search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
    • காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

    நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
    • 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 முதல் 30 வயது வரையிலான 3 வாலிபர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், பாறைக்குழி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த மயில்சாமி (வயது 55), அவரது மகன் சதீஷ் குமார்(30) மற்றும் முகமது இக்பால் (25), சூர்ய நாராயணன் (23), சூர்ய பிரகாஷ்(25) மற்றும் சிவக்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
    • காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை. தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி இருந்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் பிரதான சாலைகளான திருப்பூர் குமரன் சாலை, காதர் பேட்டை, அரிசி கடை வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இன்று குறைந்து காணப்பட்டது.

    அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கொங்கு மெயின் ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர்போன காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வார இறுதிநாளான 21ந்தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் -17, திருப்பூர் தெற்கு -26, கலெக்டர் அலுவலகம் -29, மடத்துக்குளம் -3, தாராபுரம்-2, மூலனூர்-1,குண்டடம் -17, உப்பாறு அணை-14, நல்லதங்காள் ஓடை-2, உடுமலைப்பேட்டை- 3.30, அமராவதி-4, திருமூர்த்தி அணை -5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, காங்கயம்-6, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-2, வட்டமலைக்கரை அணை -3, பல்லடம்-29. மாவட்டம் முழுவதும் மொத்தம் 167.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    • அரசு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.


    தாசில்தார் மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்த காட்சி

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
    • பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூா் மண்டல பொது மேலாளா் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், சேலம் ஆகிய ஊா்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆகவே, பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் குமார்நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அதன்படி குமார் நகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர, டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ்காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகரில் மின் வினியோகம் இருக்காது.

    சந்தைபேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம்ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன்மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்ங்காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம்ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

    கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்குட்பட்ட பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ரெயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன.
    • பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ெரயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன. இதன்காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது நகரப்பகுதியில் வாகன நெரிசலை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூலிபாளையம், அணைப்பாளையம், தோட்டத்து ப்பாளையம், எஸ்.ஆர்.சி., மில் பகுதியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நொய்யலிலும் புதிய பாலம் கட்டப்பட்டது.

    அணைப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் ரங்கநாதபுரம் பகுதியில் இருந்து துவங்கி ெரயில்வே பாலமாகவும், நொய்யல் பாலமாகவும் நீட்டித்து மங்கலம் ரோட்டை சென்றடையும் வகையில் பெரிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. குறிப்பாக அணைப்பாளையம் கிராமம் மாநகராட்சியில் இருந்தும் தொடர்பு இல்லாத பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது.

    பாலம் அமைக்கும் பணி துவங்கிய போது நிலம் எடுக்க மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கோர்ட்டு வழக்கு காரணமாக பாலம் பணி பாதியில் நிற்கிறது. கடந்த 2009ல் தொடங்கிய சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிலம் எடுப்பு விவகாரத்தில் சுமூகமாக தீர்வு கிடைத்துள்ளதால் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:- அணைப்பாளையம் பாலம் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலம் எடுப்பு விவகாரம் காரணமாக இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. நிலம் எடுப்புக்கான இழப்பீடு வழங்க ஒரு கோடி ரூபாய் தேவையென அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் இருந்ததால் திருத்திய திட்டமதிப்பீடு தயாரிக்க வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரானதும் அதற்கான நிர்வாக அனுமதியும் பெற்று புதிய டெண்டர் நடத்தி, பணிகள் விரைவில் துவங்கப்படும். ரிங்ரோடு பகுதியில், ெரயில்வே பாலமும் நொய்யல் ஆற்றுப்பாலமும் ஒரே பாலமாக அமையும் போது போக்குவரத்து நெரிசல் குறையும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் ரெயில் பாதையை கடந்து மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் இதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது எஸ்.ஆர்.சி., மில்ஸ் பாலம் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. பாலம் முடிவடையும் சூர்யா நகர் பகுதியில் அணுகு சாலையாக தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

    இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பி மண் கொட்டி சமன் செய்யும் பணி நடக்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் சாய்வு தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.பாலம் முழுவதும் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க கேபிள் இணைப்பு அளித்து விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையிலும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் எனத்தெரிகிறது.

    • பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
    • பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×