search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garment manufacturing"

    • பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது.
    • புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது.

    திருப்பூர்:

    உலகின் மிகப்பெரிய மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளிடையே நிலவும் போர் சூழலால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகியுள்ளன. போர் சூழல் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழில்களும், விவசாயமும் பாதித்தது. கோதுமை, பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி சமையல் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் சூழல் காரணமாக உலக மக்களின் வாங்கும் திறன் குறைந்து போயுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போரின் எதிர்விளைவுகளை சந்திக்க தங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிக்கொண்டனர். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டனர்.

    இதன் காரணமாக இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் நேரடியாக பாதித்தது. திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம். கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வுக்கு பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆர்டர் வெகுவாக குறைந்துவிட்டது.

    பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது. சாயக்கழிவு சுத்திகரிப்பு, நூல் விலை, மூலப்பொருள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து எளிதாக மீண்டு வந்த திருப்பூருக்கு உக்ரைன் போர் சூழல் எதிர்பாராத சவாலாக மாறிவிட்டது.புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதற்கு பிறகும் அந்நாடுகள் போராடி வருகின்றன.

    இருப்பினும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை மாறி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் இருந்து அமெரிக்கா இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் படிப்படியாக இயல்பான இயக்கத்துக்கு மாறி வருகின்றன.இந்த நிதியாண்டை சமாளித்தால் போதும். வழக்கமான அளவு ஆர்டர்கள் வரத்துவங்கியதும் திருப்பூரில் மீண்டும் பரபரப்பு கூடிவிடும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். 

    • டெக்ஸ்டைல் ​​ஹேக்கத்தான் (டெக்ஸத்தான் 2023) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • டிசம்பர் 21-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) மற்றும் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட் - டீ சார்பில், டெக்ஸத்தான் -2023 நிகழ்ச்சி ஜனவரி 6 மற்றும் 7ந்தேதிகளில் திருப்பூரில் நடக்கிறது.

    தொழில்துறை சிக்கல்களை தீர்ப்பதற்கும், வணிக மயமாக்கலுக்கு ஏற்ற தொழில்நுட்ப ரீதியாக சாத்தியக்கூறுகளை ஆராயவும், டெக்ஸ்டைல் ​​ஹேக்கத்தான் (டெக்ஸத்தான் 2023) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் மருத்துவ ஜவுளி, தொழில்துறை , ஆட்டோமேஷன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஆடைகள், ஜவுளி கழிவுகளை பயன்படுத்தி மாற்றுப்பொருள் தயாரிப்பது ஆகிய உற்பத்தியில் நிலவும் சவால்களை தொழில்நுட்ப ரீதியாக சமாளிக்கும் புதிய தீர்வுகளை சமர்ப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அடல் இன்குபேஷன் மைய நிர்வாகிகள் கூறியதாவது:-

    திறமையான மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வழங்கப்பட்ட தலைப்புகளில் சிக்கல்களுக்கான தீர்வு வழங்கும் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.

    டெக்ஸத்தான் -2023 நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் டிசம்பர் 21-ந்தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு ஜனவரி மாதம் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட்-டீயில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள், ஆரம்ப மானியம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் நிப்ட்-டியின் இன்குபேஷன்வசதிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும், புதிய தொழில் முனைவோர்களும், தங்களின் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 'ஸ்டார்ட்- அப்'கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை உருவாக்கலாம்.மேலும் விவரங்களுக்கு https://www.aicnifttea.org, https://startuptn.in/ என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    ×