என் மலர்
ஈரோடு
பவானி:
பவானி அருகே குருப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பரது மகன் லோகநாதன் (வயது 23). இன்னும் திருமணம் ஆகவில்லை.
லாரி டிரைவரான லோகநாதன் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஒலகடம் சென்றார். பிறகு அங்கிருந்து பவானிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பவானி அருகே உள்ள தாழமுத்து என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அது நிற்காமல் சென்று விட்டது.
இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவரை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். லோகநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிர்லா (வயது36). கூலிதொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு நினிஸ்பாலு என்கிற விஷ்ணு (3) என்ற மகன் உள்ளான்.
கடந்த 30-ந் தேதி வீட்டின் முன் நினிஸ்பாலு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென நினிஸ்பாலு மாயமாகி விட்டான்.
இதையடுத்து பிர்லா மற்றும் மகேஸ்வரியும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து பார்த்தும் சிறுவன் நினிஸ் பாலு கிடக்கவில்லை.
இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பிர்லா கதறி அழுதபடி என் மகனை மீட்டு தாருங்கள் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வருகிறார்கள்.
தெருவில் விளையாடிய சிறுவன் எப்படி திடீரென மாயமானான்? அவனை யாராவது கடத்தி சென்றார் களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி அடுத்த கடத்தூர் இந்திர நகர், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி.இவரது மனைவி இந்திராணி (வயது 31). இவர் களுக்கு ஜோதி பிரவின்(12), சபரி (10) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்திராணிக்கு 6 வருடத் திற்கு முன் மனநிலை பாதிக் கப்பட்டது. அதற்காக அவர் தந்தை வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று இந்திராணி வீட்டின் ஒரு அறையில் சேலையை கழுத்தில் மாட்டி தூக்கு போட முயன்றார். இதை கவனித்த இந்திராணியின் உறவினர் ஒருவர் சத்தம் போட்டுள்ளார்.
உறவினர் சத்தம் கேட்டு அங்கு குணசேகரன் என்பவர் ஒரு ஏணி மூலம் ஓட்டை பிரித்து வீட்டின் உள்ளே இறங்கி இந்திராணி கழுத்தில் இருந்த புடவையை எடுத்து விட்டு இந்திராணியை மீட் டார்.
இந்திராணியை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச் சைக்காக இந்திராணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி சீத்தாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்களது மகன் பார்த்திபன் (15), மகள் ராஜேஸ்வரி (13).
பார்த்திபன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ்வரி கோபியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
சாந்தி சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 3 பேரும் வீட்டில் இருந்தனர். பார்த்திபன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் விஷம் குடித்தனர். இதனால் அவர்கள் வாந்தி எடுத்தனர். இந்த சத்தம் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தியின் தாய் லட்சுமிக்கு கேட்டது.
அவர் வந்து பார்த்தார். வாந்தி எடுப்பது குறித்து கேட்டார். அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் விஷம் குடித்ததாக கூறினர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார். ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் எழுதி கையெழுத்திட்ட சோக கடிதம் சிக்கியது.
அதில், தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. சரியான வேலை இல்லாததால் குடும்பம் நடத்த முடியவில்லை. வறுமை வாட்டுகிறது. எனவே தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் எழுதி இருந்தனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு பஸ் நிலையம் அருகே நாச்சியப்பா 2-வது வீதியில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர்.
அந்த ஆண் தனது பெயர் தேவா என்றும், பெங்களூரு மெஜஸ்டிக் கார்னரை சேர்ந்தவர் என்றும் கூறி ரூ. 750-க்கு அறை எடுத்தார். அவருடன் அந்த பெண்ணும் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த நபர் லாட்ஜ் மேலாளர் சண்முகத்தை சந்தித்தார். பெங்களூருவுக்கு செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
மேலாளர் சந்தேகம் அடையாததால் சரி என்று கூறிவிட்டார். காலை 6 மணி ஆகியும் அந்த நபர் வரவில்லை. எனவே லாட்ஜ் மேலாளர் அந்த அறைக்கு சென்றார்.
அறையின் கதவு வெளியில் இருந்து திறக்கும் வகையில் சாதாரணமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை லேசாக திறந்த மேலாளர் உள்ளே பார்த்தார்.
அப்போது அறையில் தரையில் அந்த நபருடன் வந்த பெண் படுத்திருந்தார். சந்தேகம் அடைந்த மேலாளர் அருகில் சென்று பார்த்தார்.
அப்போது அந்த பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த மேலாளர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரமேஷ், முருகன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
எனவே அந்த பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய நபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? உடன் தங்கிய நபருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு? எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு தீப்தி (16) என்ற மகள் உள்ளார்.
நடராஜன் சத்தியமங்கலம், தோப்பூர் அருகில் உள்ள கூட்டுறவு ரேசன் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நடராஜனும், அகிலாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். நடராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடராஜன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நடராஜன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் விஷம் குடித்து தூங்கி விட்டார். மறுநாள் காலை நடராஜனுடன் பணிபுரியும் ரவிச்சந்திரன் நடராஜன் வீட்டுக்கு சென்ற போது நடராஜன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அருகே உள்ளது சித்தோடு. இந்த ஊரை அடுத்துள்ள வசுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பாவாயி (75).
பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார் (23). இவர் ஈரோட்டில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.
பழனிசாமிக்கும் மகன் சந்தோஷ் குமாருக்கும் கடந்த 3 மாதமாக சொத்து தகராறு இருந்து வந்தது. “உன் பெயரில் உள்ள சொத்துக்கள் யாவையும் என் பெயரில் மாற்றி எழுதி கொடு” என்று சந்தோஷ்குமார் தந்தையிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 6.30மணியளவில் வசுவப்பட்டியில் உள்ள தனது தாயார் பாவாயியை பார்க்க பழனிசாமி வந்திருந்தார். அப்போது அங்கு மகன் சந்தோஷ்குமாரும் வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை பழனிசாமி, “சொத்தை எழுதி கொடுக்க இப்போது என்ன அவசியம் அதெல்லாம் முடியாது பிறகு பார்த்து கொள்ளலாம்” என்று கூறி உள்ளார்.
“அதெல்லாம் முடியாது இப்போதே எனது பெயரில் சொத்தை எழுதி கொடுங்கள்” என்று கேட்டு தகராறில் மகன் ஈடுபட்டார்.
தந்தை-மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சுட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி பாவாயி “அடப்பாவி என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சந்தோஷ்குமார் துப்பாக்கியால் சுட்டான்.
இந்த கொடூர செயலில் தந்தை பழனிசாமி அவரது தயார் பாவாயி ஆகிய இருவரும் குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இருவரும் கீழே சுருண்டு விழுந்து இறந்ததும் சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு மற்றும் பவானி, ஈரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த 5 இடங்களிலும் பெருந்துறை தான் அனைத்து வசதிகளையும் கொண்டது.

இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருக்கும்.
ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசலால் எய்ம்ஸ் மருத்துவமனையை எவரும் கண்டு கொள்ளவில்லை.
தி.மு.க. சார்பில் குளம்-குட்டைகளை தூர் வார ஆரம்பித்ததும் அரசின் சார்பிலும் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துச் செல்ல அரசு அனுமதியளித்தும் ஆளும் கட்சி பிரமுகர்கள் பணம் வாங்கி கொண்டுதான் மணலை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தே தீருவோம். அதற்காக எந்த விதமான போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கருங்கரடு, காந்தி நகர் பகுதியை சேர்ந்த யோகராஜ். இவரது மகன் பிரதீப் (வயது 19).
இவர் கடந்த 2009-ம் வருடம் காஞ்சிக்கோவிலில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனது பெற்றோருடன் பஸ்சில் சென்றார்.
என்ஜிஜிஓ காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது பஸ்சை திடீரென எடுத்ததால் பஸ்சில் இருந்து பிரதீப் தவறி விழுந்தார். இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 2013-ம் வருடம் வழங்கப்பட்டது.
அதில் விபத்தில் காயமடைந்த பிரதீப்பிற்கு ரூ. 2.84 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த பெருந்துறை சப்-கோர்ட்டு நீதிபதி பகவதியம்மாள் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதன் பேரில் ஜப்தி செய்யப்பட்ட பஸ் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
ஈரோடு:
ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை) வரியால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் வெகுவாக பாதிக்கப்படும் ஆகவே ஜி.எஸ்.டி. வரியை விதிக்க கூடாது என வலியுறுத்தி ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முதல் ஸ்டிரைக் தொடங்கியது. இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. ஈரோடு மில் துணிகள் வணிகர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், ஜவுளி விற்பனையாளர்கள் சங்கம், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம், விசைத்தறி துணி வணிகர்கள் சங்கம், பிளீச்சிங் பட்டறை சங்கம் என்பன உள்பட மொத்தம் 22 சங்கத்தினர் இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் அதனை சார்ந்த நிறுவங்கள் ஜவுளி கடைகள் 2-வது நாளாக ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டன. விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டன.
அந்த ஜவுளி நிறுவனங்கள் உள்ள கடை வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஜவுளி சார்ந்த நிறுவனங்களின் இன்று 2-வது நாள் போராட்டத்தால் மொத்தம் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து ஜவுளி வியாபரிகள் இன்று 2-வது நாளாக எந்த வங்கியிலும் பணம் எடுக்கவோ போடவோ செய்யவில்லை. இதனால் ஈரோடு வங்கிகளில் பண பரிவர்த்தனை முடக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பை கண்டித்து ஈரோட்டில் 22 ஜவுளி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பிரம்மாண்ட இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.
ஆயிரக்கணக்கான பேர் இதில் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி தாளகரை அருகே உள்ள அழகாசூரை சேர்ந்தவர் மாதையன் (வயது 60) இவரது மனைவி இதயம்மாள் (55). அந்த பகுதியில் குச்சி (மரவள்ளி) கிழங்கு தோட்டத்துக்கு இரவு காவல் பணிக்காக இதயம்மாள் போய் வருவார்.
அங்கு இரவு தோட்டப் பகுதியில் உள்ள சாலை (குடிசை)யில் தங்கி ஏதாவது வன விலங்குகள் வந்தால் சத்தம் போட்டு விரட்டுவார்.
இதேபோல் நேற்று இரவும் அப்பகுதியில் உள்ள குச்சிகிழங்கு தோட்டத்துக்கு இதயம்மாள் இரவு பணிக்கு சென்றார். இரவில் அங்குள்ள ஒரு கட்டிலில் அவர் படுத்திருந்தார். நள்ளிரவில் அங்கு ஒற்றை யானை அந்த குடிசையில் புகுந்தது. குடிசையை துதிக்கையால் பிரித்து எரிந்தது.
மேலும் அங்கு படுத்திருந்த இதயம்மாளை கட்டிலுடன் தூக்கி வீசியது. இதில் அவர் கட்டிலுடன் அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
பள்ளத்தில் அவர் விழுந்ததால் மேற்கொண்டு அந்த யானை அவரை எதுவும் செய்யாமல் அங்கிருந்து போய் விட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். சத்தம் போட்டபடி பள்ளத்தில் கிடந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில்தான் அந்த வழியாக சென்றவர்கள் இதயம்மாளை கண்டு அவரை மீட்டனர்.
பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு அவர் ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இதயம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் ரேஞ்சர் ராமராஜன், வன காப்பாளர்கள் ரகுநாதன் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதயம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள கரட்டுப்பாளையத்திலும் நோய் பாதிப்பு தென்பட்டது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்களைப்போல 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்தியூர், ஆப்பக்கூடல், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த நிலையில் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பெண் பெயர் சுதா (வயது 32).
வடிவேலு என்பவரின் மனைவியான இவர் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் அவர் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. அதில் அவருக்கு மர்மக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சுதா பரிதாபமாக இறந்தார்.
அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் ஆப்பக்கூடல் பகுதி மக்களிடையே பரவியதால் அவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதுமே கரட்டுப்பாளையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியது.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலு சாமி, ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், டாக்டர் ரம்யா, பவானி வட்டார மருத்துவ செயலாளர் டாக்டர் தனலட்சுமி மற்றும் செவிலியர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆப்பக்கூடல் பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதிகளான கரட்டுப்பாளையம், புதுப்பாளையம், ஆப்பக்கூடல், சுக்காநாயக்கனூர், சாத்தநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தனர்.
கொசுப்புழுக்களை ஒழிக்க மருந்தும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் கொடுக்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க அந்த பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
மர்மக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய நோட்டீசுகளும் மக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தற்போது கரட்டுப்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியாகி இருப்பதால் அங்கு தொடர்ந்து சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.






