search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய  கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: 4பேர் கைது
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: 4பேர் கைது

    • தாமஸ் ரோடு பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • தகவல் கிடைத்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் உள்ளது. அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடத்தின் 6-வது மாடியில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. மற்ற தளங்கள் வாடகைக்கு விடப்பட்டு பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கட்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான கட்டிடமாகும். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென 6-க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்களை கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் வீசினார்கள்.

    இதில் காலி மதுபாட்டில்கள் 'டமார், டமார்' என்கிற சத்தத்துடன் வெடித்து சிதறின. பின்னர் மர்ம கும்பல் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்களை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

    மாம்பலம் போலீசாரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே மதுபாட்டிலை மர்மநபர்கள் மீண்டும் வீசியுள்ளனர்.

    தாமஸ் ரோடு பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரவு 8 மணிஅளவில் அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து சமூக விரோதிகள் சிலர் மதுபாட்டில்களையும் கற்களையும் வீசியுள்ளனர். இதே போல் சென்ற ஆண்டும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

    சிலரின் தூண்டுதலால் நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் கூடுதல் கவனத்துடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருண்குமார், அலெக்ஸ், பாரதி, பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×