என் மலர்
ஈரோடு
ஈரோடு நாதகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 58). இவரது மகள் சுசீலா (40), மகன் குழந்தை வேலு (37).
கண்ணம்மாள் தனது மகன் குழந்தைவேலுவுக்கு 1 ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி வைத்தார். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள சில இடங்களை தனக்கு எழுதி தருமாறு கண்ணம்மாளிடம் மகள் சுசீலா கேட்டார்.
இதற்கு கண்ணம்மாள் மறுத்ததால் அவர்களுக்குள் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-8-2016 அன்று கண்ணம்மாள் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு சுசீலா வந்தார். தனக்கு திருப்பூரில் உள்ள இடங்களை எழுதி தருமாறு மீண்டும் கேட்டார். இதனால் கண்ணம்மாளுக்கும், சுசீலாவுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது.
கண்ணம்மாளின் கழுத்தில் கிடந்த நகையை சுசீலா பறித்தார். இதையடுத்து சுசீலாவை கண்ணம்மாள் கீழே தள்ளிவிட்டார். இதில் சுசீலா ஆத்திரம் அடைந்தார்.
கண்ணம்மாளை எட்டி உதைத்தார். பின்னர் துணியை எடுத்து கண்ணம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஈரோடு தாலுகா போலீசார் சுசீலாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார். தாயை கொன்ற மகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கினார்.
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
நகை பறித்த வழக்கில் 10 வருடம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வன விலங்குகளின் கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் 6 பேர் கொண்ட தனிக்குழுவினர் காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடம் அதன் எச்சம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பின் போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் 10 புலிகளாக இருந்த எண்ணிக்கை 20 புலிகளாக உயர்ந்து பிறகு 30 ஆக உயர்ந்து 40 ஆக உயர்ந்து தற்போது 60 ஆக உயர்ந்திருக்கிறது.
இது பற்றி ஈரோடு மாவட்ட வன அலுவலர் அருண் லால் கூறும் போது, ‘‘ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகளின் கணக்கெடுப்பு முடிந்து உள்ளது. இதில் தற்போது புலிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதே போல் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. வனப்பகுதி வாழ் மக்களும் வனத்துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்’’ என்று கூறினார்.
ஈரோடு:
ஈரோடு சூளையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை இன்று அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கழிவுநீர் பிரச்சனை உள்ளது. இதற்காக இந்த மாவட்டங்களில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி ஈரோடு சூளையில் தற்போது சாக்கடையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை பேரில் இன்று நான் பார்வையிட வந்துள்ளேன். இங்கிருந்து சுத்திகரிக்கப்படும் நீரை மரம், செடி கொடிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் லீட்டர் தண்ணீர் கழிவுநீர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் இங்கு வர உள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் மின்மிகை மாநிலம் ஆக்கும் முயற்சியாக கூடுதலாக 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க் கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோபி:
கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது.
இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும்.
ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தூர் அருகே உள்ள சாந்தலிங்க புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். மதியம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர் ராஜேந்திரன் வீட்டுக்கு சிலிண்டர் கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது.
இதையடுத்து சிலிண்டர்கொண்டு வந்த நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து வீடு திறந்து கிடக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. எப்போது வருவீர்கள் என கேட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி., லேப்-டாப், ஏர்கூலர் மற்றும் 1½ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து ராஜேந்திரன் வெள்ள கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி கரிய காளிநகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 47). தொழிலதிபர். இவர் கடந்த 24-ந் தேதி மொடக்குறிச்சி அவல்பூந்துறை ரோட்டில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சம் பணம் எடுத்தார்.
பின்னர் 28-ந் தேதி மதியம் ஈரோடு சோலார் பகுதியில் உள்ள வங்கியில் அந்த பணத்தை செலுத்த சென்றார். அப்போது வங்கி ஊழியர் இதில் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதாக கூறினார்.
இதனால் குப்புசாமி அதிர்ச்சியடைந்தார். மொடக்குறிச்சி வங்கியில் இருந்து எடுத்த பணம் என்று அவர் கூறியதால் ஈரோடு வங்கியினர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர்.
எனவே குப்புசாமி மொடக்குறிச்சி வங்கிக்கு திரும்பி வந்து வங்கி மேலாளர் நித்யகல்யாணியிடம் நடந்ததை கூறினார். ‘‘உங்கள் வங்கியில் எடுத்த பணம்தான். ஆனால் கள்ள நோட்டு என்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
ஆனால் வங்கி மேலாளர், 4 நாட்களுக்கு முன்பு வங்கியில் எடுத்த பணத்திற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் மொடக்குறிச்சி ஓலப்பாளையத்தை சேர்ந்த லேத் உரிமையாளர் கவுரிசங்கர் அதே வங்கியில் ரூ.15 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மொடக்குறிச்சியில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.
அங்கு கொடுத்தபோது அதில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று கூறி அதில் அடையாளமிட்டு திருப்பி கொடுத்து விட்டனர். அவரும் கள்ள நோட்டு எடுத்த வங்கிக்கு சென்று கேட்டார்.
அவரிடம் மேலாளர் தங்களது வங்கியில் எடுத்த பணம் இல்லை என்று வாதிட்டதாககூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள், அப்பகுதி வணிகர்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட்டனர்.
இதனால் வங்கி அதிகாரிகள் வங்கியை மூடிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று வங்கி மேலாளர் மீது புகார் கொடுத்தனர். அந்த புகாரின் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர்.
வங்கியில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த வங்கி ஊழியர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவையில் இருந்து வங்கி அதிகாரிகள் மொடக்குறிச்சிக்கு வருகிறார்கள். அவர்கள் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
கவுந்தபாடி:
கவுந்தபாடி நேரு நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(வயது44). தொழிலாளி.
மாதேஸ்வரன் சம்பவத்தன்று வேலை விசயமாக கவுந்தபாடி-ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் மாதேஸ்வரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கவுந்தபாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 39).
இவரது மனைவி புஷ்பா (36). இவர் லாரியில் செங்கல் ஏற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ் (14) என்ற மகனும், தாமரை செல்வி (12) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 25-ந் தேதி புஷ்பா வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கோபி அருகே உள்ள வீரபாண்டி கிராம நிர்வாக அதிகாரி நடராஜனிடம் புஷ்பாவின் கணவர் குருசாமி சரண் அடைந்தார்.
அவர் தனது மனைவி தற்கொலை செய்யவில்லை. நான்தான் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து குருசாமி கோபி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் கைது செய்து விசாரித்தார்.
அப்போது குருசாமி அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், புஷ்பாவுக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். எனவே நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம்.
ஆனால் பிள்ளைகளின் படிப்பு, வாழ்க்கை கருதி நாங்கள் சேர்ந்து வாழ நினைத்தோம். அதன்படி கடந்த 1 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். புஷ்பா லாரியில் செங்கல் ஏற்றும் தொழிலுக்கு சென்று வந்தார்.
அவளுக்கு அடிக்கடி போன் வரும். பலரிடம் அவள் போனில் பேசுவாள். இது அவள் மீது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவளிடம் நான் கேட்பேன். இதனால் எங்களுக்குள் தகராறு வரும்.
கடந்த 24-ந் தேதி இரவு அவளுக்கு போன் வந்தது. அவள் பேசிவிட்டு, ‘என்னை லாரி டிரைவர் அழைக்கிறார். நான் வேலைக்கு செல்ல வேண்டும்’ என்று கூறினாள். நான் போகக்கூடாது என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் சண்டை எழுந்தது.
எனவே அவள் போகவில்லை. படுத்து தூங்கி விட்டாள். மறுநாள் (25-ந் தேதி) காலையில் அவள் சமைக்க எழும்பவில்லை. நான் மகனையும், மகளையும் எனது தந்தை வீட்டில் கொண்டு விட்டேன்.
பின்னர் வீட்டுக்கு வந்தேன். அப்போதும் புஷ்பா எழுந்திருக்கவில்லை. தூங்கி கொண்டு இருந்தாள். ஏற்கனவே அவள் மீது கடும் கோபத்தில் இருந்த நான் தூங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து மேலும் ஆத்திரம் அடைந்தேன்.
அந்த ஆத்திரம் அவளை கொலை செய்யும் முடிவுக்கு என்னை கொண்டு வந்தது. அவள் அணிந்திருந்த சேலையால் கழுத்தை நெரித்தேன். இதில் அவள் இறந்தாள். கொலையை மறைக்க முடிவு செய்தேன்.
எனவே அக்கம் பக்கத்தினரிடம், ‘‘எனது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். நான் பிணத்தை கீழே இறக்கி வைத்தேன்’’ என்று கூறி நாடகமாடினேன். அவர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டேன்.
போலீசாரும் வந்து பிணத்தை கைப்பற்றி தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கொலையை மறைத்துவிட்டு எப்படி வாழ்வது? என்று எனது மனசாட்சி என்னை இருக்க விடவில்லை.
போலீசாரும் விசாரணை நடத்தி என்னை நெருங்கி வருவதுபோல் நான் உணர்ந்தேன். எனவேதான் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.
இவ்வாறு குருசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் இங்கு பணியில் சேர்ந்தார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது விசாரணை கைதி ஒருவர் இறந்தார். இது தொடர்பாக சுரேஷ்குமார் மீது விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி சுரேஷ்குமார் பணி ஓய்வு பெறுகிறார்.
அரசு பணியில் இருப்பவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவர்களுக்கு பணி ஓய்வு ஆணை வழங்கப்படமாட்டாது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் திருமலைக்குமார் மகன் முருகேசன் (வயது 33). இவர் சிவகிரி வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் சிவகிரி வனத்துறை அலுவலகத்தின் வாசலில் முருகேசன் தனது அதிகாரிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் அரிவாள்களுடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் முருகேசன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.
ஆனால் அவரை அங்கிருந்து தப்ப விடாமல் தடுத்த மர்ம நபர்கள் 3 பேரும், முருகேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, கழுத்து, கை மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் சரிந்து விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 கும்பல் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முருகேசனின் மனைவி ஜமுனா பல் டாக்டராக இருந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் முருகேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவரது மனைவி தற்கொலை செய்ததில் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, வந்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரகுராம்ராஜன், சிவலிங்கசேகர், மாரீஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இக்கொலை சம்பவம் தொடர்பாக சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த அருண் (28), உள்ளார் கிராமத்தை சேர்ந்த தேவக்குமார் (29), லெட்சுமணன் (23) ஆகிய 3 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
முருகேசன் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணயில் பரபரப்பு தகவல் வெளியானது.
ஜமுனா தற்கொலை செய்து கொண்டதும் அவரது தந்தை புகழேந்தி, முருகேசனிடம் மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது புகழேந்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
முன் விரோதம் காரணமாக புகழேந்தி கூலிப்படையை ஏவி மருமகன் முருகேசனை தீர்த்து கட்டியிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முருகேசன் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பவானியில் நடந்த பா.ம.க பொதுக்கூட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசியதாவது:-
காவிரிநீர் பங்கீடு என்பது 130 ஆண்டுகால பிரச்சனை. 1924-ம் ஆண்டு, ஒரு ஆண்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும் என்று மைசூர் மாகாணத்துக்கும், மெட்ராஸ் மாகாணத்துக்கும் 50 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசு புதுப்பித்து இருக்கவேண்டும். ஆனால் இந்திராகாந்தியின் நிர்பந்தத்துக்கு பணிந்து எதுவும் செய்யவில்லை.
ஜூன் 12-ந் தேதி காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் 12 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. 18 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையாக தடுப்பணைகள் கட்டாமல் இந்த 10 ஆண்டுகளில் 900 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது.
உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 50 ஆண்டுகளாக காவிரிநீர் பிரச்சனையில் தமிழக மக்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வஞ்சித்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
எங்களுடைய நோக்கம் காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க.செய்த துரோகத்தால் தான் இன்று காவிரியில் தண்ணீர் இல்லை.
50 ஆண்டுகள் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டது. எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றம் காண செய்வோம்.
ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் இருக்கும். ஆனால் இன்று வெறும் 25 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
டெங்கு காய்ச்சல் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி வேகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் தான்.
மாநில அரசு டெங்கு காய்ச்சல் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இதை மறைக்கிறார்கள். இது மிக பெரிய தவறு. அப்போது தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பவானி:
பவானி அருகே உள்ள மைலம்பாடி நாராயண புரத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). இவர் ஒரு ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்து வருகிறார்.
வீரப்பன் ஒலகடம் மைலம் பாடி ரோட்டில் நாராயணபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






