என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பூரில் பவர் டேபிள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்: ஆடை தயாரிப்பு பணிகள் முடக்கம்
    X

    திருப்பூரில் பவர் டேபிள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்: ஆடை தயாரிப்பு பணிகள் முடக்கம்

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.

    Next Story
    ×