search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் காயம்"

    • பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் தெற்கு வீதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் வசித்து வருபவர் நந்தகுமார் ( 28). இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று நந்தகுமார் வேலைக்கு சென்று விட்டார். பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்ற டிராக்டர் நந்தகுமாரின் வீட்டு சுவரில் மோதி, இரும்பு கதவை உடைத்து கொண்டு நிற்காமல் வீட்டுக்குள் புகுந்து பிரியா மீது ஏறியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்த நந்தகுமார், வீட்டிற்கு விரைந்து வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் டிராக்டர் அடியில் சிக்கி தவித்த பிரியாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரியாவுக்கு வலது கால் முறிந்ததாக தெரிகிறது. இதற்கிடையே டிராக்டரை ஓட்டி வந்த காடையூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் லோகநாதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லோகநாதன் மது போதையில் டிராக்டர் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.
    • இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வசித்து வருபவர் திருப்பதி. இவர் வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற விஜயா என்பவர் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கான்கிரீட் சுவர் விழுந்ததால் மாடியில் குடியிருந்த 2 குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்துகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு பெண் பயணி, தன்னுடைய 4 வயது மகன், மாமியார் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
    • விமானம் தரையிறங்கிய பிறகு தன்னுடைய குடும்பத்தினரை விமான நிறுவனம் கண்டு கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த 20-ந்தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் ஒரு பெண் பயணி, தன்னுடைய 4 வயது மகன், மாமியார் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விமான உதவியாளர் ஒருவர், தட்டில் எடுத்துச் சென்ற சூடான காபியை தவறுதலாக கொட்டி விட்டதாகவும், அது தனது காலில் பட்டு காயம் அடைந்ததாகவும் அந்த பயணி 2 நாட்களுக்கு பிறகு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    தான் மிகுந்த வலியுடன் இருந்ததாகவும் சிறிது நேரத்துக்கு பிறகே ஒரு டாக்டர் வந்து சிகிச்சை அளித்ததாகவும், விமானம் தரையிறங்கிய பிறகு தன்னுடைய குடும்பத்தினரை விமான நிறுவனம் கண்டு கொள்ளவில்லை என்றும் அப்பயணி கூறியிருந்தார்.

    இந்நிலையில் இச்சம்பவத்துக்காக பெண் பயணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.
    • பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது மாலை முதலே நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. அவ்வப்போது இடி மின்னல் அதிக அளவில் இருந்தது.

    அதில் நத்தம் அருகே பாத சிறுகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் காலனி வீடு பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மனைவி முனியம்மாள் (வயது 43) என்பவரின் காலில் சிமெண்ட் தளம் விழுந்ததால் பலத்த காயமடைந்தார்.

    தகவல் அறிந்த நத்தம் போலீசார் காயமடைந்தவரை 108 வாகனம் மூலம் நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான்.
    • அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    போரூர்:

    ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாட்சாயிணி (வயது47). கணவரை இழந்த இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவன கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை 8மணி அளவில் அவர், வழக்கம் போல வீட்டில் இருந்து வளசரவாக்கம் பெத்தானியா நகர் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் சாலையில் தவறி கீழே விழுந்தார். இதில் தாட்சாயிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாட்சாயிணியின் நெற்றியில் 6 தையல் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து தப்பிய கொள்ளையனை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.
    • உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர்.

    வால்பாறை,

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மதன் ஆரான். இவரது மனைவி சீத்தா முனிகுமாரி(23). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட்டில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றர்.

    நேற்று சீத்தா முனிகுமாரி தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே சிறுத்தை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் காயம் அடைந்த பெண்ணை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை வனத்துறையினர் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். மேலும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்
    • தெருவில் சுற்றி திரிந்த வெறி நாய் நாகம்மாவை கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே நமாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகம்மா (45) .

    இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார் . அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறி நாய் நாகம்மாவை கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நாகம்மா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக 2 யானைகள் ஓடிவந்து வசந்தம் பின்னால் மோதி கீழே தள்ளியது.
    • யானைகள் வராமல் இருக்க வனத்துறை யினர் குழிகள் அமைத்து தரவேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாயி. இவரது மனைவி வசந்தம் (வயது 43).

    யானை மிதித்து

    இவர் இன்று அதிகாலை அவரது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அந்த வழியாக 2 யானைகள் ஓடிவந்து வசந்தம் பின்னால் மோதி கீழே தள்ளியது.

    மேலும், அதில் ஒரு யானை வசந்தம் நெஞ்சின் மீது மிதித்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார்.

    உடனே அக்கம்பக்க த்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பஞ்சப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலத்த காயமடைந்த வசந்தத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    யானை மிதித்து படுகாய மடைந்த வசந்தத்தின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

    இதனை தடுக்கும் விதமாக அடர்ந்த வனப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வனத்துறை யினர் குழிகள் அமைத்து தரவேண்டும். யானைகளின் நடமாட்டத்தால் பயிர்களும் சேதமாகின்றன. எனவே, இருள் நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சோலார் விளக்குகளை பொருத்த வேண்டும்.

    கடந்த ஒரு மாதங்களில் 4 யானைகள் இறந்துள்ளன. யானைகளால் பொதுமக்கள் இறப்பதை தடுப்பதற்கு அரசு சார்பிலும், வனத்துறை சார்பிலும் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடன் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் நகர் மன்ற தலைவர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.

    ×