search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "depredation"

    மேலூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர் சந்தைப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் செல்போன் கடை, பழைய இரும்பு கடை, ஒர்க் ஷாப், ஸ்டூடியோ, பெட்டிக்கடை ஆகியவை இயங்கி வருகின்றன.

    இந்த வணிக வளாகத் தில் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ரஜாக் மகன் ஜஹாங்கீர் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

    பாலமுருகன் என்பவர் ஒர்க்ஷாப்கடையும், சந்திரன் என்பவர் பெட்டிக்கடையும், கருப்பையா என்பவர் இரும்பு கடையும் நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வழக்கம் போல் நேற்று இரவு கடைகளை பூட்டி சென்று விட்டு இன்று காலையில் கடை திறக்க வந்தனர். அப்போது பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜஹாங்கீர் கடையில் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. அதேபோல் மற்ற கடைகளிலும் பொருட்கள், கல்லாவில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் தடவியல் நிபுணர்கள் வந்து பரிசோதனை செய்து ஆய்வு செய்தனர்.

    ஒரே வணிக வளாகத்தில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து திருடப்பட்ட சம்பவம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு மேலூர் மெயின் ரோட்டில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடை, பலசரக்கு கடை இன்சூரன்ஸ் கம்பெனி, பெட்டிக்கடை ஆகிய கடைகளிலும் பொருட்கள் திருடு போய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    4 கடைகளிலும் நடந்த கொள்ளை தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரை தாக்கி கூகுள் பே மூலம் பணத்தை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆவடி:

    குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.

    மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர்.

    பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

    கும்பகோணம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் ஏ.டி.எம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று விடியற்காலை 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம் உள்ள அறைக்குள் நுழைந்து தான் கொண்டு வந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளான்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா மூலம் சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா அலுவலகத்தில் உள்ள திரையில் தெரிந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த கண்ணன் என்பவர் இதுபற்றி உடனடியாக சென்னை அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வேப்பத்தூர் வங்கி கிளை மேலாளர் ராம்பிரசாத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராம்பிரசாத் திருவிடைமருதூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் வங்கி கிளை மேலாளர் ராம்பிரசாத் மற்றும் வங்கி அலுவலர்கள் அனைவரும் வேப்பத்தூர் வங்கி ஏ.டி.எம்முக்கு திரண்டு சென்றுள்ளனர். இதைப்பார்த்த மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது ஏ.டி.எம்மை கடப்பாரையால் உடைக்க முயற்சி நடந்துள்ளதும், ஆனால் அதனை உடைக்க முடியாததால் பணம் கொள்ளை போகவில்லை என்பதும் தெரியவந்தது.

    தகவலறிந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஏ.டி.எம் மையத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    நாட்டறம்பள்ளி அருகே கோவிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் துரத்திய போது தவறி கிணற்றில் விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியில் பாரத கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். பொதுமக்கள் திருடனை துரத்தினர்.

    பொதுமக்கள் துரத்திய போது கிணற்றில் விழுந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் திருடன் தவறி விழுந்தான். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கொள்ளையனுக்கு காயம் ஏற்படவில்லை.

     நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தான்.பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த கோழி என்கின்ற மோகன் (வயது45) என்பது தெரியவந்தது. அவர் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆத்தூர் குப்பம், கல்நார்சம்பேட்டை, அக்ராகரம், வெலக்கல்நத்தம், பச்சூர், புதுப்பேட்டை, மல்லப்பள்ளி உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடமிருந்து உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    மண்ணச்சநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர்அருகே சமயபுரம் ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 64).கூலி தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள உறவினரை பார்க்க சென்று விட்டார். பின்னர் தீபாவளியைபண்டிகையை கொண்டாட நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கோபால் மண்ணச்சநல்லூர் போலீசில்புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்ததுடன் உண்டியலையும் தூக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்து.

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று இரவு இவர் பூஜை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

    மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் மாயமாகி இருந்தது.

    நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்ததுடன் உண்டியலையும் தூக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்து.

    இதுகுறித்து அவர் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன உண்டியலில் ரூ 20 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.

    அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.

    மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.

    பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் மயிலம் அருகே உள்ள ஆலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் (47), சக்திவேல், விழுப்புரத்தை சேர்ந்த சோழன் ஆகியோர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக்கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அன்று வசூலான பணத்தை டாஸ்மாக் கடையில் வைத்து சங்கர் மற்றும் சோழன் ஆகிய 2 பேரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த கடைக்கு 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக்கடைக்குள் சென்று பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கர், சோழனிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். உடனே இதில் பயந்து போன சோழன் தன்கையில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அந்த பணத்தை மர்ம கும்பல் எடுத்துக் கொண்டது.

    பின்னர் சங்கர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தரும்படி கேட்டு மர்ம கும்பல் மிரட்டியது. ஆனால் சங்கர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டி சென்று மடக்கிபிடித்து சங்கரின் கையில் அரிவாளால் வெட்டினர்.

    அப்போது டாஸ்மாக் கடை முடிந்து பணத்தை எடுத்து செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் போலீசார் சந்தைமேடு பகுதியில் உள்ள டாஸ் மாக்கடைக்கு வந்தனர். அப்போது டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை தாக்கி பணத்தை பறிக்க முயன்ற மர்ம மனிதர்கள் போலீசார் வருவதை கண்டதும் கொள்ளையடித்த ரூ.43 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த சங்கரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மயிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் பால் சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை வெட்டிவிட்டு மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனியில் மில் காவலாளியிடம் செல்போன்- பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து(வயது74). இவர் தேனி தொழிற்பேட்டையில் உள்ள பருப்பு மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தேனி-கருவேலநாயக்கன்பட்டி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சின்னமுத்துவை மிரட்டினர்.

    மேலும் அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.800 பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி நகர் மற்றும் புறநகர் பகுதியில் தனியாக செல்லும் நபர்களிடம் நகை-பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. மேலும் நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட பீதி

    கோவை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 2 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டது.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 2 ஐம்பொன் சாமி சிலைகள் கிடந்தன. இதைப் பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி போலீசார் 2 சிலைகளையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் இந்த சிலைகள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை அடுத்த கள்ளப்பாளையத்தில் கடந்த மாதம் வேணு கோபால சாமி கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வேணுகோபாலசாமி- சத்யபாமா ஆகிய ஐம்பொன் சிலைகள் என்பது தெரிய வந்தது.

    ஐம்பொன் சிலைகள் திருட்டு தொடர்பாக திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சிலைகளை கருமத்தம்பட்டி அருகே சாலையில் வீசிச் சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி அருகே ஏடிஎம் பணம் 1.20 கோடி கொள்ளை போனதாக கூறப்பட்ட புகாரில் பணத்தை கொண்டு சென்ற பாதுகாப்பு ஊழியர்களே அதனை திருடி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. #AtmMoneyRobbery

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

    நேற்று சிவங்கையைச் சேர்ந்த அன்பு (வயது28), திருப்பாலைக்குடி வீரபாண்டி (54), இளையான்குடியைச் சேர்ந்த குருபாண்டி (22) மற்றும் சத்திரக்குடியைச் சேர்ந்த டிரைவர் கபிலன் (23) ஆகியோர் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்ப ரூ.1 கோடியே 60 லட்சத்தை கொண்டு சென்றனர்.

    இதில் ரூ.40 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பிய அவர்கள் மீதம் உள்ள பணத்தை சாயல்குடி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பாதுகாப்பு வேனில் சென்றனர்.

    கடலாடி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் வேன் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும், அப்போது மர்ம நபர்கள் வேனில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சத்தை திருடிக்கொண்டு சென்றதாக பணத்தை கொண்டு சென்ற 4 ஊழியர்களும் சாயல்குடி போலீசில் புகார் தெரிவித்தனர்.


    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் போலீசார் 4 ஊழியர்களையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து 4 பேரையும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேனை கவிழ்த்து விட்டு பணத்தை இவர்களே எடுத்துக் கொண்டு திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அன்பு, வீரபாண்டி, கபிலன், குருபாண்டி ஆகிய 4 பேரையும கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.32 லட்சத்தை கைப்பற்றினர். மீதமுள்ள பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AtmMoneyRobbery

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பெண்களை கட்டிப்போட்டு மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது 45). இவருக்கு சத்யராஜ் என்ற மகனும், தனலட்சுமி (25) என்ற மகளும் உள்ளனர்.

    சத்யராஜிக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி சுகுணா (26) இவர்கள் அனைவரும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் ஏழுமலை (45) என்பவரும் விவசாய வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணியளவில் அவர்கள் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது 5 வாலிபர்கள் அங்கு திடீரென்று வந்தனர். அவர்களில் 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

    உடனே அவர்கள் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    பின்பு அவர்கள் சத்யராஜ், சுகுணா, தனலட்சுமி, கண்ணகி, ஏழுமலை ஆகியோரை கை-கால்களை கட்டினர். பின்பு அவர்கள் சுகுணா, தனலட்சுமி கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கம்மலை பறித்தனர். அப்போது ஏழுமலையும் கண்ணகியும் கூச்சல் போட்டு அலறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏழுமலையையும், கண்ணகியையும் கட்டையால் தலையில் தாக்கினர். இதில் அவர்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது சுகுணா மறைத்து வைத்து இருந்த செல்போனில் உறவினர்களுக்கு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். இதை அறிந்ததும் உறவினர்கள் பாண்டியன், கண்ணன் ஆகியோர் காட்டுக்கொட்டாய்க்கு விரைந்து வந்தனர்.

    இதை பார்த்ததும் வீட்டிற்கு வெளியே நின்ற 2 கொள்ளையர்களும் உஷார் அடைந்து பாண்டியன், கண்ணன் ஆகியோரையும் தாக்கி கயிற்றால் கட்டினர். மேலும் அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.

    பின்பு கொள்ளையர்கள் அனைவரும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரத்தையும், 3 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×