என் மலர்
ஈரோடு
கோபி அருகே உள்ள வடுகப்பாளையம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 46). ஆடிட்டராக உள்ளார்.
நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி ஆடிட்டர் பழனிச்சாமி தனது மனைவி கவுசல்யா, குழந்தைகளுடன் பெருந்துறையில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் மட்டும் திரும்பி வீட்டுக்கு வந்தார். மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றார்.
இந்த நிலையில் அவரது மனைவி கவுசல்யா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது.பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 16½ பவுன் நகை மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இது குறித்து கோபி போலீசில் கவுசல்யா புகார் செய்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தியூர், பவானியில் இதுவரை 12 பேர் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பவுனாள். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 12 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரது ரத்த மாதிரி எடுத்து சோதனையிட்டபோது டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆனால் காய்ச்சல் குணம் ஆகாததால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா ஆலோசனை கூட்டம் தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தீரன் சின்னமலை நினைவுநாள் குறித்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும் இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடப்பதுபோல் ஈரோடு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடக்கும்.
தமிழ்நாட்டில் புரட்சி தலைவியின் அரசு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக நடந்து வருகிறது. நீட் தேர்வில் தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அமைச்சர்களும் டெல்லி சென்று மத்திய மந்திரிகளையும் பிரதமரையும் சந்தித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
எனினும் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திக்கும் வகையில் எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாணவர்களை தயார்படுத்தி வருகிறோம்.
மலைப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதை பரிசீலித்து அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. அணிகள் இணைய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஊட்டிமலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததையொட்டி பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியது. அணைக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஊட்டி மலையில் தற்போது மழை பெய்வது நின்றுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் படிப்படியாக குறைந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1279 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 50.55அடியாக இருந்தது.
இதில் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 200 கனஅடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் இன்னும் இரண்டொரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெருந்துறை மருத்துவ கல்லூரி பவானி அரசு மருத்துவமனை பவானி நகராட்சி ஆகியவை இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை நடத்தியது. முகாமை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் பொது மருத்துவம், கண், மூக்கு, தொண்டை, சிகிச்சை பல் மருத்துவம், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை சிறுநீரில் சர்க்கரை அளவு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பொது மக்களிடம் அமைச்சர் பேசும் போது, ‘‘பவானியில் உள்ள நகராட்சி ஊராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு வைரஸ் காய்ச்சல் போன்ற வகைகள் அதிக அளவில் குறைந்து விட்டது. போதிய மருத்துவ வசதிகள் உள்ளது. யாரும் கவலைபட வேண்டாம்’’ என தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் பிரபாகர், நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண ராஜ், ஒன்றியகுழு தலைவர் தங்கவேலு, அச்சுக்கூட தலைவர் சித்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபி:
கோபி பஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்களுடைய நோய்களை தடுப்பதற்காக சுகாதார துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவிற்கு நோய்களை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்துகிறது,
கோபியில் 7 நாட்கள் பஸ் நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கப்படவுள்ளது. இதை நோய் இல்லாதவர்களும் வாங்கி குடிக்கலாம். மேலும் அரசு மருத்துமனைகளிலும் இந்த கசாயம் கிடைக்கிறது.
அரசு மட்டும் தான் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. சேவை சங்கங்களும் முன் வந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை விலக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி அரசு பள்ளிகளில் பொது தேர்வுகளை மாணவ மாணவிகள் சந்திக்கும் அளவிற்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ஆசிரியிர்களுக்கு ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படும்.
தமிழகத்தில் 250 பள்ளிகளில் தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசியரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலமாக தேர்வு செய்த பிறகு நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து பற்றி கேட்டபோது, ‘‘கமல்ஹாசன் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை‘‘ என்றார்.
புனித நதிகளின் ஓரம் தங்கள் முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு பிடித்தமான உணவும் பொருட்களும் படைத்து வழிபடுவார்கள். இப்படி வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் அருள் கிடைத்து வாழ்வில் எந்தவித தொந்தரவும் ஏற்படாமல் வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதிகம்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறை மிகவும் விஷேசமான வழிபாட்டு தலம் ஆகும். காவிரி, பவானி, அமுத நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமாகவும் சங்கமேஸ்வரன் கோவில் அமைந்த புண்ணிய தலமாகவும் இது உள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதே போல் இன்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 5 மணியில் இருந்தே உள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
பக்கத்து மாவட்டங் களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறையில் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர்.

இவர்கள் பவானி கூடுதுறையில் இறங்கி புனித நீராடி புதிய துண்டு அணிந்து தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களை வேண்டி அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து பிண்டம் வைத்து மனமுருகி வழிபட்டனர். பிறகு பொருட்களை ஆற்றில் கரைத்து நீராடினர்.
கூடுதுறையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஆற்றின் மைய பகுதிக்கு சென்று பக்தர்கள் நீராடினர். மையப்பகுதியில் சேறும்,சகதியும் மேலும்ஆழமும் அதிகம் உள்ளதால் ஆழமான பகுதிக்கு போய் விட வேண்டாம் என பொது மக்களையும், பக்தர்களையும் ஒலி பெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
வழக்கம் போல் பவானி கூடுதுறையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆற்றின் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்லக் கூடும் என்பதால் பவானி, அந்தியூர் மற்றும் ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் ரோந்து பணியில் சென்று பாதுகாப்பு பணியை பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பி.கே.பி.தோட்டம் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தான தென்னை மரத்தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை அம்மாபேட்டை அடுத்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த சேட் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில் சில தென்னை மரங்களை அறுக்க முடிவு செய்தார்.
இன்று அதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அந்த தென்னை தோப்பையொட்டி அம்மாபேட்டை- செங்கோடு செல்லும் சாலை உள்ளது.
தென்னை மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்ட போது சுமார் 50 அடி நீளமுள்ள ஒரு தென்னை மரத்தை அறுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செங்காடு ரோட்டில் பொட்டில் வந்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த பூசாரி மாரியப்பன்(வயது55) என்பவர் தலை மீது தென்னை மரம் விழுந்தது.
இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மாரியப்பன் மகன் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இன்று ஊருக்கு வந்த தனது மகனை மொபட்டில் ஏற்றி கொண்டு வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியிலேயே இறந்துள்ளார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் 4-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் பாலு. இவர் குடிநீர் வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.
அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் ஒருவர் தனது பகுதியில் ஒரு இடத்தில் தண்ணீர் கசிவு உள்ளது அதை சரி செய்யும்படி துப்புரவு பணியாளர் பாலுவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அந்த அ.தி.மு.க. பிரமுகர் பாலுவை தகாத வார்த்தையால் பேசியும், சாதி பெயரை கூறி திட்டி மிரட்டலும் விடுத்தாராம்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லையாம்.
இதை கண்டித்தும், சாதி பெயரை கூறி திட்டிய அ.தி.மு.க.பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் காசிபாளையம் மண்டல அலுவலத்தில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இன்று காலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் திருப்தி அடையாத துப்புரவு பணியாளர்கள் மூலப்பாளையம் ரவுண்டானாவில் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
சாலைமறியல் நடத்தியவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 20 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு ஈரோடு சென்று விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கரை அவர் நடத்தும் ஓட்டல் கடை அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அந்த பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீரமணி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். முன்னாள் அமைச்சரான இவர் தினகரன் அணியில் உள்ளார்.
ஈரோடு மாவட்டத்துக்கு 2 தடவை முதல்-அமைச்சர் எடப்பாடி வந்து விழாவில் கலந்து கொண்டபோதும் அந்த 2 தடவையும் முதல்வர் கலந்து கொண்ட விழாவை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. புறக்கணித்து விட்டார். அதே சமயம் தோப்பு வெங்கடாச்சலம் தனது தொகுதியில்தான் இருந்துள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘நான் தவிர்க்க முடியாத வேறு ஒரு உள்ளூர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததால் பங்கேற்கவில்லை’’ என்று கூறி சமாளித்தார்.
மேலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெருந்துறை தொகுதி முன்மாதிரி தொகுதியாக மாறி இருக்கும். வளர்ச்சி திட்ட பணிகளும் நடந்திருக்கும். இப்போது எதுவும் நடக்கவில்லை. எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று வெளிப்படையாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சாடினார்.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தனது சட்டபேரவை அவைக்குழு உறுப்பினர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
இதுபற்றி இன்று அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என் தொகுதியான பெருந்துறை தொகுதியை முதல் அமைச்சரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மாவட்ட அமைச்சர்களும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து புறக்கணித்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன். வேறு கருத்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை’’ என்று கூறி முடித்துக் கொண்டார்.
தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார். மேலும் கோபி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இதனால் தனக்கும் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டு இருந்தார். விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேறும் பொறுமையாக இருங்கள் என்று முதல்வர் கூறி இருந்தாராம்.
ஆனால் காலம் கடந்து போய் கொண்டிருந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பை காட்டவே அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதன், விலங்குகள் தாவரங்கள் எல்லா உயிரினங்களுக்கும் நீர் மிகவும் அவசியம் தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர் பங்கீடு, நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படவில்லை. காவிரி தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
80 விழுக்காடு மக்களுக்கு குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டு காவிரி வரலாற்றில் இந்தாண்டுதான் நீர் குறைவாக உள்ளது. எனவே காவிரியில் நாம் இழந்த உரிமையயை மீட்க பா.ம.க. சார்பில் இந்த மாதம் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடக்க உள்ளது.
இந்த பிரசார பயணம் ஒகேனக்கல்லில் தொடங்கி பூம்புகாரில் நிறைவடைகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.முறையில் இதுவரை வரியே விதிக்கப்படாத 550 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கருத்து கூறுவது அனைத்து குடிமகன்களின் கடமை. இந்த விஷயத்தில் தனது கருத்தை பதிவு செய்த கமலஹாசனை அமைச்சர்கள் மிரட்டும் தொனியில் பேசியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.






