என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"
- ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.
- காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும்.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரை ஓரத்தில் அதிகாலையில் ஏராளமானோர் குவிந்தனர்.
ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரூர் அடுத்த தீர்த்தமலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் இன்று ராமர், கவுரி உள்ளிட்ட 5 தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
அதேபோல், டி.அம்மாபேட்டை, இருமத்தூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில், தை அமாவாசை வழிபாடு நடந்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து, முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
- ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
- அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி தமிழ் மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சாதாரண அமாவாசை நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள்.
இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தி, அழகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூல், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம்.
- இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
- பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.
அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.
அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.
திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய். ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும். அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
- பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது.
- சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால், அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரகணம் வந்தால் கிரகண புண்ணியகாலத்தில் தர்ப்பணம் செய்து விட்டுப் பின்பு அமாவாசைகளில் செய்ய வேண்டும்.
நடுப்பகலுக்கு மேல் தர்ப்பணத்திற்காக ஒரு நீராடல் செய்து விட்டு மாத்யான்ஹிகத்திற்குப் பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். துணிகளை கட்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யக் கூடாது.
1. பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்த பின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு 'சுக்லாம் பரதம்', 'பிராணாயமம்', 'சங்கல்பம்' முதலியவற்றை செய்ய வேண்டும். சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
2. ஆவாஹனம் - சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிரத் தாம்பாளத்திலோ) கிழக்கு மேற்காகப் பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைத்து 'ஆயாதபிதர' என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம் செய்யய்ய வேண்டும்.
3. ஆஸனம் - 'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனித் தர்ப்பைகளைத் கூர்ச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டும். 'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்' என்று மறுபடி எள்ளைப் போட வேண்டும்.
தர்ப்பணம் - பித்ரு தர்ப்பணத்தில் கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்த்து கை நிறையத் தீர்த்தம் விட வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை முட்டி இட்டு, வலது காலை மடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது, தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், சங்கல்பம், ஆவா ஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத் தான் செய்ய வேண்டும்.
- ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு.
- பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திட அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு 425 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகின்ற 24. 07.2025 (வியாழக்கிழமை) அன்று ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழும்புரம்) விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறைவும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
எனவே பொதுமக்கள் 24.7.2025 அன்று இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 1 வாரமாக மீண்டும் பரவலாக தீவிரமடைந்து வருகிறது.
தற்போது தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க இன்று 5ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுருளி அருவிக்கு அமாவாசை நாட்களில் அதிக அளவு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் 5-வது நாளாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மேகமலை அடுத்துள்ள சின்னச்சுருளி அருவியில் 4 நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஆனந்தமாக நீராடிச் சென்றனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.80 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4586 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. நீர் வரத்து 2132 கன அடி. திறப்பு 1861 கன அடி. இருப்பு 4720 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையில் 34.4, தேக்கடி 26.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும்.
- அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. த்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம். அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.
பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.
பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.
லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.
அமாவாசை தர்ப்பணம்
வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.
அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

மூன்று தலைமுறை தர்ப்பணம்
அமாவாசை திதி நாளை அதிகாலை 03.06 மணிக்கு தொடங்கி, மறுநாளான 25-ந்தேதி அதிகாலை 01.48 வரை உள்ளது. இதனால் நாளை காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
அகத்திக்கீரை
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.
கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.
- அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் உண்டான இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கணிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.
எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை வரப்போகிறது.
அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.
அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.
முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும், பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.
- வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.






