search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery robbery"

    • 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் அதிகமான வங்கிகள் மற்றும் தனியார் பள்ளி, அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் வடமதுரை போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவையும் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் வந்துசெல்வதால் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருடுபோனது. 2 வீட்டில் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரிய வில்லை. இப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது50) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மேலும் அருகில் இருந்த வீட்டில் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    போலீஸ் நிலையம் அருகிலேயே அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43).

    மதுரை அருகே உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பிரபா சிபோரா (40). கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது குடும்பத்தினருடன், ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, நெல்லைக்கு ஜவுளி எடுக்க சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஜவுளிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.


    மேலும் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பாபு சந்திரபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

    அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

    கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வெள்ளநீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்த விஜயலட்சுமி இரண்டாம் மாடியில் வசித்து வந்த சரத்குமார், கார்த்திக், சரத் பாபு, அருண் ஆகிய குடும்பங்களை சேர்த்தவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு மீட்பு குழுவினர் மூலம் படகில் சென்று அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

    அப்போது முதல் தளத்தில் இருந்த விஜயலட்சுமி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதைபோல இரண்டாம் மாடியில் வசித்து வரும் சரத்குமார் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கார்த்திக் என்பவர் வீட்டில் 5 பவுன் நகை, சரத் பாபு வீட்டில் 11 பவுன் நகை, அருண் வீட்டில் 10 பவுன் நகை என மொத்தம் 5 வீட்டில் 53 பவுன் நகைகளை பீரோவை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து பீரோ மற்றும் சுவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இது சம்பவம் குறித்து தகவல் வரதராஜபுரம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த மக்கள் முகாமிலிருந்து வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கினர். 

    • மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர்.
    • செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் காலையில் தனது மொபட்டில் பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றார். பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜோதியை துரத்தினர்.

    மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். உடனே சுதாகரித்துக் கொண்ட ஜோதி தாலி செயினை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டு மர்மநபர்களிடமிருந்து போராடியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இருப்பினும் மர்மநபர்கள் அவரை விடவில்லை. சாலையில் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த அவரை சரமாரியாக தாக்கி ஜோதியிடம் இருந்து பாதி செயினை மர்மநபர்கள் பறித்துக்கொண்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வருவதை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜோதியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் வழிப்பறி கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ நடந்த பகுதியிலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார்.
    • திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் விஜிதா (27) சென்னை கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்படுகளை மோகன் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார். விஜிதா நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விஜிதா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாண்டி லட்சுமி மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை, மடிப்பாக்கம், கல்யாண கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பாண்டி லட்சுமி, இவர், மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார்.

    பாண்டி லட்சுமி கடையில் இருந்தபோது, 2 பேர் கடைக்கு வந்து கண்ணாடி வாங்குவதுபோல நடித்து, அவரது கவனத்தை திசை திருப்பினர். இதையடுத்து அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை திருடிச் சென்றனர். இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, அதில் பதிவாகி இருந்த குற்றவாளிகளின் அடையாளங்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் குலாப், சக்லன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ சவரன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார்.
    • காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி இரண்டு தங்க செயின்களை திருடி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து நகையை சுருட்டி செல்வது பதிவாகி இருந்தது.

    விசாரணையில் அவர், வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (26) என்பது தெரிந்தது. அவரை காஞ்சி போலீசார் கைது செய்தது விசாரித்தனர். அப்போது கடனை அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

    கைதான காயத்ரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, நகைக்கடையில் தங்க செயின்களை திருடினேன். ஆனால் கண்காணிப்பு காமிராவில் பதிவானதால் சிக்கிக்கொண்டேன் என்று கூறி உள்ளார்.

    காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது32). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூரில் தங்கி இருந்த தம்பதியினர் தலை ஆடிக்காக பெரியகுளம் வந்தனர்.

    பின்னர் தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தாமரைக்குளம் பிரிவு அருகே வழிமறித்து சின்னத்துரையை பைக்கில் ஏறுமாறு கூறினர்.

    அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
    • நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் வேலை முடிந்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டன.

    அதுவும் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் புதுவையில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, முத்திரையர்பாளையம் ஆகிய பகுதிகளில் 4 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகைகளை பறித்து சென்றனர்.

    இந்தநிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி வந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,

    நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தபோது அங்கு ரெயிலில் வந்த முகமது ஜாபர் குருஷியை மடக்கி பிடித்தனர். மற்றொரு கூட்டாளியான வாரிஷ் கான் கடந்த 2 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து முகமது ஜாபர் குருஷியை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஜாபர் குருஷி தனது கூட்டாளி வாரிஷ் கானுடன் காவி உடை அணிந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து முகமது ஜாபர் குருஷியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மும்பைக்கு தப்பி சென்ற அவனது கூட்டாளி வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

    • கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
    • நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவல்.

    தாம்பரம் சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் 'புளு ஸ்டோன்' என்ற பெயரில் நகைக் கடை உள்ளது.

    அப்பகுதியில் பிரபலமான இந்த நகைக்கடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு இந்த நகைக்கடையில் பணிகளை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை பொறுப்பாளரான ஜெகதீசன் என்பவரின் செல்போனில் அலாரம் ஒலித்தது.

    நகைக் கடைக்குள் யாரோ புகுந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளுஸ்டோன் நகை கடையில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    நகைக் கடையில் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மர்ம நபர்கள் நகைக்கடை மாடிக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து லிப்ட் இணைப்பு அறை வழியாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க- வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் அணிந்துருந்த டி சர்ட்டை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் வைத்து போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.

    அவனிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.

    நகைக்கடையில் கொள்ளை அடித்தபின் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகைக்கடை மாடியில் குதித்து தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 2 சிறார்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • புதுவை வி.வி.பி.நகரில் டாக்டர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரை சேர்ந்த பிரபாகர் (வயது38). டாக்டரான இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க பிரபாகரன் தனது மனைவி குழந்தையுடன் வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார்.

    வீட்டை அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளும் படி வீட்டில் வேலை செய்யும் தேன்மொழி மற்றும் பிரபாகரனின் நண்பரான கோவிந்தசாலையை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரிடம் கூறி சென்றார்.

    இந்த நிலையில் பிரபாகரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு பிரபாகரன் அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த மனைவியின் நகைகள் மற்றும் குழந்தைகளின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன. சுமார் 7 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் டாக்டர் பிரபாகரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து டாக்டர் பிபாகரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள வி.வி.பி.நகரில் மர்ம நபர்கள் துணிகரமாக வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×