search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ther festival"

    வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை வழிபட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது.

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.



    நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பிரார்த்தனை கூட்டம் தொடங்கியது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். நள்ளிரவு 12 மணி அளவில் தேவதாஸ் அம்புரோஸ் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார்.

    தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம் பொறுப்பாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு திருப்பலியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய “பசிலிக்கா“ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.

    துன்பத்தில் துவண்டு, அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி இந்த விழா நடைபெறுவதாக ஐதீகம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி, விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், பிராட்டியூர் மான்போர்ட் மாநில தலைமையக அருட்தந்தை அலெக்சாண்டர் ஜோசப், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜேம்ஸ் விக்டர், சாந்தோம் ஆசிரம இல்ல தலைவர் அருள்ராஜ், குணமளிக்கும் மாதா ஆலய கமிட்டி செயலாளர் கரோலின் ராஜன், துணைத்தலைவர் ஜோசப், நிதிக்குழு செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை உதவி பேராசிரியை சுபா தலைமையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டமும், மாலை 6 மணிக்கு அன்னை மரியா பிறப்பு விழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலய வட்டார முதல்வர் ஜோசப் லாரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக பயன்படுத்தப்படும் தேர் பழுதடைந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

    இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தேரை வடம்பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருவையாறு கீழவீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய இடங்கள் வழியாக வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தேர் வெள்ளோட்டத்தையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், பழனிமுத்து மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தேருக்கு சக்கரங்கள் பொருத்தும் பணி முடிந்து உள்ளது.
    திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சோழ மன்னர்கள் காலத்தில் உருவான இக்கோவிலில் அருள் பாலித்து வரும் இறைவன் உதங்கமா முனிவருக்கு ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும், ஐவண்ணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி திருவிழாவின் ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

    கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் தேர் எரிந்து விட்டதால் கடந்த பல ஆண்டுகளாக சவுக்கு கம்புகளால் உருவாக்கப்பட்ட தேர் தான் வீதி உலா வருகிறது. எனவே மரத்தினால் ஆன புதிய தேர் உருவாக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு புதிதாக தேர் உருவாக்குவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரம் அருகில் வைத்து சுமார் 25 அடி உயரத்தில் புதிய தேர் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

    இந்த தேருக்கான இரும்பு சக்கரங்களை திருச்சி பாய்லர் ஆலை (பெல்) வடிவமைத்து கொடுத்து உள்ளது. இந்த சக்கரங்கள் நேற்று தேரில் பொருத்தப்பட்டன. இந்த தேரில் உற்சவர் எழுந்தருள்வதற்கான சிம்மாசனம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும் வர்ணம் பூசும் பணியும் நிலுவையில் உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் இன்னும் 2 மாதங்களில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அடுத்த வைகாசி திருவிழாவின்போது புதிய தேர் தேரோடும் வீதிகளில் பவனி வரும் என கோவில் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் இறுதியாக கடந்த 7.2.2003-ல் கும்பாபிஷேகம் நடந்து உள்ளது. பொதுவாக இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதிமுறையாகும். ஆனால் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டதால் திருப்பணி வேலைகளையும் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
    தொட்டியம் அருகே ஏழூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் தேர்தூக்கும் நிகழ்ச்சியில் தேரை பக்தர்கள் தலையில் சுமந்து சென்றனர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மற்றும் அளியாபுரம் பகவதிஅம்மன், கருப்பண்ணசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 8-ந்தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில் திருத்தேர் தலையலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம், தீர்த்தகுடம், அக்னிசட்டி எடுத்து அலகு குத்தி கொண்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். பின்னர் கிடா வெட்டு நிகழ்ச்்சி நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்தூக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஏழூர்பட்டி கோவிலில் இருந்து தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து எருமபட்டிரோடு, திருச்சி-சேலம் மெயின்ரோடு, காட்டுப்புத்தூர் ரோடு உள்பட ஏழூர்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) அளியாபுரத்தில் திருத்தேர் திருவீதியுலாவும் மஞ்சள் நீராடல் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஏழூர்பட்டி மற்றும் அளியாபுரத்தை சேர்ந்த ஊர்முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர். 
    ×