என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி, காசிலிங்க கவுண்டர்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது70). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    பொன்னுசாமி 3 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள்.

    வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். வள்ளியம்மாள் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று வள்ளியம்மாள் அதே பகுதியில் உள்ள பெரிய தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு அந்த பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து வேப்பங் கொட்டையை பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளை கடித்தது. இது குறித்து வள்ளியம்மாள் தனது மகனிடம் தெரிவித்தார்.

    108 ஆம்புலன்சுக்கு மூலம் வள்ளியம்மாளை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை அருகே 19 வயது வாலிபர் 21 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் செல்லாது என கூறிய அதிகாரிகள் 21 வயது தொடங்கியதும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சி, வாவிக்கடை காலனி பகுதியை சேர்ந்த வீரன் என்பவரது மகன் மவுலிதரன் (வயது 19). இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சண்முகம் என்பவரது மகள் புவனேஷ்வரி(21).

    இவர்கள் இருவரும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை என்பதால் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இதையறிந்த இரு வீட்டாரும் நேராக பேசி சமாதானம் செய்து கொண்டனர். அதன் பிறகு சம்பந்தி விருந்து தடல் புடலாக நடந்தது.

    இந்த திருமணம் பற்றி சமூக நலத்துறைக்கு அந்த பகுதியை சேர்ந்த யாரோ 17 வயது சிறுவன் 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தைகள் நல அலுவலர் சுரேஷ் மேற்கொண்ட விசாரணையில் மவுலிதரன் 19 வயது தான் பூர்த்தியானவர் என்பது தெரியவந்தது. ஆனால் இந்திய திருமண சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்வதற்கான ஆணின் வயது 21 என்பதால் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என கூறி அவர்கள் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    இதை மீறி இருவரையும் சேர்த்து வைத்தால் இருவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

    ஆணின் திருமண வயது 21. தற்போது மவுலிதரனுக்கு 19 வயது ஆகிறது. 21 வயது தொடங்கியதும் அவர் தாராளமாக திருமணம் செய்து மண வாழ்க்கையை தொடங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இருவரது வீட்டு பெற்றோரும் திருமண வயது ஆனதும் மீணடும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து காதலர்களை சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளனர்.
    கோபி அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கொள்ளையன் மீண்டும் 2-வது தடவையாக குண்டர் சட்டத்தில் கைதாகிறார்.
    கோபி:

    கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் (வயது 29). இவன் கடந்த மாதம் 12-ந்தேதி கோபி அம்பிகை நகரில் தொழில் அதிபர் பாபு வீட்டில் புகுந்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்தான்.

    மேலும் கோபி பஸ்நிலைய பகுதியில் யுவராஜ் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்தான். மேலும் இவன் மீது பல வழிப்பறி-கொள்ளை வழக்குகளும் உள்ளது.

    கோபி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இம்ரானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு அவன் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

    இதேபோல் மேலும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடாமல் இருக்க இம்ரானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோபி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். எஸ்.பி.யும் மாவட்ட கலெக்டருக்கு அதன்படி பரிந்துரை செய்தார்.

    கலெக்டரும் அவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இம்ரான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

    இம்ரான் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டான். இப்போது மீண்டும் 2-வது தடவையாக குண்டர் சட்டத்தில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஒரு வாரமாக குடிக்க தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது எஸ்.பி.கவுண்டனூர் இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வசதி கிடையாது. போர்வெல் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த தண்ணீர் வெளியூர்களுக்கும் அனுப்பப்படுவதால் எஸ்.பி.கவுண்டனூர் பகுதி மக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைப்பதில்லையாம்.

    இதனால் பக்கத்து தோட்டத்தில் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த போர்வெல் பழுதாகி விட்டதால் ஒரு வாரமாக குடிக்க தண்ணீர் வரவில்லையாம். இதையொட்டி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இதை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க கோரியும் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் எஸ்.பி.கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் பூதப்பாடி- கருவரெட்டியூர் ரோட்டில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையொட்டி பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

    கோபி:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோபியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் தற்போது கேள்விக் குறியாகி விட்டது. காவிரி உரிமை பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறினார்கள். ஆனால் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

    கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்டத்தை அனுப்பி உள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி தரவில்லை. ஆனால் கர்நாடக அரசோ அங்கு அணை கட்ட ஆரம்பித்து விட்டது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடு வாசலில் பல மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் திட்டத்தை கொண்டு வருவோம் என்ற நிலையை பின் பற்றி வருகிறது.

    தமிழ்நாடு என்றால் மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரையாகி விட்டது. மத்திய அரசால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 சதவீதம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். 98 சதவீதம் பேர் தான் மற்ற பாடத்தில் படிக்கிறார்கள்.

    மத்திய அரசிடம் தமிழக அரசுநீட் தேர்வு குறித்து வலியுறுத்தியும் பலன் இல்லாமல் போய் விட்டது. இதற்காக தமிழக அரசை குற்றம் சாட்டவில்லை. மத்திய அரசைத்தான் குற்றம் சாட்டுவேன்.

    ஒவ்வொரு மாநிலமும் தமிழ்நாட்டைதான் வஞ்சித்து வருகிறது. மத்திய அரசுக்கு இது குறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சொல்வது என்ன வென்றால் மத்திய அரசுக்கு என்றும் பயப்பட வேண்டியதில்லை. மாநில அரசை மத்திய அரசு உடனே கலைக்க முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


    நமது உரிமைகளை மத்திய அரசுக்கு எடுத்து கூற வேண்டும். தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக உள்ளனர். தஞ்சையில் அண்ணா நூற்றாண்டு விழா ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட உள்ளது. தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில்லை.

    நீதிக்காக போராடும் எங்களுக்கு சலிப்பே கிடையாது. ஏரி குளங்களில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக தெரிகிறது. இதை கண்டிக்கிறேன். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காயத்துடன் பிணமாக கிடந்த வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக வளாளத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.

    இந்த வங்கியில் உதவியாளராக பணிபுரிந்தவர் தண்டபாணி (வயது 59). 17 வருடமாக அவர் இந்த வங்கியில் பணிபுரிந்தார்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த இவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வங்கியின் அருகே பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. எனவே ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது பற்றி அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த தண்டபாணியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தண்டபாணியின் கன்னம், கால்களில் காயம் காணப்பட்டது. அந்த இடத்தில் ரத்தம் உறைந்தும் கிடந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

    போலீசார் தண்டபாணி கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிவித்தனர். தண்டபாணியின் கன்னம், கால்களில் காயம் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே அது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்டபாணிக்கு குடிப்பழக்கம், போதை மருந்து அருந்தும் பழக்கம் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எனவே அதிக மது, போதை காரணமாக தண்டபாணி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புஞ்சை புளியம்பட்டி அருகே 2 வேன்கள் மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு வேன் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி என்ற இடத்தில் வந்தது.

    அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது அந்த வேனும், சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சை புளியம்பட்டி நோக்கி வந்த மற்றொரு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் 2 வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. கண்ணாடிகள் நொறுங்கின. 2 வேன்களிலும் இருந்த 9 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.

    கோபி ஸ்டாலின்நகரை சேர்ந்த சத்யா (வயது 17), அய்யம்மாள் (45), சுப்பிரமணி (43), தீபக் (16), கோபி குள்ளம் பாளையத்தை சேர்ந்த பெருமாள் (38),

    புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த முரளி (35), யோக நாயகி (21), கோவையை சேர்ந்த சரஸ்வதி (50), செல்வம் (40).

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிடடனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தியூர் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுபாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் விஜயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்.

    இந்த தம்பதியினருக்கு சரவணன்(15), மணிபாரதி(10), என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி(8) என்ற மகளும் உள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சிறுமி திவ்யதர்ஷினிக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையாக காய்ச்சல் அடித்தது. அந்தியூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

    பிறகு சிறுமியை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கிருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள். டெங்குவால் பாதிக்கப்பட்டு 3-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு டெங்கு நோய் தடுப்பு குழுவினர் விரைந்து உள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கைத்தறி பட்டறைகளில் மத்திய கலால்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    ஈரோடு:

    தமிழக அரசு பவானியில் நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஜமுக்காளங்களுக்கு தள்ளுபடி மானியம் வழங்கி வருகிறது.

    கடந்த 1-ந் தேதி மத்திய அரசு அறிவித்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் ஜமக்காளங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி, அந்தியூரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் ஜமக்காள விற்பனையை நிறுத்தி வைத்துள்ளன.

    ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் குழப்பமான சூழலில் ரூ.1.50 கோடி மதிப்பிலான ஜமுக்காளங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளது. பவானி ஜமக்காளம் முற்றிலும் கைத்தறியில் நெசவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    வட மாநிலங்களில் கார்பெட் போன்ற ஜமக்காளம் பவர் லூமில் தயார் செய்யப்படுகிறது.

    எனவே இது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்கம், பவானி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கூட்டமைப்பு, பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, மத்திய கலால்துறை உதவி ஆணையர் பூபால், ஆய்வாளர் காயத்ரி, கண்காணிப்பாளர்கள் முத்துவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் பவானியில் கைத்தறிப் பட்டறைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, கைத்தறியில் நெசவு செய்யப்படும் முறைகள், தறிப்பட்டறைகள், நூல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

    விசைத்தறிக்கும், கைத் தறிக்கும் உள்ள வித்தியாசம், உற்பத்தி வேறுபாடு குறித்தும் விளக்கப்பட்டது.

    பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில்குமார், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலர் சித்தையன், கூட்டுறவு நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்க பாரதி, பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
    பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு, ஜூலை.12-

    பு.புளியம்பட்டி, திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் சலீம். இவரது மகள் பாத்திமா ஜீமானா(வயது17).

    பாத்திமா ஜீமானா அம்மாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் காலை பள்ளிக்கு செல்லும் ஜீமானா மாலை வீட்டுக்கு வந்துவிடுவார்.

    அதே போன்று சம்பவத்தன்றும் வழக்கம் போல் பாத்திமா ஜீமானா வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் பாத்திமா ஜீமானா வீட்டுக்கு வராத தால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் பாத்திமா ஜீமானா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து பாத்திமா ஜீமானா தந்தை சலீம் புளியம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை கண்டுபிடித்து தறுமாறு புகார் கொடுத்தார்.

    மாயமான அன்று பாத்திமா ஜீமானா கருப்பு கலர் லெக்கின்ஸ், பிங்க் கலர் டாப்ஸ், கருப்பு நிற பர்தா அணிந்திருந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட சுகாதாரதுறை அதிகாரி கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    அம்மாபேட்டை அருகே சித்தார் பகுதியில் என்ஜினீயரிங் மாணவர் தினேஷ் குமார், அத்தாணியில் 3-ம் வகுப்பு மாணவி மைனுகா (வயது 8), கவுந்தப்பாடி அருகே 1-ம் வகுப்பு மாணவர் தர்‌ஷன், சித்தோடு ரோஜா நகரை சேர்ந்த தீபிகா (9), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பிரியதர்சினி (17) ஆகியோர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    இப்படி ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி வருவதால் ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ச்சியாக மர்ம காய்ச்சலுக்கு பலதரப்பட்டவர்கள் இறந்து வருவதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் முழு வீச்சில் இறங்கி தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தற்போது கேரள மாநிலத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேரளாவை ஒட்டி உள்ள கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இப்போது டெங்கு காய்ச்சலுடன் ஜிகா வைரசும் ஈரோடு மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது. ஜிகா வைரஸ் நோயை ஏற்படுத்தும் ஒரு வித கொசு மனிதர்களை கடித்தால் அது மூளையை பாதிக்கும் என ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் அதிகாரி ஒருவர் கூறினார்.

    ஜிகா வைரசை பரப்பும் கொசு இங்கு கிடையாது. இது வெளிநாட்டு கொசு வகையை சேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கு இந்த ஜிகா வைரஸ் இருந்தால் அவர்கள் மூலம் நம் நாட்டில் பரவக்கூடும்.

    இதனால்தான் நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை.

    அந்த வைரஸ் நோய் பரவும் வாய்ப்பும் இல்லை. எனினும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தொற்று நோய் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிகா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து விட்டதாகவும் கூறினார்.

    இதனால் பக்கத்து மாவட்டங்களான தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட சுகாதாரதுறை அதிகாரி கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மூலம் ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க ஜவுளி-விசைத்தறி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வ.உ.சி.பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    வாயில் கருப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தனர். இன்று ஜவுளி, விசைத்தறியாளர்களின் ஒரு பிரிவினர் சென்னைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர்.மற்றொரு பிரிவினர் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கைகளை கோர்த்தப்படி அணி வகுத்து வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் இன்று வரை ரூ.150 கோடி வரை வர்த்தகம் முடங்கி உள்ளது. அதே போன்று விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டதால் இன்று வரை ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
    ×