search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மறியல்"

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை நேற்று மாலை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனை அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறி ஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். திடீர் சாலை மறியலால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
    • பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம், சுரங்கநடைபாதை வசதிகள் இல்லை. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடைமேடைகளுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்மோதி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிபெருக்கி மற்றும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் பணிக்கு நிலம் எடுப்புக்கான தடை நீக்கப்பட்டது.


    இந்த பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் அங்கு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. கட்டி முடிக்காமல் பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து. இதுவரை ரூ.38 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியை முழுமையாக செய்வதற்கும், நில எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரைகள் வழங்கிய நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

    எனவே கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போதும், இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது"வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சுரங்கப்பாதை சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    • பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் காமராஜர் நகர் பெரியாம்பட்டி, புல்லுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் புள்ளுக்குறிச்சி, காமராஜர்நகர், பெரியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாதத்திற்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இது மட்டும் இல்லாமல் உள்ளூரில் வழங்கப்படும் உப்பு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை.

    பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஊராட்சி , மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறியிட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை .

    இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்து வந்த காமராஜர் நகர் ,புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் காலி குடும்பங்களுடன் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் இன்று காலை குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர் .

    சாலை மறியல் ஈடுபட்டு வந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் உதயசங்கர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    • அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அளவுமயான வசதி இல்லை. மேலும் சிலர் மயான பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இப்பகுதியில் 4 சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் 4 சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இரு பகுதிகளிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், கோசணம் ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் கோபி நம்பியூர் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    • குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    • மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் குத்தியாலத்தூர் பஞ்சாயத்து மற்றும் திங்களூர் பஞ்சாயத்தை கொண்டு கடம்பூர் பகுதியை இரண்டாகப் பிரித்து கிராமங்கள் 2 பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்நிலையில் திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர் எனும் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒன்றறை மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கதுபஸ்வண்ணபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து சத்தியமங்கலத்தில் இருந்து தேர்மாளம் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் திங்களூர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
    • சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

    தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×