search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்டு கட்சி"

    • வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது.
    • ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜனதா கடந்த 2-ந்தேதி 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது.

    அதன்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது வயநாட்டில் அவர் மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்று இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாட்டின் அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதற்காகவும் பா.ஜனதாவை எதிர்த்து போராடி வீழ்த்துவதே இந்தியா கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.

    ஆனால் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை இல்லை. கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. பா.ஜனதா எந்த ஆதாயமும் பெற அனுமதிக்க முடியாது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டது.

    வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. காங்கிரஸ் முடிவு எடுக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு டி.ராஜா கூறி உள்ளார்.

    • தாமஸ் ரோடு பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • தகவல் கிடைத்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடத்தின் 6-வது மாடியில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. மற்ற தளங்கள் வாடகைக்கு விடப்பட்டு பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கட்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான கட்டிடமாகும். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென 6-க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்களை கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் வீசினார்கள்.

    இதில் காலி மதுபாட்டில்கள் 'டமார், டமார்' என்கிற சத்தத்துடன் வெடித்து சிதறின. பின்னர் மர்ம கும்பல் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்களை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

    மாம்பலம் போலீசாரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே மதுபாட்டிலை மர்மநபர்கள் மீண்டும் வீசியுள்ளனர்.

    தாமஸ் ரோடு பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரவு 8 மணிஅளவில் அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து சமூக விரோதிகள் சிலர் மதுபாட்டில்களையும் கற்களையும் வீசியுள்ளனர். இதே போல் சென்ற ஆண்டும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

    சிலரின் தூண்டுதலால் நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் கூடுதல் கவனத்துடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருண்குமார், அலெக்ஸ், பாரதி, பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் அறிவிப்பால் பரபரப்பு
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் இனம்காரியந்தல் பகுதியில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

    இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை மீறி சுங்கச்சாவடியில் தற்போது வசூல் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதி ஒட்டியும் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனம்காரியந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 3 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
    • தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான மூ. வீரபாண்டியன் மீது 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 4ந்தேதி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் , கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாநகர மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது.
    • வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் டில்லி பாபு, கமல் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    கங்கை ஆற்றில் குளிக்க செல்வதற்காக பாதுகாப்பு அரணாக இருப்பதற்காக சந்தன கொலுவை கொண்டு பிள்ளையாரை உருவாக்கி நான் குளித்துவிட்டு வரும் வரை யாரையும் இங்கு அனுமதிக்க கூடாது என்று பார்வதி தாயார் உத்தரவிட்டு சென்றார்.

    எம்பெருமான் சிவன் வருகை புரிந்த போது பிள்ளையார் சிவனை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்தார். நான் உருவாக்கிய எனது பிள்ளையை சிவன் கொன்று விட்டாரே என்று ஆக்ரோஷம் கொண்டு காளி தேவியாக உருவெடுத்து வேகமாக புறப்பட்டார் தாய் பராசக்தி. பராசக்தியின் கோபத்தை அடக்குவதற்கு உடனடியாக சிவன் ஒரு தலையை கொண்டு வாருங்கள் என்று ரிஷிகளுக்கு உத்தரவிடுகிறார். காடுகளில் தேடிச் செல்லும்போது முதலில் தென்பட்டது யானையின் தலை. அதை கொண்டு வந்து பொருத்தி விட்டனர்.

    ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. அன்று முதல் பிள்ளையார் சதுர்த்தி விழா அந்த திதியிலேயே இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்து மதத்தின் வரலாறு தெரியாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது. வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    அத்துடன் பார்வதி அம்மா கங்கையில் குளிக்க சென்றுள்ளார். அவர் ஆண்டு முழுவதும் பல மாதகாலமாக குளிக்கவில்லை என்றால் உடலில் அழுக்கு தானே வரும். அந்த அழுக்கை முழுவதும் ஒன்று திரட்டி ஒரு பொம்மை செய்தார்.

    அந்த பொம்மை விநாயகராக மாறிவிட்டது. அந்த அழுக்கை நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு நாங்கள் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூறி இந்துக்கள் மனதை விநாயகர் பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜக. அரசை கண்டித்து போராட்டம்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    உடுமலை :

    பாஜக. அரசை கண்டித்து உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் சௌந்தரராஜன், ரணதேவ், நந்தகோபால் , ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    • ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் 180 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் 180 இடங்களில் நடந்தது.

    சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வேலையின்மை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அண்ணாசாலையை முற்றுகையிட முயன்றனர். முன்னெச்சரிக்கையாக போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதையும் மீறி சாலையில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200- க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    • 180 பெண்கள் உள்பட 372 பேர் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் மத்திய அரசே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உத்தேச மின் கட்டண உயர்வை அமுல்படுத்த, மாநில அரசை நிர்பந்திக்காதே, உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெறு என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதில் 180 பெண்கள் உள்பட 372 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25-வது மாநாடு நாளை நடக்கிறது.
    • ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில் நாளை நடக்கிறது.இதையொட்டி நாளை மாலை 4மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாளை மாலை 4மணிக்கு திருப்பூர் வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    • அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.
    • மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணி நடைபெறும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவிநாசி :

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், 25வது மாநில மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், ஒன்றிய செயலாளர் சண்முகம், துணை செயலாளர்கள் கோபால், முத்துசாமி, பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.

    இதில், கட்சியினர் பங்கேற்க வேண்டும். மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.
    • பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 5வது மாவட்ட மாநாடு தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சி துவக்கமாக காளியப்பன் கொடியேற்றினார்.பழனிசாமி, செந்தில்குமார், சசிகலா தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ரவி, இசாக், ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.இதில், மாநகர் மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளராக இசாக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.

    திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். சேதமான ரோடுகள் சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், தினமும் குடிநீர் வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்வழியில் உரிய வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.தொழில்துறையை பாதுகாக்கும் வகையில்,நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×