என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளையாட்டு போட்டிகளில் உலக அளவில் தமிழக வீரர்கள் தங்கப்பதக்கம் பெற வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    விளையாட்டு போட்டிகளில் உலக அளவில் தமிழக வீரர்கள் தங்கப்பதக்கம் பெற வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் பெற வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே சூரியம்பாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவி அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.

    கடந்த 23-ந் தேதி இந்த போட்டிகளை முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். டென்னிஸ் பந்தில் தலா 6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடந்தது.

    ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. கடந்த 3 நாட்களாக நடந்த இந்த போட்டிகளுக்கான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    இதனைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    விளையாட்டில் வெற்றியையும், தோல்வியையும் சமநிலையில் பார்க்க வேண்டும். வெற்றியடைந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தோல்வியடைந்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    விளையாட்டு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் விரைவில் கொண்டு வரப்படும். தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் பெற வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் அரசு, விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போட்டிகளில் பெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, பகுதி செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் துறை மாநில தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பெரியசேமூர் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் என்.நந்தகோபால், வார்டு செயலாளர் துரைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×