வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க-வைர நகைகள் திருட்டு

மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க-வைர நகைகள் திருட்டு
Published on

சோமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் விஜிதா (27) சென்னை கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்படுகளை மோகன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார். விஜிதா நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விஜிதா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com