந்து விட்டனர்.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திடீரென உண்ணாவிரதம் இருந்தனர்.

    தமிழ்நாடு தூய்மை பணியில் புதிதாக ஆயிரம் பணியிடங்களை உருவாக்கி பணி வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக தூய்மை பணியில் டிரைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிட்டி அலவன்ஸ் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் உண்ணாவிரதம் இருக்க உங்களுக்கு அனுமதி இல்லை என கூறி 6 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
    கடம்பூர் செல்லும் வழியில் பட்டப்பகலில் பெரிய புலி ஒன்று பாய்ந்து ரோட்டை கடந்து ஓடியது. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் மலையிலும் தற்போது புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.

    இதை உறுதி படுத்தும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினர் கண்ணில் புலிகள் நடமாட்டம் சிக்கி உள்ளது.

    தற்போது பொதுமக்கள் பார்வையிலும் அதுவும் ரோட்டிலேயே புலி நடமாட்டமும் இருப்பது தெரிய வந்துள்ளது.

    சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூரில் இருந்து ஒரு வேனில் டிரைவர் உள்பட 4 பேர் சத்தியமங்கலம் நோக்கி நேற்று மதியம் வந்தனர்.

    கடம்பூர் அடுத்து ரோட்டில் ஒரு சிறிய குகை வடிவில் மல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் அந்த வேன் வந்த போது திடீரென விருட்டென்று பெரிய புலி ஒன்று பாய்ந்து ரோட்டை கடந்து ஓடியது.

    வேனில் வந்த ஏலாஞ்சி ஊரை சேர்ந்த அங்கியம்மாள், கரளியத்தை சேர்ந்த பெரியசாமி, பழனிசாமி, மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த அரிய காட்சியை கண்டு அதிர்ச்சி கலந்த பரவசம் அடைந்தனர்.

    மலையை விட்டு கீழே இறங்கி நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த இவர்கள் தாங்கள் கடம்பூர் அருகே புலியை பார்த்த திகில் அனுபவத்தை அந்த பகுதி மக்களிடம் கூறி வியப்படைந்தனர்.

    இதே போல கடந்த சில தினங்களுக்கு முன் கடம்பூர் மலை அடிவாரம் உள்ள வன சோதனை சாவடி அருகே குட்டிப்புலி ஒன்று நடமாடியதையும் சிலர் பார்த்து வியப்படைந்தனர்.

    அகிலேஷ் யாதவிற்கு ஒரே நாளில் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு அ.தி.மு.க.வை மிரட்டி வருகிறது என தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
    பெருந்துறை:

    பெருந்துறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காரல் மார்க்ஸின் 200-வது ஆண்டு மற்றும் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் பெருந்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நல்லப்பன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது:-

    தற்போது பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே. இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் இவரை வெறும் பொம்மை ஜனாதிபதியாக வைத்து கொண்டு பா.ஜ.க. பின்புலத்தில் செயல்படும்.

    கோவையில் அமைக்கப்பட்ட ஆதியோகி சிலை தொடர்பான விதிமீறல் வழக்கில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்த சிலை அமைப்பதற்காக விதிகளை தளர்த்தி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இந்த மாதிரி கட்டப்பட்ட கட்டிடங்களை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    மத்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவிற்கு ஒரே நாளில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

    ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு அ.தி.மு.க.வை மிரட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாரதிய ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் ஆதரிக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
    கோபி:

    கோபி வந்த இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. லோக்சபா, ராஜ்யசபா மற்றும் மாநில எம்.எல்.ஏ. வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    தற்போது மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால், அதிக உறுப்பினர்கள் அவர்களிடையே உள்ளனர். பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை ஆதரிக்க வேண்டியதில்லை. ஆதரிக்கவும் முடியாது.


    ஜனநாயகத்தை மத்திய அரசு தகர்த்து வருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை மதிப்பதில்லை. மிதிக்கிறார்கள். இதில், உரிமைகள் எல்லாவற்றையும் இழந்து அவல நிலையாக இருப்பது தமிழ்நாடுதான்.

    தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் வேரூன்றி உள்ளன. வடஇந்தியாவில், இது போன்று இல்லை. அதனால், இங்கு ஆட்சி செய்யும் அதிமுகவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பாதுகாத்ததே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். இதற்காக 69 சதவீத இடஒதுக்கீட்டை நிரந்தரமாக அமுல்படுத்தினார். இதை மத்திய அரசு சட்ட ரீதியாக மதிக்காமல், நீட் தேர்வு, மற்றும் மத்திய அரசின் கொள்கைகளை திணித்து வருகிறது.

    உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற கொடூரமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அள்ளிவிடாத வாக்குறுதிகளே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிலேயே உள்ளார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு தான் ஆளவேண்டும். பாஜக இங்கு ஆள்பவர்களை கொத்தடிமையாக்கி விட்டது. இந்த அவல நிலை மாற்றப்பட வேண்டும்.

    வரும் 29 ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரியக்க பிரசாரம் நடைபெற உள்ளது.

    தமிழக முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆணவ முறையில் செயல்படுகிறது. யாருக்கோ பிணைக்கைதியாக உள்ளது.

    இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் சிந்தனைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன், வழக்கறிஞர் கந்தசாமி, மற்றும் பலர் உடனிருந்தனர்.
    ×