என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலப்பாளையம் ரவுண்டானாவில் துப்புரவு பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    மூலப்பாளையம் ரவுண்டானாவில் துப்புரவு பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.

    ஈரோட்டில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

    ஈரோட்டில் அ.தி.மு.க. பிரமுகர் சாதி பெயரை சொல்லி திட்டியதால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலப்பாளையம் ரவுண்டானாவில் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் 4-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் பாலு. இவர் குடிநீர் வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.

    அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் ஒருவர் தனது பகுதியில் ஒரு இடத்தில் தண்ணீர் கசிவு உள்ளது அதை சரி செய்யும்படி துப்புரவு பணியாளர் பாலுவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    அப்போது அந்த அ.தி.மு.க. பிரமுகர் பாலுவை தகாத வார்த்தையால் பேசியும், சாதி பெயரை கூறி திட்டி மிரட்டலும் விடுத்தாராம்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

    இதை கண்டித்தும், சாதி பெயரை கூறி திட்டிய அ.தி.மு.க.பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் காசிபாளையம் மண்டல அலுவலத்தில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இன்று காலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் திருப்தி அடையாத துப்புரவு பணியாளர்கள் மூலப்பாளையம் ரவுண்டானாவில் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    சாலைமறியல் நடத்தியவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 20 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
    Next Story
    ×