search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை
    X

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் மயிலம் அருகே உள்ள ஆலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் (47), சக்திவேல், விழுப்புரத்தை சேர்ந்த சோழன் ஆகியோர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக்கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அன்று வசூலான பணத்தை டாஸ்மாக் கடையில் வைத்து சங்கர் மற்றும் சோழன் ஆகிய 2 பேரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த கடைக்கு 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக்கடைக்குள் சென்று பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கர், சோழனிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். உடனே இதில் பயந்து போன சோழன் தன்கையில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அந்த பணத்தை மர்ம கும்பல் எடுத்துக் கொண்டது.

    பின்னர் சங்கர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தரும்படி கேட்டு மர்ம கும்பல் மிரட்டியது. ஆனால் சங்கர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டி சென்று மடக்கிபிடித்து சங்கரின் கையில் அரிவாளால் வெட்டினர்.

    அப்போது டாஸ்மாக் கடை முடிந்து பணத்தை எடுத்து செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் போலீசார் சந்தைமேடு பகுதியில் உள்ள டாஸ் மாக்கடைக்கு வந்தனர். அப்போது டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை தாக்கி பணத்தை பறிக்க முயன்ற மர்ம மனிதர்கள் போலீசார் வருவதை கண்டதும் கொள்ளையடித்த ரூ.43 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த சங்கரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மயிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் பால் சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை வெட்டிவிட்டு மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×