என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பவர்டேபிள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்:  திருப்பூரில் ஆடை உற்பத்தி - வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு
    X

    பவர்டேபிள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்: திருப்பூரில் ஆடை உற்பத்தி - வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

    பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.

    புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    Next Story
    ×