search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers action"

    • செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலங்களை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மேலசித்தர்காடு கிராமம், செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நன்செய் வகைபாடுடைய 2.51 ஏக்கர் சென்ட் , புன்செய் வகைபாடுடைய 0.02 சென்ட் பரப்பளவு ஆக மொத்தம் 2.53 ஏக்கர் பரப்பளவு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு நபர்களிடம் மேற்படி நிலங்களைகோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோவில் தக்கார்/ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கோவில் வசம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில் கோவில் தக்கார் / ஆய்வாளர் கீதாபாய், சிறப்பு அலுவலர்கள் அசோக்குமார், பிருந்தாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோயில் பணியாளர்களின் மூலம் மொத்தம் 2 ஏக்கர் 53 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.3795000 மதிப்புள்ள நிலச்சொத்துக்கள் மீட்கப்பட்டது. பின்னர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, மேற்படி கோயிலின் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    மீட்டெடுக்கப்பட்டுள்ளகோயில் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்குக்கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் இது போன்ற கோயில் நிலங்கள் மீட்டெடுப்பு நடவடிக்கை கள் தொடரும் என தெரிவிக்கப்படடன.

    • வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அருகே அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் பொதுப்பணித்துறை வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் அங்கு சென்று, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 45 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர்.

    அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.

    திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
    விருத்தாசலத்தில் திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று இரவு பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, நல்லூர் தமிழரசி, ஊர்நல அலுவலர் விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    அவர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து, 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தினர். இதையடுத்து அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அனுமதியற்ற மற்றும் வீதி மீறிய 1400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இது குறித்து மார்ச் 11-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்மாறும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி 1415 கட்டிடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. கொடைக்கானலில் மார்ச் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு விதிமீறிய கட்டிடங்கள் நெறிமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தமிழக நகர, ஊரமைப்பு, வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ்லக்காணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வரும் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும். எனினும் இதற்கும் கோர்ட்டு நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கூறினர்.

    இதனையடுத்து கோர்ட்டு நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தகோரி கொடைக்கானல் நகர் முழுவதும் ஓட்டல்கள், விடுதிகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    நேற்று விதி மீறிய கட்டிடங்கள் மீது சீல் வைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆணையர் முருகேசனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    இது குறித்து பதில் அளித்த ஆணையர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வியாபாரிகள் நீண்ட நேரம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து பின்னர் வெளியேறினர்.

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொடைக்கானலை சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நேற்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விதிமுறை மீறிய, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 258 வணிக கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். இன்று முதல் இப்பணி தொடங்க வேண்டும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போடி, தேனி, கம்பம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இன்று காலை 10 முதல் இப்பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானலில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    பேரணாம்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மகாராணி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் பைரவி ஆகியோர் நேற்று மாலை எருக்கம்பட்டு கிராமத்திற்கு சென்று சிறுமியின் வீட்டில் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்தி பெற்றோரை எச்சரித்தனர். அதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசினர் பிற்காப்பு மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    திருவண்ணாமலை- வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவிகள் 3 பேர் திருமணம் தடுத்து நிறுத்தபட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் செய்ய கூடாது.

    இதுபற்றி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 27), எலக்ட்ரீசியன். இவருக்கும் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி சிலம்பரசனின் திருமணம் இன்று சேத்துப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

    இதற்காக இருவீட்டாரின் உறவினர்களும் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். பெண் அழைப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகளுக்கு 18 வயது ஆகவில்லை என்று சைல்டு லைனுக்கு, வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாகவும், சான்றிதழ் இல்லையென்றும் கூறினர்.

    ஆனால் 18 வயது ஆகவில்லை என்பது உறுதியாக தெரிந்ததால் மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கி அனுப்பினர்.

    இதனால் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல சாவல்பூண்டியில் 17 வயதான 12-ம் வகுப்பு மாணவிக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இது பற்றி தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினாடார்த்தி சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது மாணவிக்கு பூப்புனித நன்னிராட்டு நடத்துகிறோம் என்றனர்.

    சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்தது தெரியவந்தது. திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என மாணவியின் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது மாவட்ட நீதிபதி மகிழேந்தி அங்கு வந்தார். அவர் மாணவியை காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    செய்யாறு அருகே மாணவி ஒருவருக்கு நேற்று திருமண ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த செய்யாறு தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியில் குருபானிகுண்டா பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவருக்கும் திருணம் நிச்சயம் செய்யபட்டது.

    அதன்படி ஆனந்தனுக்கு இன்று நாட்டறம்பள்ளி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நடக்க இருந்தது. இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்று நட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து குமார் மற்றும் அதிகாரிகள் திருமண மண்படத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.

    மூலக்கடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய ஓட்டலுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    மாதவரம்:

    மூலக்கடை பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த கடை வாடகைக்கு விடப்பட்டது.

    இந்த இடம் அரசுக்கு சொந்தமான குளம் இருந்த பகுதி என கூறப்படுகிறது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டதாகவும் இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக இந்த கட்டிடத்தை காலி செய்ய பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தனிநபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தில் ஓட்டலை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ராமமூர்த்தி, சதீஷ்குமார், பாபு போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இதில் இயங்கி வந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.


    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாளை 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சோகுப்பம் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் என்பவருக்கும் காட்டுசித்தாமூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து செஞ்சி சைல்டுலைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தாசில்தார் ரங்கநாதன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ, சமூகநல அலுவலர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, 18 வயது பூர்த்தியாகாமல் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனர்.

    இதையடுத்து 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    புதுவை அருகே வருகிற 29-ந்தேதி நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்துள்ளது நல்லாவூர் கிராமம். இது, தமிழக பகுதியை சேர்ந்ததாகும்.

    இந்த ஊரை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 29-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    29-ந் தேதி திருவந்திபுரம் கோவிலில் திருமணமும், மறுநாள் திண்டிவனத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

    இதுபற்றிய தகவல் திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தெரிய வந்தது. அவர், நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த பெண்ணுக்கு இன்னும் திருமண வயதான 18 வயது பூர்த்தியாகவில்லை என்று தெரிய வந்தது. எனவே, இதுபற்றி அவர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வானூர் தாசில்தார் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அதில், அந்த பெண்ணுக்கு திருமண வயது நிரம்பவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதியானது.

    எனவே, பெண்ணின் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். திருமணத்தை நிறுத்த வேண்டும். அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து 29-ந் தேதி நடக்க இருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் வீட்டார் எழுதி கொடுத்தனர். இதன் மூலம் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
    உரிய அனுமதி பெறாமல் வீட்டிலேயே சுகபிரசவம் பார்க்க ஆலோசனை வழங்கும் தனியார் அமைப்பை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூர் லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் அனடாமிக் தெரபி பவுண்டேசன் என்ற ‘தனியார் அமைப்பு சார்பில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக 1 நாள் எளிய வழிகாட்டி பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்று மாநகர பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுகாதாரதுறை துணை இயக்குனர் பானுமதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் அந்த நிறுவனத்தின் பயிற்சியாளரும், மருத்துவ ஆலோசகருமான ஹீலர் பாஸ்கர் (வயது 42), மேலாளர் சீனிவாசன்(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுகப்பிரசவ முறை குறித்து ஆலோசனை வழங்குவதாக கூறி பயிற்சிக்கு வருபவர்களிடம் ரூ.5 ஆயிரம் வீதம் நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. மேலும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி கொடுத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோரை கோவை ஜே.எம்.7 மாஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி 2 பேரையும் வருகிற 16-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் குனியமுத்தூர் போலீசார் கோவைபுதூர் லட்சுமி நகரில் செயல்பட்டு வந்த அனடாமி தெரபி பவுண்டேசன் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு இருந்த லட்டர்பேடு, கடிதம், பயிற்சி குறித்த சி.டி., யார்? யாரெல்லாம் இங்கு பயிற்சி பெற்றார்கள் போன்ற முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    மேலும் ஹீலர் பாஸ்கர் அமைப்பு நடத்தவும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரசவத்துக்கான பயிற்சிகள் அளிக்கவும் உரிய அனுமதி மற்றும் அதற்கான சான்றிதழ் பெறவில்லை. எனவே இந்த அமைப்பை முடக்க சுகாதாரதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

    இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    ×