என் மலர்tooltip icon

    ஈரோடு

    மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு தண்டரோ மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று முதல் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை வழியாக இருகரைகளையும் தொட்டபடி வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றங் கரையோரப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைவிரித்திருப்பார்கள். பாய்ந்து வரும் தண்ணீரால் இந்த வலைகள் இழுத்து செல்லப்படும்.

    மேலும் கரையோரத்தில் பொதுமக்கள் குளிப்பார்கள். தண்ணீர் அதிகமாக வரும்போது வெள்ளத்தில் மக்கள் சிக்கக்கூடும். எனவே பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு பொதுப் பணித்துறை சார்பில் ஊழியர்கள் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளுக்கு சென்றனர். அவர்கள் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தனர்.
    கவுந்தப்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி அப்பநாய்க்கனூர் கிராமத்தில் வசிப்பவர் இளையராஜா தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 21) கூலி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.

    இவர்களுக்கு மூன்று வயதில் தீபக் என்ற ஆண்குழந்தை உள்ளது.

    கடந்த 31ம்தேதி திங்கட்கிழமை மாதேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ரத்தபரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் என மருத்துவர் கூறினார்.

    மூன்று நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மாதேஸ்வரிக்கு மீண்டும் காய்ச்சல் திரும்பியது முன்பு சிகிச்சை பெற்ற மருத்துவரிடம் சென்றார்.

    பிறகு சிகிச்சை பலனின்றி மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெள்ளி, சனி, இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாதேஸ்வரி உடல்நிலை மேலும் மோசமானதால் கோவை தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று காலை மருத்துவமனையில் இறந்தார்.

    மர்ம காய்ச்சலுக்கு தினமும் பலர் பலியாகி வருகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அப்பநாய்க்கனூர் கிராமத்தில் துரைசாமி(35), கார்த்தி(30), மாரநாய்க்கர் (40), வெங்கிடுசாமி(40), தட்டாரபாளையம் கிராமத்தில் சதீஸ்(18), செந்தில் (21), மாரநாய்க்கனூர் கிராமத்தில் கவுரி(25), மாருசாமி(20), அர்ஜீனன்(40), ரோகித் (8), கனித்ரா(3) ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கவுந்தப்பாடி மற்றும் கோபி, ஈரோடு, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சுகாதார துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொசுக்களை அழித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அந்தியூர் குருநாதசாமி கோவிலில் இன்று தேர்திருவிழா நடைபெற்றது. 60 அடி உயர மகாமேறு தேர்களில் முதல் தேரில் குருநாதசாமியும், மற்றொரு தேரில் பெருமாள் சாமியும் சென்றன.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஓன்று அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள புகழ்மிக்க குருநாதசாமி கோவில் ஆகும்.

    இக்கோவிலில் ஆடி மாதத் தில் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதே போல் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா 19-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி கோவிலில் முறைப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கடந்த வாரம் புதன்கிழமை 26-ந்தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருநாதசாமியை வழிபட்டு சென்றனர். சிறப்பு அலங்காத்தில் குருநாதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவையொட்டி முக்கியமான நிகழ்ச்சியாக வன பூஜை நடத்தப்படும். இதில் முதல் வனபூஜை 2-ந் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் பெரிய குடை தீர்த்தம் என்னும் புதுப்பாளையத்தின் கடைசி தீர்த்தம், பவானி கூடுதுறையில் இருந்து புனிதநீர் (தீர்த்த குடம்) எடுத்து வந்து அந்தியூர் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து வனக்கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர்.

    வனக்கோவிலில் குருநாதசாமி காமாச்சியம்மன் மற்றும் பெருமாள் சாமிக்கு விசேச பூஜைகளும் நடைபெற்று இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 9-ந்தேதி தேர்திருவிழா நடைபெற்றது. 60 அடி உயர மகாமேறு தேர்களில் முதல் தேரில் குருநாதசாமியும், மற்றொரு தேரில் பெருமாள் சாமியும் சென்றன. ஒரு சப்பர தேரில் காமாட்சி அம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது. தேர்களை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
    டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியதாகவும், பணிக்கு இடையூறு செய்ததாகவும் கூறுவது பொய்யான தகவல், டாஸ்மாக் ஊழியர்களை நான் மிரட்டவில்லை என்று எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.வி. ராமலிங்கம். இவர் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

    இந்த புகார் குறித்து  எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக் கடைகளில் ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்க வேண்டிய மதுபானங்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். சில கடைகளில் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்கிறார்கள்.

    இன்னும் சில கடைகளில் மது குடிக்க வருபவர்கள் ரூ.500 கொடுத்தால் அவர்களிடம் மீதி பணத்தை கொடுக்காத நிலை கூட உள்ளது. இது போன்று பல புகார்கள் எனக்கு வந்தன.

    எனவே ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் நடவடிக்கை எடுத்தேன். எனது அலுவலகத்துக்கு அழைத்து ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என்று விளக்கம் கேட்டேன்.

    மேலும் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய சொல்லியுள்ளேன். புகார் கூறப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பில் வாங்கி ஆய்வு செய்யவும் கூறி உள்ளேன்.

    ஒருவேளை அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பது உறுதியானால் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் கூறி உள்ளேன்.

    ஆனால் ஆட்களை அனுப்பி டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியதாகவும், பணிக்கு இடையூறு செய்ததாகவும் கூறுவது பொய்யான தகவல். டாஸ்மாக் ஊழியர்களை நான் மிரட்டவில்லை.

    அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றது பற்றி கேட்டதால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இது பற்றி கலால் துறை அதிகாரியிடமும், டாஸ்மாக் மேலாளரையும் போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டேன்.

    அமைச்சர், கலெக்டரிடமும் இதுபற்றி கடிதம் எழுத உள்ளேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பணம் கேட்டு மிட்டுவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம் மீது தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் பணிச்சுமை, சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிகிறார்கள். இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு பொறுப்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங்களின் மூலம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்வு காணப்பட்டும் வருகிறது.

    தற்போது ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் செயல்படும் கடைகளின் மேற்பார்வையாளர்களை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் தனது அலுவலகத்துக்கு அழைத்து கடை ஒன்றுக்கு தினமும் ரூ.700 வீதம் மாதம் ரூ.21,000 தனக்கு கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

    கடை மேற்பார்வையாளர்கள் அவ்வாறு ஏதும் தர முடியாது என மறுத்துள்ளனர். ஆயினும் ஈரோடு வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சில நபர்கள் சென்று எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    எந்த தொகையும் தர முடியாது என்று சொன்னதால் 3 கடைகளுக்கு சில நபர்கள் கும்பலாக சென்று கடை ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் மிரட்டி, பணிக்கு இடையூறு செய்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தெற்கு, தாலுகா போலீஸ் நிலையங்களில் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களால் புகார் செய்யப்பட்டது. மாவட்ட மேலாளருக்கும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பிரச்சினையில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதை தடுத்து நிறுத்தும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

    டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு வி‌ஷயத்தில் பாராமுகமாக உள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த நிலை துரதிஷ்டவசமானது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் கூறி உள்ளோம்.

    எனவே தாங்களும் இதில் தலையிட்டு இந்த நிகழ்வுகள் நடக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
    துணை பொதுச்செயலாளராக அன்று டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டபோது வாழ்த்து கூறிய அமைச்சர்கள் இன்று அவரை எதிர்ப்பதும் வசை பாடுவதும் நியாயமா? என பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சாலம் கூறியுள்ளார்.
    பெருந்துறை:

    பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று மதியம் பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆட்சியை சிறப்பாக நடக்கவும் கட்சியை மேலும் பலப்படுத்தவே டி.டி.வி.தினகரன் தற்போது கட்சி பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த புதிய பொறுப்புகள் மூலம் தொண்டர்களும் இப்போது உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    ஆனால் இதற்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தினகரன் மீது வசை பாடுகிறார்கள். அன்று துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டபோது வாழ்த்து கூறிய அமைச்சர்கள் இன்று அவரை எதிர்ப்பதும் வசை பாடுவதும் நியாயமா? அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடா?

    கட்சியிலும் ஆட்சியிலும் எவ்வளவோ பணிகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தினகரன் மீது மட்டும் குறை கூறி அதில் மட்டும் கவனம் செலுத்தி வருவது தேவையற்றது.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் மூத்த அமைச்சர்களால் தீர்வு காண முடியவில்லை. இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை முதலில் அவர்கள் தீர்க்கட்டும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறினார்.
    புஞ்சை புளியம்பட்டி அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சி காளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 21).

    தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று இரவு தனது பைக்கில் புங்கம் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக சத்தி- கோவை சாலையில் புங்கம்பள்ளி அருகே வளைவில் உள்ள பாலத்தின் அருகே சென்றபோது சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற வாழைக்காய் பாரம் ஏற்றிய மினிலாரி பைக் மீது மோதியது.

    இந்த விபத்தில் ஜெயராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

    புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

    விபத்தில் உயிரிழந்த ஜெயராஜின் உறவினர்கள் மற்றும் புங்கம்பள்ளி பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சத்தி- கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி பழனிச்சாமி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    மறியல் காரணமாக 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    சசிகலா, தினகரன் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகம் பேசாதது ஏன்? என ஈஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    சசிகலா, தினகரன் தலைமையில் கீழ் தான் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் எல்லோரும் செயல்பட்டு வருகிறார்கள். சசிகலாவுக்கும், தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை. இதை திசை திருப்பவே இவ்வாறு நாடகம் ஆடுகிறார்கள்.



    ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் என்கிறார். ஆனால் இதுவரை அவர் இந்த விசயம் சம்பந்தமாக கோர்ட்டுக்கு சென்றாரா?.

    சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் தான் இணைப்பு சாத்தியம் என்கிறார். ஆனால் அதை தவிர அவர்களை பற்றி வேறு எங்கேயாவது பேசினாரா? நிறைய பொதுக்கூட்டங்களில் பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.

    அப்போது சசிகலா, தினகரன் பற்றி அதிகம் பேசாதது ஏன்?. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுந்திருக்க கூடாது என்பதற்காக இது போன்ற நாடகம் ஆடுகிறார்கள்.

    அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. தேர்தல் வரும் போது மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள்.

    கமல்ஹாசன் மட்டும் அல்ல ஓட்டு போடும் அனைத்து குடிமகனுக்கும் கருத்து கூற உரிமை உண்டு. ஒருவர் குறை சொன்னால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர அவரை மிரட்டும் தொனியில் அமைச்சர்கள் பேசுவது தவறு.

    தினகரன் மூலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தோப்பு வெங்கடாச்சலம் முயற்சிக்கிறார். இது வேடிக்கையாக உள்ளது.

    இது தொகுதி சம்பந்தப்பட்ட வி‌ஷயம் தோப்பு வெங்கடாச்சலமே நேராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இது குறித்து பேச வேண்டியது தானே?

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்சிக்கும் ஆட்சிக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவே புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.

    ஈரோடு:

    டி.டி.வி. தினகரனின் அணியை சேர்ந்த பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு டி.டி.வி. தினகரன் கழக அமைப்பு செயலாளர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதையொட்டி சென்னையில் டி.டி.வி. தினகரனை சந்தித்து தோப்பு வெங்கடாச்சலம் வாழ்த்து பெற்றார்.

    தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மறைந்த ஜெயலலிதா அவர்கள் எனக்கு பெருந்துறை தொகுதியில் போட்டியிட 2 முறை வாய்ப்பு அளித்தார். 2முறையும் நான் வெற்றி பெற்றேன். முதல் தடவை வெற்றி பெற்ற எனக்கு மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தார்.

    நான் ஈரோடு மாவட்ட அமைச்சராக இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க.வே வெற்றி பெற செய்தோம். மேலும் உள்ளாட்சி - எம்.பி. தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது.

    ஓராண்டாக கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சியை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவே புதிய நிர்வாகிகளை கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார்.

    கடந்த தேர்தலின்போது ஈரோட்டில் மேம்பாலம், ரவுண்டானா மற்றும் ரூ.86 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வர முன்பே நான் முயற்சி செய்திருந்தேன். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே அவரிடம் பேசி இருந்தேன். அவரும் விரைவில் செயல்படுத்த கூறி இருந்தார்.

    கூவத்தூரில் தங்கி இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்குவதாக கூறி இருந்தார். ஆனால் நான் எனக்கு அந்த பதவி வேண்டாம். பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, கொடிவேரி குடிநீர் திட்டம் தான் வேண்டும் என்றேன். ஆனால் மூத்த அமைச்சர்கள் இதற்காக முயற்சியை எடுக்கவில்லை.

    அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் தினகரனை பற்றி பேசி வருவது அவர்களது சொந்த கருத்தாகும். தினகரன் பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தும் சொல்லவில்லை.

    டி.டி.வி.தினகரன் கட்சியை பலப்படுத்தவும், நல்ல திட்டங்களை கொண்டு வரவும் எங்களை போன்றவர்களுக்கு சிறப்பாக பணியாற்ற பொறுப்புகளை வழங்கி உள்ளார். கட்சி தலைமை கழக பேச்சாளர்கள் கடந்த ஓராண்டாக எந்தவித கூட்டமும் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த புதிய நிர்வாகிகளை நியமித்ததால் பொதுக் கூட்டங்கள் போட்டு கட்சியை பலப்படுத்தலாம்.

    கட்சியை பற்றி ஒரு சிலர் கூறி வருவது சொந்த கருத்து என்றுதான் கூறி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சிப்பது அவரின் கோபத்தின் வெளிப்பாடு. ஆட்சியில் இருப்பவர்கள் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.


    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.

    முன்னதாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். பிறகு எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சி கொடி யேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஈரோட்டிற்கு வந்தார்.

    அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் அவர்கள் பவானிசாகர் அணையை நம்பியே உள்ளனர்.

    உடனடியாக பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை டெங்கு காய்ச்சல் பீதியிலேயே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    சுகாதாரத்துறை அது போன்ற பகுதிகளுக்கு எல்லாம் நடமாடும் ஆம்புலன்ஸ்களை அனுப்பி தேவையான பாதுகாப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுவை பொறுத்த வரை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதிலிருந்து விலக்கு பெற வேண்டும்.

    பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

    ஆளுங்கட்சியை பொறுத்த வரை மக்கள் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது போய், தங்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு சாஸ்திரி நகரில் நடந்த கொடியேற்று விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெசவாளர் அணி மாநில தலைவர் எம். ராஜேஷ், மாநில துணை தலைவர் கிளப்மேலாஞ்ச் எஸ்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, கணபதிபாளையம், சாஸ்திரிநகர், ராஜாஜிபுரம், கனிராவுத்தர்குளம், நசியனூர் உள்ளிட்ட 6 இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றியும், பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

    மேலும் காமராஜர் பிறந்த நாளையொட்டி த.மா.கா. சார்பில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

    இளைஞர்கள் புத்துணர்வுடனும், வேகத்துடனும் செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும். 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் பேசினார்.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் ஈரோடு மணல்மேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் வரவேற்றார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் மிக்க கட்சி. பிரதமராக இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் நாட்டுக்காக தங்கள் உயிரை தந்துள்ளனர்.இருப்பினும் எதற்கும் பயப்படாமல் சோனியாவும், ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்டு வருகிறார்கள்.

    எந்த கட்சியையும் நான் பெயர் சொல்ல விரும்ப வில்லை. சில கட்சிகள் ஜாதி, மத உணர்வுடன் செயல்படுகிறது. ஆனால் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது.

    தற்போது இளைஞர்கள் புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் புத்துணர்வுடனும், வேகத்துடனும் செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும். 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க வேண் டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

    வருமான வரித்துறை பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக மாறியிருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தமீம் அன்சாரி கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வக்பு வாரிய இட ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கேட்டறிய மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமீம் அன்சாரி அந்தியூர் வந்தார்.

    இட ஆக்கிரமிப்பு சம்பந்த மாக சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி ஜனநாயகத்தை சீர் குழைத்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தவிர இந்தியாவில் எந்த கட்சிகளும் ஜனநாயக சுதந்திரத்தோடு செயல்படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எல்லா கட்சி தலைவர்கள் மீதும் வழக்குகளை பாய்ச்சுகிறார்கள்.

    எதிராக பேசுபவர்கள் மீது பலி வாங்கும் போக்கோடு கட்சி தலைமை செயல்பட்டு கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனை முறியடிக்க வேண்டும்.

    ராகுல்காந்தி முழு நேர அரசியலுக்கு வந்து ஜனசக்தி, மதசார்பற்ற சக்தி, சமூக நீதி சக்தி, இடதுசாரிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஜனநாயக போரை அறிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வின் பிளவிற்கும், இரு அணிகள் சேராதிருப்பதற்கும் பாரதிய ஜனதா கட்சியின் கைங்கரியம் தான் மூலக்காரணம் ஆகும்.

    பெங்களூருவில் இருக்கும் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.


    எனவே மத்திய வருமான வரித்துறை பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக மாறியிருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    எதிர் காலத்தில் இந்தியாவில் ரேசன் பொருட்களை நிறுத்துவதற்கான முன்னேற்பாடாக மத்திய அரசு தற்போது செயல்படுகிறது. ரேசன் பொருட்கள் மீதுள்ள கெடுபிடிகளை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொது செயலாளர் பாபு ஷாகின்ஷா, மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×