என் மலர்
ஈரோடு
பவானி:
பவானி அருகே உள்ள மைலம்பாடி நாராயணபுரத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). இவர் ஒரு ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்து வருகிறார்.
வீரப்பன் ஒலகடம் மைலம் பாடி ரோட்டில் நாராயணபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் நாட்டில் நேற்று தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
சேலத்தில் நடக்க இருந்த மனித சங்கிலியில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது.
இதில் பங்கேற்க ஸ்டாலின் வந்த போது கோவை கனியூரில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்ததை யொட்டி சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறும் போது, “சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் மறியல் போராட்டத்தால் தி.மு.க.வினர் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த 3 மாவட்டங்களிலும் மனித சங்கிலி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் தேதி அறிவிக்கப்பட்டு மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் நானும் பங்கேற்பேன்” என்று கூறினார்.
இதையொட்டி ஈரோட்டில் விரைவில் நடக்க உள்ள தி.மு.க.மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என ஈரோடு தி.மு.க.நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது.-
சேலம், நாமக்கல்,ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் அடுத்தடுத்து இருப்பதால் 3 மாவட்டங்களில் நடக்கும் மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது உறுதி.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் அண்ணா முழு உருவச்சிலை அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.இதனை மு.க.ஸ்டாலின் மனித சங்கிலி நிகழ்ச்சியின் போது பார்வையிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமலையை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி தங்கவேல் மனைவி விமலா (வயது 27).
விமலாவுக்கு கடந்த 4 நாட்களாகவே காய்ச்சல் அடித்தது. இதையொட்டி அவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டனர். இதையொட்டி டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சையில் இறங்கினர்.
பிறகு அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பவானி அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தான் டெங்கு காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளனர். ஆனால் சத்தியமங்கலத்தில் முதன் முதலாக டெங்கு காய்ச்சலுக்கு ஒரு பெண் பலியாகி இருப்பது அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி அருகே உள்ள கொள்ளுக்காட்டு வலசு காலனியை சேர்ந்தவர் நல்லமுத்து இவரது மகள் நந்தினி (17). இவர் தாமரைபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி நந்தினிக்கு கடந்த ஒரு வாரமாகவே மர்ம காய்ச்சல் இருந்தது. கொடுமுடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நந்தினியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார். ஈரோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருவதையொட்டி தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் பாலமுருகன் கடந்த திங்கட்கிழமை ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழக ஜீப் டிரைவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பாலமுருகன் மனைவி பிரேமா நேற்று மதியம் தனது உறவினர்களிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து எஸ்.பி.சிவக்குமாரிடம் கண்ணீர் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், “என் கணவர் சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டுள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அவரும் 40 ஆயிரம் கொடுத்துள்ளார் ஆனால் என் கணவரை ஜீப் டிரைவர் பணியில் இருந்து பஸ் டிரைவராக மாற்றி விட்டனர். இது குறித்து அவர் மீண்டும் கேட்டபோது மேலும் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால்தான் என் கணவர் மனம் உடைந்து ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் பிரேமாவிடம், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்.. என்று உறுதி கூறினார்.
இதன்படி அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ரெயில்வே போலீசாரின் விசாரணை இன்று தொடங்கியது. ரெயில்வே போலீசார் கூறும்போது “எங்களுக்கு விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து நாங்கள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளோம்” என்று கூறினர்.
இதை தொடர்ந்து ஜீப் டிரைவர் பாலமுருகன் தற்கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும் என தெரிகிறது.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒருவித பீதி-பயத்தில் உள்ளனர்.
அந்தியூர்:
தர்மபுரி மாவட்டம் வாசாத்தி மலை கிராம பெண்கள் 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்டதாக போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் 215 பேரை கோர்ட்டு குற்றவாளிகள் என உத்தரவிட்டது.
அவர்களுக்கு ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த வகையில் தண்டனை பெற்றவர்களில் தற்போது அந்தியூர் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.
வாசாத்தி சம்பவம் நடந்தபோது சுப்பிரமணி தர்மபுரியில் சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்தார். 3 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வருகிற 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
அரசு பணியில் உள்ள ஒருவர் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவருக்கு பணி ஓய்வு ஆணை வழங்க முடியாது.
எனவே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதற்காக உத்தரவை சுப்பிரமணியிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் வழங்கினார்.
பணி ஓய்வு பெற இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:
பவானியில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சார்பில் மாலை விழிப்புணர்வு பிரச்சார பேரணியும், இரவு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
எனவே இக்கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கோபால் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மீன்வளத் துறையின் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பவானிசாகரில் உள்ள நன்னீர் உயிரின ஆராய்ச்சி நிலையம் மீன் வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு நுண் மீன் குஞ்சு உற்பத்தி, மீன் குஞ்சு வளர்த்தெடுத்தல், மீன்வள மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையம் மாநிலத்திலேயே மீன் குஞ்சு உற்பத்தியில் முன்னோடி மையமாக செயல்பட்டு வருகிறது. பவானிசாகரில் மூன்று வெவ்வெறு இடங்களில் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு புங்கார் மீன் பண்ணை 19.60 ஹெக்டேர் பரப்பளவிலும், பழைய மீன் பண்ணை 1.40 ஹெக்டேர் பரப்பளவிலும், தேசிய மீன் விதைப்பண்ணை 10.00 ஹெக்டேர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
புங்கார் மீன்பண்ணையில் சினை மீன்கள் சினை மீன் குளங்களில் வைத்து பராமரிக்கப்பட்டும், நர்சரி குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பழைய மீன்பண்ணையில் நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பணியும், நர்சரி குளங்களில் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தேசிய மீன்விதைப் பண்ணையில் நுண்மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழைய மீன்பண்ணை மற்றும் புங்கார் மீன்பண்ணையில் மீன்வள மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.90.23 கோடி மதிப்பீட்டில் நுண் மீன் குஞ்சுகளும், ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் இள மீன் குஞ்சுகளும், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் விரலளவு மீன் குஞ்சுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.17.80 லட்சம் மதிப்பீட்டில் தரமான சினை மீன்களை உற்பத்தி செய்தல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ரூ.11.63 லட்சம் மதிப்பீட்டில் தாய் மீன்களுக்கு மின்னணு குறியீடு மூலம் அடையாளமிடுதல் தொடர்பான ஆராய்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.5.05 கோடி திட்ட மதிப்பீட்டில் தேசிய மீன் விதைப்பண்ணையில் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் புதுப்பிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டும், ரூ.44.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பழைய மீன் பண்ணையில் 2 சீன மீன் குஞ்சு உற்பத்தி பொரிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.9.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புங்கார் மீன் பண்ணையில் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.4.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பழைய மீன் பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ஆகியவை புதிதாக கட்டப்பட்டும், ரூ.4.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய மீன்விதைப் பண்ணையில் மீன்வளர்ப்பு குளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ரூ.3.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய மீன் விதைப்பண்ணையில் மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் மூலம் இந்த நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 1,700 லட்சம் நுண் மீன் குஞ்சு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு 487 டன் அளவிற்கு மீன்பிடிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிலையங்களில் 180 லட்சம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் ரோடு காமராஜர் நகரில் பின்புறம் வசித்தவர் குமார் என்கிற குமாரசாமி (வயது 35).வாடகை கார் டிரைவர்.
இவரது மனைவி வளர்மதி (35). இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்தவர். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வளர்மதியும், குமாரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் வசந்த் என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் குமாருக்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
அதேபோல நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வளர்மதி அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து குமாரை தாக்கினார்.
இதில் அதே இடத்தில் குமார் பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் வளர்மதி அங்கிருந்து ஓடி தலைமறைவானார்.
தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து வளர்மதியை தேடி வந்தனர். இந்த நிலையில் வளர்மதி பவானி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இது வளர்மதிக்கு தெரியவந்தது. இதன் காரணமாகவே 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் ஆதாரமாகவும் விளங்கி வருவது பவானிசாகர் அணையாகும்.
பருவ மழைகள் பொய்த்ததால் பவானிசாகர் அணையில் இருந்து விவசாயத்துக்காக திறந்துவிடும் உயிர் நீர் கடந்த வருடம் திறக்கப்படவில்லை. அதே போன்று இந்த வருடமும் இது வரை உயிர் நீர் திறக்கவில்லை.
கடந்த வாரம் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு 8 ஆயிரம் கனஅடி வரை நீர் வந்தது.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 6 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை.
நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 4 நாட்களுக்கு முன்பு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு 704 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 50.70 அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றுக்கு 190 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தியூர், பவானியில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்த பவுனாள் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) டெங்கு காய்ச்சல் பாதித்து பலியானார்.
இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இதனால் அந்தியூர், பவானியில் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆனது.
இந்த நிலையில் பவானி அருகே ஒரு இளம்பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். பவானி தேவபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மகள் மைதிலி (18) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இன்று காலை காய்ச்சல் அதிகமாகி உடல் நிலை மோசமடைந்து இறந்தார். அந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடே காய்ச்சல் பரவ காரணமாகியுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
கோபி அருகே உள்ள வடுகப்பாளையம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 46). ஆடிட்டராக உள்ளார்.
நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி ஆடிட்டர் பழனிச்சாமி தனது மனைவி கவுசல்யா, குழந்தைகளுடன் பெருந்துறையில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் மட்டும் திரும்பி வீட்டுக்கு வந்தார். மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றார்.
இந்த நிலையில் அவரது மனைவி கவுசல்யா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது.பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 16½ பவுன் நகை மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இது குறித்து கோபி போலீசில் கவுசல்யா புகார் செய்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தியூர், பவானியில் இதுவரை 12 பேர் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பவுனாள். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 12 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரது ரத்த மாதிரி எடுத்து சோதனையிட்டபோது டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆனால் காய்ச்சல் குணம் ஆகாததால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






