search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி-தமிழகத்தில் காவி உடை அணிந்து பெண்களிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள்
    X

    கைது செய்யப்பட்ட முகமது ஜாபர் குருஷி

    புதுச்சேரி-தமிழகத்தில் காவி உடை அணிந்து பெண்களிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள்

    • நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
    • நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் வேலை முடிந்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டன.

    அதுவும் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் புதுவையில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, முத்திரையர்பாளையம் ஆகிய பகுதிகளில் 4 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகைகளை பறித்து சென்றனர்.

    இந்தநிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி வந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,

    நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தபோது அங்கு ரெயிலில் வந்த முகமது ஜாபர் குருஷியை மடக்கி பிடித்தனர். மற்றொரு கூட்டாளியான வாரிஷ் கான் கடந்த 2 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து முகமது ஜாபர் குருஷியை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஜாபர் குருஷி தனது கூட்டாளி வாரிஷ் கானுடன் காவி உடை அணிந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து முகமது ஜாபர் குருஷியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மும்பைக்கு தப்பி சென்ற அவனது கூட்டாளி வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

    Next Story
    ×