என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே இரட்டை கொலை: துப்பாக்கியை விற்ற வங்கி காவலாளி ஜெயிலில் அடைப்பு
    X

    ஈரோடு அருகே இரட்டை கொலை: துப்பாக்கியை விற்ற வங்கி காவலாளி ஜெயிலில் அடைப்பு

    ஈரோடு அருகே இரட்டை கொலை வழக்கில் துப்பாக்கி விற்ற வங்கி காவலாளியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    ஈரோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு வசுவப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). இவரது தாய் பாவாயம்மாள் (80). இருவரும் கடந்த மாதம் 29-ம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கில், பழனிச்சாமியின் மனைவி கோமதிதேவி (56), மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சொத்துத் தகராறில் இக்கொலை நடைபெற்றதும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியின் காவலாளியான ஈரோடு வெள்ளோடு கேகே வலசைச் சேர்ந்த சின்னசாமி மகன் மூர்த்தி (46) என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து, மூர்த்தியைக் கைது செய்த போலீஸாரிடம் கோபி, நம்பியூரைச் சேர்ந்த தனது மாமா குழந்தைவேல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடம் இத்துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

    இந்நிலையில் வங்கிக்கு அடிக்கடி வந்து சென்ற சந்தோஷ்குமார், கள்ளத்துப்பாக்கி குறித்து விசாரித்ததால் பணத்துக்காக துப்பாக்கியை விற்றதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூர்த்தியை சித்தோடு போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×