என் மலர்
செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாயமான சிறுவனை பெண் கடத்தி சென்றாளா?: போலீசார் விசாரணை
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் பிர்லா. இவரது மகன் நிதிஸ் பாலன் (வயது 3½).
சிறுவன் நிதிஸ் பாலன் தனது வீட்டின் முன் நின்று கொண்டு விளையாடி கொண்டிருந்தான். திடீரென மாயமாகி விட்டான். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கண்ணீர் மல்க கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான போது சிறுவன் நிதிஸ் பாலன் வெள்ளை மஞ்சள் கலரில் கோடுபோட்ட பனியனும், மரக்கலரில் ஜட்டியும் அணிந்திருந்தான்.
2½ அடி உயரம் கொண்ட அவனது முகத்தின் தாடையில் காயத்தழும்பு உள்ளது. இதே போல் வலது கண் அருகே மூக்கின் பக்கம் காயத் தழும்பு உள்ளது.
கானாமல் போன அந்த சிறுவன் எப்போதும் தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருப்பானாம். காணாமல் போன அன்று சிறுவன் நிதிஸ் பாலனை ஒரு பெண் அழைத்து கொண்டு சென்றதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதனால் சிறுவனை யாரோ ஒரு பெண் தான் கடத்தி சென்றிருக்க கூடும் என கருதப்படுகிறது.
கடத்தி சென்ற பெண் யார்? உள்ளூர் பெண்ணா? வெளியூர் பெண்ணா? எதற்காக சிறுவனை கடத்தி சென்றாள்? என மர்மமாக உள்ளது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வருகிறார்கள்.