என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதள வசதி மூலம் மாணவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்பு துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

    மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வரவேண்டும்.

    பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் (26.7.2017 முதல் 9.8.2017 முடிய) மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளான 26.7.2017 அன்றைய தேதியே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

    சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலேசன் வழி பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
    ஒரு தாய் மக்களாக வாழ வேண்டியது அவசியம் என்று கூறிய ஓ.பன்னீ செல்வம் அ.தி.மு.க.அணிகள் இணைய வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை சென்றார்.

    முன்னதாக கோவையிலிருந்து காரில் வந்த அவருக்கு பெருந்துறை அருகே உள்ள சிப்காட் பகுதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து வந்தது.

    ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.கவின் 2 அணிகளும் இணைய வேண்டும் என சூசகமாக தெரிவித்தார். அரசியல் பற்றி கூற மறுத்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது.

    பெற்ற சுதந்திரத்தை காக்க நாம் ஒன்று சேர வேண்டும் விறுப்பு-வெறுப்புகளை துறக்க வேண்டும். ஒரு தாய்மக்களாக வாழ வேண்டும். அது நமது கடமையும் ஆகும்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மா.பா.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செம்மலை ஆகியோரும் வந்திருந்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலையில் கன மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
    இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி அரச்சலூர் ஓடாநிலையில் அரசு சார்பில் இன்று நடந்தது. அங்கு தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    ஈரோடு:

    இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அரசு சார்பில் இன்று நடந்தது.

    இதற்காக இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா, கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் ஓடாநிலைக்கு வந்தனர்.

    தீரன் சின்னமலை மணிமண்டபத்துக்கு அவர்கள் சென்றனர். அங்கு தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், தென்னரசு, கே.வி. ராமலிங்கம், ராஜாகிருஷ்ணன், சிவ சுப்பிரமணி, ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் பலரும் மாலை அணிவித்தனர்.

    தீரன் சின்னமலை மணிமண்டபம் அருகே தமிழக அரசின் துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் ஓடா நிலைக்கு வந்து தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓடா நிலைக்கு தலைவர்கள் பலர் வந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்ட போலீசார் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ஆடி 18 விழாவையொட்டி கொடுமுடியில் பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர்.
    ஆடி 18 விழாவையொட்டி கொடுமுடியில் பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர்.

    இதையொட்டி காலை 4 மணிக்கு மகுடேஸ்வரர் கோவிலில் நடை திறக்கப்பட்டது. மகுடேஸ்வரர் நாகாபரணம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் மூத்த சிவாச்சாரியார் தண் டபாணி குருக்கள் தலைமையில் பிரபு குருக்கள், பாபு குருக்கள், அய்யப்ப குருக்கள், மகேஷ் குருக்கள், பட்டாச்சாரியார்கள் ஸ்ரீதரபட்டர், சவுந்தர்ராஜன்பட்டர் ஆகியோர் அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

    ஆடி 18 விழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதலே வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கொடு முடிக்கு வர ஆரம்பித்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.

    பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர். பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்க கம்புகளால் தடுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ஆடி 18 விழாவையொட்டி கோவிலிலும், காவிரி ஆற்றங்கரையிலும் திரளான பக்தர்கள் திரண்டிருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    அவர்கள் மகுடேஸ்வரர் கோவில் வளாகத்திலும், காவிரி ஆற்றங்கரையிலும் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளதால் பாரதிய ஜனதா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய திருநாட்டுக்கும், இந்திய மக்களின் சுவாச காற்றுக்கும் வித்திட்டவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார்.

    எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சியால் கைது செய்து தூக்கிலிட்டார்களோ அதேபோல தீரன் சின்னமலையையும் தூக்கிலிட்டனர்.

    அ.தி.மு.க. இணைப்புக்கு பல குழுக்கள் அமைத்தனர். அந்த குழு கலைக்கப்பட்டது என்று அவர்களே சொல்கிறார்கள். அ.தி.மு.க.வில் தெளிவற்ற நிலை உள்ளது.

    இதன் எதிரொலியாகத்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதற்கு காரணம் பாரதிய ஜனதா சூழ்ச்சிதான்.

    பாரதிய ஜனதா தனது அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க.வை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளரை அ.தி.மு.க. ஆதரித்தது. ஆனால் ஆதரவு கொடுப்பதை வைத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு எந்த ஒரு நிர்பந்தமும் கொடுக்கவில்லை.

    தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பெற்றிருக்கலாம். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேட்டு பெற்றிருக்கலாம். ஆனால் எந்த நிர்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை.

    ஏனென்றால் தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. அதனால்தான் தமிழக அரசை பாரதிய ஜனதா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

    அமைச்சர்களை அச்சுறுத்தி பாரதிய ஜனதா அரசு தனது காரியத்தை சாதிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாரதிய ஜனதா குழப்பத்தை செய்து வருகிறது.

    இதற்கு உதாரணமாக புதுச்சேரி, குஜராத் மாநிலத்தில் நடக்கும் அரசியல் விவகாரங்களையும், கர்நாடக மந்திரி வீட்டில் நடந்த வருமான வரி சோதனையையும் சொல்லலாம்.

    கர்நாடகாவில் சோதனை நடத்திய வருமான வரித்துறை தமிழக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்கி இருந்தபோது ஏன் அங்கு சோதனை நடத்தவில்லை?

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
    ஆடிப்பெருக்கு விழாவான இன்று மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
    காவிரி ஆறு பாயும் இடங்களில் எல்லாம் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

    காவிரி அற்றில் நீராடி காவிரி தாயை வழிபட்டால் புது வாழ்வு சிறக்கும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த புதுமண தம்பதிகளும் பஸ் மற்றும் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வந்து குவிந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழி பட்டனர். இதே போல் ஏற்கனவே திருமணமான தம்பதியினரும் வந்த புதிய தாலி கயிற்றை (மஞ்சள் கயிற்றை) மாற்று கொண்டு வழிபட்டனர்.

    ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி 18 அன்று ஆற்றில் புது வெள்ளம் பொங்கி வரும். அதே போல் தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரியில் புது வெள்ளம் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.



    இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆற்றில் நீராடி வழிபட்டு சங்கமேஸ்வரரையும் வழிபட்டு சென்றனர்.

    கன்னி பெண்களும் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து காவிரியில் நீராடி தங்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமைய வேண்டும். தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வழிபட்டனர்.

    இதனால் புதுமண தம்பதிகளை போல திருமணமாகாத இளம் பெண்களின் கூட்டத்தையும் கூடுதுறையில் அதிகளவில் காண முடிந்தது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து விவசாய நிலமும் செழிக்க வேண்டும். விவசாயம் பெருகிட வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகளும் காவிரியில் நீராடி வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கு விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் பவானி நகரமே இன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டிருந்தது.



    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வந்து சென்றதால் கோவில் முன்பும் பின்புற பகுதிகளிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் மலை மோதியது.

    பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் மேற்பார்வையில் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை, மற்றும் ஈரோடு போலீசார் 100-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களிடம் தங்கள் உடமைகளையும், தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளும் படி மைக்குகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    போலீசார் படகுகள் ஆற்றில் சென்று பொதுமக்களை ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். மேலும் போலீசார் மற்றும் தியணைப்பு வீரர்கள் சிறிய படகுகளில் சென்று பொதுமக்களை எச்சரித்தப்படி கண்காணித்தனர்.
    வெள்ளோடு அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே தண்ணீர் பந்தல், கவசப் பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் அனிதா (வயது22). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.

    கணவன்-மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, அனிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அனிதா வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், இதுவரை திரும்பி வரவில்லை. அனிதாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்னக திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையிலும் நாளை (வியாழக்கிழமை) ஆடி 18 திருநாளை கொண்டாட குவிகிறார்கள்.
    நாளை ஆடி 18 விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆடி 18 என்றாலே புதுமண தம்பதிகளுக்கு கொண்டாட்டம் தான்.

    இந்த திருநாளில் தான் அவர்கள் நீர் நிலைகளில் குறிப்பாக காவிரி ஆறு பாய்ந்து செல்லும் பகுதிகளில் திரண்டு ஜோடியாக சென்று புனித நீராடி வழிபடுவார்கள்.

    தென்னக திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையிலும் நாளை (வியாழக்கிழமை) ஆடி 18 திருநாளை கொண்டாட குவிகிறார்கள்.

    பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அமுதநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிப்பதால் கூடுதுறை என்று அழைக்கப்படுகிறது.இங்கு புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

    இதையொட்டி நாளை அதிகாலையில் இருந்தே பவானி கூடுதுறைக்கு புது மண தம்பதிகளும், பக்தர்களும் குவிகிறார்கள்.

    புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடி திருமணத்தன்று தங்கள் கழுத்தில் அணிந்திருந்த புதுமாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதை யொட்டி மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில்வந்து கொண்டிருக்கிறது.

    இதையொட்டி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டையில் நுழைந்து அம்மாபேட்டை சிங்கம்பேட்டை வழியாக பவானிக்கு வந்து ஈரோடு வழியாக பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் புதுமண தம்பதிகள், பக்தர்கள் புனித நீராட போதுமான தண்ணீர் உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    மேலும் கன்னிப்பெண்கள் நாளை பவானி கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி வழிபடுகிறார்கள்.
    சென்னிமலை பகுதியில் ஒரே ஊரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக இருந்து வருகிறது. இதே போல் சென்னிமலை பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னி மலை அருகே உள்ள எல்லைக் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் இதே ஊரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடித்த அபிநயா (வயது 23) என்ற மகள் உள்ளார்.

    அபிநயாவுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அபிநயாவுக்கு மீண்டும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது.

    பிறகு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபிநயாவின் உடலில் ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்து டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

    மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபிநாயா சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் அதே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் செயலாளராக உள்ள சுப்பிரமணியம் (48) என்பவருக்கும் டெங்கு அறிகுறி காணப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெற்றார். மேலும் எல்லைக் குமாரபாளையத்தில் பலருக்கு டெங்கு இருப்பதற்கான அறிகுறி காணப்பட்டுள்ளது.

    எல்லைக் குமாரபாளையத்தில் உள்ள கதிர்வேல் என்பவரின் 9 மாதமே ஆன கை குழந்தைக்கும் டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதே ஊரை சேர்ந்த மெத்தை வீடு கந்தசாமி (52), சாந்தி (30), சவுந்திரம் (59), சாரதா (35), இவருடைய மகன் அகில் (16), பாப்பாள் (55) என்பவர் உட்பட 15 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதே போல் நாமக்கல் பாளையம் பகுதியினை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மனோகரன் என்பவரின் மகள் பவித்ரா என்ற 6 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பூர்கவி என்ற 12 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பகுதியிலும் பலருக்கும் காய்ச்சல் உள்ளது. எல்லைக் குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமார் தலைமையில் செவிலியர் குழுவினர் கடந்த 5 நாட்களாக எல்லைக் குமார பாளையத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் டெங்குவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் பாளையம் பகுதியிலும் சென்னிமலை சுகாதாரதுறை அலுவலர்கள் மருந்து தெளித்து சுகாதார பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 38). கூலி தொழிலாளி.

    நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடினர்.

    ஆனாலும் இரவு முழுவதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ராமாபுரம் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வேலுச்சாமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கொலையுண்டு கிடந்தது வேலுச்சாமிதான் என்பது தெரிய வந்தது.

    அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர்.

    இது பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலுச்சாமியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலுச்சாமியை யாராவது முன் விரோதத்தில் அடித்து கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பவளத்தம்பாளையம், தங்கம்நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). விவசாயி. இவர் நேற்று இரவு தோட்டத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    தங்கம்நகர் பிரிவில் வந்த போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், கார்த்திகேயன் வந்த மோட்டார் சைக்கிளும் மோதின.

    இதில் கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தது. கார்த்திகேயனும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஈரோடு பழையபாளையம் தென்றல் நகரை சேர்ந்த சரண்யன் (26) என்பவர் ஓட்டிவந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. சரண்யனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்து உயிருக்கு போராடிய சரண்யனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் சரண்யன் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கார்த்திகேயனுக்கு அனிதா என்ற மனைவியும், சுபரிஷா (6) என்ற மகளும், ஜெகஜித் (4) என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×