என் மலர்tooltip icon

    ஈரோடு

    தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்ன பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மோடி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக நெசவாளர்கள் ஜவுளி துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவது போல் இருந்தது.

    இதற்கு மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இதே மோடி என்ன சொன்னார்? என் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்னார். அப்படி சொன்ன மோடி இப்போது என்ன செய்கிறார்?


    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுவுக்கு எதிராக போராட்டம் போன்ற பெண்கள் நடத்தும் போராட்டத்தை பார்த்து கிண்டலடிக்கிறார். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டது என்று கூறுகிறார். சட்டம்-ஒழுங்கு புத்தகத்தில்தான் ஒழுங்காக உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் குற்றங்கள் பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் இனி ஆட்சி அமைக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோர் காங்கிரஸ் தயவால்தான் முதல்-அமைச்சர்கள் ஆனார்கள். ஆகவே இனியும் காங்கிரஸ் துணை இல்லாமல் யாரும் முதல்வர் ஆகி விட முடியாது.

    பா.ஜ.அரசை அ.தி.மு.க. கை நீட்டி பேச பயப்படுகிறது. அப்படி பேசினால் மறுநாள் நாம் எங்கே கம்பி எண்ண போய்விடுவோமோ.. என்று பயப்படுகிறார்கள்.

    இதனால் தான் மாறிமாறி ஒவ்வொருவரும் பா.ஜ.க காலடியில் விழுந்து கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் துன்புறுத்தி வருகிறது. துப்பாக்கி முனையில் கடத்தி செல்கிறார்கள். சிறை பிடிக்கிறார்கள். கற்களால் வீசி தாக்குகிறார்கள். இதை நிரந்தரமாக போக்க தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேட்டியின்போது மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணை தலைவர் ராஜேஸ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா உள்பட பலர் இருந்தனர்.

    சென்னிமலையில் பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தறிப்பட்டறை ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சென்னிமலையில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிப்பவர் ராணி (வயது 16). பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவரது தந்தையும், தாயும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.

    அவர்கள் தினமும் திருப்பூருக்கு சென்று வேலை பார்த்துவிட்டு சென்னிமலைக்கு வந்து விடுவார்கள். இவர்களது வீட்டின் அருகே ராணியின் தாத்தா வீடு உள்ளது.

    எனவே ராணியை தைரியமாக பெற்றோர் விட்டு செல்வார். இந்த நிலையில் ராணியின் பெற்றோர் வீட்டை வேறு இடத்துக்கு மாற்றினர்.

    எனினும் ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள தோழிகளை ராணி பார்க்க நினைத்தார். எனவே கடந்த 1-ந் தேதி அந்த பகுதிக்கு சென்றார். தோழிகளை சந்தித்து பேசினார்.

    அந்த பகுதியில் ஒரு தறிப்பட்டறை உள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த சந்துரு (22) என்ற வாலிபர் வேலை பார்த்தார். அவரையும் ராணி சந்தித்து பேசினார்.

    அப்போது ராணிக்கு சந்துரு பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் ராணி நோட்டு வாங்கியதாகவும் தெரிகிறது. பின்னர் தோழிகளுடன் அந்த பகுதியில் ராணி நடமாடினார்.

    இந்த நிலையில் ராணியை ஆசை வார்த்தை கூறி சந்துரு தான் வேலை பார்க்கும் தறிப்பட்டறைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் தறிப்பட்டறையை பூட்டிக்கொண்டு ராணியை சந்துரு பாலியல் பலாத்காரம் செய்தார். சந்துருவின் பிடியில் சிக்கிய ராணி அலறி சத்தமிட்டார்.

    ராணியின் சத்தம் கேட்டு அவரது தாத்தா அங்கு வந்தார். அப்போது தறிப்பட்டறையில் இருந்து சந்துரு வெளியே தப்பி ஓடினார்.

    தறிப்பட்டறைக்குள் நடந்ததை ராணி தனது தாத்தாவிடம் கூறினார். ராணி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் ராணியை பாலியல் பலாத்காரம் செய்த சந்துரு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    தற்போது சந்துரு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ராணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர். செந்தில்குமார். இவரது மனைவி பிரபா.

    இவர்களது மகள் தீபிகா, மகன் நவீன்குமார். தீபிகா சித்தோட்டில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகா காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரை செந்தில்குமார் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு தீபிகா சிகிச்சை பெற்றார். ஈரோடு, சேலம் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    சிகிச்சை பெற்ற தீபிகா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் தீபிகா திடீரென பரிதாபமாக இறந்தார்.

    சித்தோடு ஆரம்ப சுகா தார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் டாக்டர்கள் இல்லாத காரணத்தால்தான் இது போன்ற உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதேபோல ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஏமம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 22) என்ற பட்டதாரி மாணவரும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

    காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜவுளி நிறுவனத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்த்தனர்.

    இதற்காக உண்ணாவிரதம், கலெக்டரிடம் மனு , ஊர்வலம் என பல்வேறு வகையில் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர். எனினும் ஜி.எஸ்.டி வரிஇந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதை கண்டித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன்(எக்மா) சார்பில் 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ரவிசந்திரன் தெரிவித்தார்.

    அதன்படி நேற்று முதல் ஜவுளி கடைகள், அதன் சார்ந்த நிறுவனங்கள், விசைத்தறிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் குதித்தன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.

    அதே போன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் விசைத்தறிகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன.

    நேற்று ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் இருந்து மேட்டூர் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள், மற்றும் அதன் சார்ந்து நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டிருந்தது.

    இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் ரவிசந்திரன் கூறியதாவது.-

    ஜி.எஸ்.டி.மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும் ஜி.எஸ்.டி.அமலுக்கு வந்து விட்டது.

    இதை கண்டித்து 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்தோம். அதன்படி வேலை நிறுத்த போராட்டம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

    இன்று 2-வது நாளாக எங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் நூற்றுக்கணக்கான ஜவுளி உரிமையாளர்கள், வியாபாரிகள் ஒன்று திரண்டு வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்.

    எங்கள் போராட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் மாவட்டம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.30 வீதம் 6 நாட்களுக்கு சுமார் ரூ.180 வரை இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்களின் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் தினமும் ரூ. 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
    ஈரோடு:

    ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் ஜவுளி நிறுவனங்கள் மிகவும் பாதிப்படையும். எனவே வரியில் இருந்து ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    ஆனால் அருண் ஜெட்லியை சந்திக்க முடியாததால் ஜவுளி நிறுவனத்தினர் குறிப்பிட்டபடி இன்று (6-ந் தேதி) முதல் தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், ஈரோடு கிளாத் மெர்சன்ட் அசோசியேசன், நூல் வியாபாரிகள் சங்கம், சைசிங்-பேக்டரி உரிமையாளர்கள் சங்கம்,

    வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், கனி மார்க்கெட் தினசரி ஜவுளி சந்தை உள்பட 24-க்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த சங்கங்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, திரு வேங்கிட வீதி, வெங்கடாச்சல வீதி, பிருந்தா வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி, காமராஜ் வீதி, தில்லை நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த வியாபார ஜவுளி கடைகள், ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் இன்று முதல் அடைக்கப்பட்டன. இதனால் இந்த வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

    ஜவுளி சங்கங்களின் உரிமையாளர்கள் இன்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் ஜவுளி நிறுவனங்களை சேர்ந்த திரளான பேர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு மனு கொடுத்தனர்.

    அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.

    ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டன. இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வர்த்தகம் முடங்கி உள்ளன. தினமும் ரூ. 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.   

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை முதல் 6 நாட்கள் 5 ஆயிரம் ஜவுளி அதன் சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ரூ.180 கோடி வரை வர்த்தகம் மூடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஜி.எஸ்.டி. மூலம் ஜவுளி ரகரங்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம், உண்ணாவிரத போராட்டம்,மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

    இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இதனால் ரூ.90 கோடி வரை வர்த்தகம் இழப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சங்க தலைவர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.-

    ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து மத்திய நிதி அமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுக்க பல முறை நேரம் ஒதுக்கக்கோரியும் அவர்களை கலந்தாலோசிக்க அனுமதி கிடைக்கவில்லை.எனவே ஜவுளி வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் குறைகளை நேரில் தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

    வேறு வழியின்றி நாளை முதல் வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)வரை ஜவுளி மொத்த வணிக நிறுவனங்களை அடைத்தும், விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்தும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

    இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி அதன் சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ரூ.180 கோடி வரை வர்த்தகம் மூடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலியாக ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறினர்.
    ஈரோடு:

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஜவுளி தொழிலுக்கு விதித்த ஜி.எஸ்.டி. வரியை விலக்கி கொள்ள வேண்டும் என ஜவுளி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 3 நாட்கள் அடைக்கப்பட்டன.

    மேலும் ஜவுளி நிறுவனங்களை சேர்ந்த சங்க பிரதிநிதிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முறையிடப் போவதாகவும், நல்ல தீர்வு கிடைக்கும் என கூறினர்.

    மேலும் அப்படி நல்ல தீர்வு கிடைக்காவிலட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

    ஜவுளி விற்பனைக்கு பெயர் போன ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன.

    உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளும் இங்கு ரெடிமேடு ஜவுளி கடைகளை வைத்துள்ளனர். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் தேவையான ரெடிமேடு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட மற்றும் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர் நாடகா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் வந்து சில்லரைக்கும், மொத்தமாகவும் ஜவுளிகளை வாங்கி கொண்டு சென்று தங்கள் ஊர்களில் விற்பனை செய்வார்கள்.

    ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு எதிரொலியாக கடந்த 2 நாட்களாக ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் ஜவுளி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் மிகவும் கவலையுடன் கூறினர்.
    ஈரோடு அருகே இரட்டை கொலை வழக்கில் துப்பாக்கி விற்ற வங்கி காவலாளியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    ஈரோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு வசுவப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). இவரது தாய் பாவாயம்மாள் (80). இருவரும் கடந்த மாதம் 29-ம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கில், பழனிச்சாமியின் மனைவி கோமதிதேவி (56), மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சொத்துத் தகராறில் இக்கொலை நடைபெற்றதும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியின் காவலாளியான ஈரோடு வெள்ளோடு கேகே வலசைச் சேர்ந்த சின்னசாமி மகன் மூர்த்தி (46) என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து, மூர்த்தியைக் கைது செய்த போலீஸாரிடம் கோபி, நம்பியூரைச் சேர்ந்த தனது மாமா குழந்தைவேல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடம் இத்துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

    இந்நிலையில் வங்கிக்கு அடிக்கடி வந்து சென்ற சந்தோஷ்குமார், கள்ளத்துப்பாக்கி குறித்து விசாரித்ததால் பணத்துக்காக துப்பாக்கியை விற்றதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூர்த்தியை சித்தோடு போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.
    பத்மாவை ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பது சட்ட விரோதம். அவரை போலீசார் என் கவுண்டர் நடந்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று பத்மாவின் கணவர் கூறி உள்ளார்.
    ஈரோடு:

    பெண் மாவோயிஸ்ட் பத்மாவின் கணவர் விவேக். இவரும் மாவோயிஸ்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்டார்.

    5 ஆண்டு சிறைத் தண்டனைக்குப்பின் சமீபத்தில் விவேக் விடுதலையானார். பத்மா கைதான தகவலை அவரிடம் போலீசார் தெரிவித்தனர். அப்போது விவேக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்மாவை ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பது சட்ட விரோதம். அவரை போலீசார் லாக்கப்பில் அடைத்து சித்ரவதைப்படுத்துவார்கள் என்று அஞ்சுகிறேன். இல்லையெனில் என் கவுண்டர் நடந்ததாக கூறி சுட்டுக் கொன்று விடுவார்கள். சட்டப்படி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புரட்சிகர ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் வரவரராவ் கூறுகையில், பத்மாவை எர்ணாகுளத்தில் இருந்து ஈரோடு வந்தபோது ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கைதான விதம் கடத்தப்பட்டது போல் உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை உடனே சட்டப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றார்.


    ஈரோட்டில் ரெயிலில் வந்த பெண் மாவோயிஸ்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பல வழக்குகள் உள்ளது.
    ஈரோடு:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் காக்கர்லா பத்மா (45). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவர் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு ஆயுதங்களும் சப்ளை செய்தார்.

    இதை கண்டு பிடித்த தர்மபுரி மாவட்ட போலீசார் கடந்த 2002-ம் ஆண்டு பத்மாவை கூட்டாளிகளுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    3 ஆண்டுகள் வரை ஜெயிலில் இருந்த பத்மா 2005-ம் ஆண்டு விடுதலையானார். அதன் பிறகு பெண்கள் உரிமைக்கான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர்ந்து மாவோயிஸ்ட் கொள்கைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து பத்மா மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் பத்மா மீது ஆந்திர மாநிலத்திலும் பல வழக்குகள் உள்ளது. இதற்காக ஆந்திர போலீசாரும் பத்மாவை தேடி வந்தனர். இதற்கிடையே பத்மா கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயிலில் வருவதாக ஆந்திர உளவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை உறுதி செய்து கொண்ட ஆந்திர உளவு பிரிவு போலீசார் 20 பேர் கோவை, ஈரோடு உள்பட வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் ரகசியமாக பத்மா வரும் ரெயிலை கண்காணித்து காத்து இருந்தனர்.

    ஈரோடு அருகே சிக்னலுக்காக ரெயில் நின்றபோது பத்மா இருந்த பெட்டியில் ஆந்திர போலீசார் அதிரடியாக ஏறி சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர்.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீசாரிடம் கேட்ட போது இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தனர்.

    கைதான பத்மா மாவோயிஸ்ட் இயக்கத்தில் புரட்சிகர பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர். இது தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பல வழக்குகள் உள்ளது.

    பவானி ஆற்றில் குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவதால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட விவசாயத்துக்கும் குடிநீர் ஆதராமாகவும் உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடிவரை கூடியது. இதையொட்டி பவானி ஆற்றில் குடிநீருக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

    நேற்று 930 கனஅடி வீதம் வந்த தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 182 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அதேசமயம் பவானி ஆற்றில் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 42.81 அடியாக இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மழை பெய்தால் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும்.
    வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மாயமானார். சிறுவன் எப்படி மாயமானான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் பிர்லா. இவரது மகன் நிதிஸ் பாலன் (வயது 3½).

    சிறுவன் நிதிஸ் பாலன் தனது வீட்டின் முன் நின்று கொண்டு விளையாடி கொண்டிருந்தான். திடீரென மாயமாகி விட்டான். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கண்ணீர் மல்க கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாயமான போது சிறுவன் நிதிஸ் பாலன் வெள்ளை மஞ்சள் கலரில் கோடுபோட்ட பனியனும், மரக்கலரில் ஜட்டியும் அணிந்திருந்தான்.

    2½ அடி உயரம் கொண்ட அவனது முகத்தின் தாடையில் காயத்தழும்பு உள்ளது. இதே போல் வலது கண் அருகே மூக்கின் பக்கம் காயத் தழும்பு உள்ளது.

    கானாமல் போன அந்த சிறுவன் எப்போதும் தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருப்பானாம். காணாமல் போன அன்று சிறுவன் நிதிஸ் பாலனை ஒரு பெண் அழைத்து கொண்டு சென்றதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதனால் சிறுவனை யாரோ ஒரு பெண் தான் கடத்தி சென்றிருக்க கூடும் என கருதப்படுகிறது.

    கடத்தி சென்ற பெண் யார்? உள்ளூர் பெண்ணா? வெளியூர் பெண்ணா? எதற்காக சிறுவனை கடத்தி சென்றாள்? என மர்மமாக உள்ளது.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வருகிறார்கள்.

    ×