என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: விஜய் பரப்புரையின்போது திருப்பூரை சேர்ந்த 2 பேர் பலி - உருக்கமான தகவல்கள்
- விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
- நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 33). இவரது மனைவி நிவேதிதா. இவர்களுக்கு சஷ்டிகா(6), துகிலன்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியிடம் வருங்கால முதல்வர் வருகிறார். அவரை பார்த்து விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு கரூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார். விஜய் பிரசாரத்தில் பங்கேற்ற மணிகண்டன் கூட்டநெரிசலில் சிக்கியதால் அவருக்கு மூச்சு த்திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மனைவி கோகுல பிரியா (29). இவர்களுக்கு திருமணமாகி கவுசவி என்ற குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் விசைத்தறி நடத்தி வந்தனர்.
கோகுலபிரியா சிறுவயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகர். இதனால் நேற்று கரூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த விஜயை பார்ப்பதற்காக கோகுலபிரியா அவரது கணவர் ஜெயபிரகாஷ், குழந்தையுடன் கரூருக்கு சென்றுள்ளார். பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவே, குழந்தையுடன் அவர்களால் நிற்க முடியவில்லை. இதையடுத்து ஜெயபிரகாஷ் குழந்தையுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
கோகுல பிரியாவும் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் முடிய வில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே மனைவி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ் , கோகுலபிரியாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை எடுக்க வில்லை. இந்தநிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜெயபிரகாஷ் அங்கு குழந்தையுடன் சென்றார். அப்போது கோகுலபிரியா உயிரிழந்ததை பார்த்து கதறி துடித்தார். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளகோவிலை சேர்ந்த 2பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மணிகண்டன், கோகுலபிரியா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடல்கள் வெள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 2பேரின் உடல்களுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.






