search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர் உடைக்க முயலும் காட்சி
    X
    ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர் உடைக்க முயலும் காட்சி

    கும்பகோணம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    கும்பகோணம் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் ஏ.டி.எம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று விடியற்காலை 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம் உள்ள அறைக்குள் நுழைந்து தான் கொண்டு வந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளான்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா மூலம் சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா அலுவலகத்தில் உள்ள திரையில் தெரிந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த கண்ணன் என்பவர் இதுபற்றி உடனடியாக சென்னை அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வேப்பத்தூர் வங்கி கிளை மேலாளர் ராம்பிரசாத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராம்பிரசாத் திருவிடைமருதூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் வங்கி கிளை மேலாளர் ராம்பிரசாத் மற்றும் வங்கி அலுவலர்கள் அனைவரும் வேப்பத்தூர் வங்கி ஏ.டி.எம்முக்கு திரண்டு சென்றுள்ளனர். இதைப்பார்த்த மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது ஏ.டி.எம்மை கடப்பாரையால் உடைக்க முயற்சி நடந்துள்ளதும், ஆனால் அதனை உடைக்க முடியாததால் பணம் கொள்ளை போகவில்லை என்பதும் தெரியவந்தது.

    தகவலறிந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஏ.டி.எம் மையத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×