search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramzan"

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து.
    • பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
    • பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்தார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மக்களிடையே கொண்டாடபட்டது.

    விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.

    இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
    • ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

    நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
    • ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

    கோவை,

    கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளான உக்கடம், கரும்புக்கடை, கோட்டை மேடு, போத்தனூர், குனியமுத்தூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் இம்தாதி தொழுகை நடத்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஏழைகளுக்கு நல உதவிகளையும் செய்தனர்.

    இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லா மியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகை யினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  

    • நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.
    • முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை யொட்டி இன்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.

    பின்னர் ஒருவரு க்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    இதுபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல், சுல்தா னியா பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    • த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
    • சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது.

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.

    விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
    • நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது.

    தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

    கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது.

    இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் சராசரியாக ரூபாய் 5 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    • அ.ம.மு.க. மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அ.ம.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500-க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் ரம்ஜானை கொண்டாட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கஞ்சிக்கு அரிசி கொடுத்தது மட்டுமின்றி உலமாக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதியை அதிகப்படுத்தினார். ஹஜ் பயணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கினார். பலருக்கு கனவாக இருக்கும் ஹஜ் பயணத்தை அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக முழு முதல் முயற்சியை எடுத்தவர் அவர். ஜாதி, மதம் பாராத அவரின் வழியில்தான் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் செல்கிறார்.

    பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அ.ம.மு.க.மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட அவை தலைவர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்குட்டி, பகுதி செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீரகந்தசாமி, ஜெகதீஷ், சிவக்குமார், ராஜாங்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம் சீமாட்டி குணசேகர், ஜெயலலிதா பேரவை ஆர்.வெங்கடேஷ், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

    14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

    தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

    அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்தளித்த டொனால்ட் டிரம்ப், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை பேணும் ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது என குறிப்பிட்டார்.
    வாஷிங்டன்:

    இஸ்லாமியர்களின் நோன்பு காலமான ரம்ஜான் மாதத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது.

    அவ்வகையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவு இப்தார் விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:-



    அனைத்து வகையான மத நம்பிக்கைகளை கொண்ட மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழத்தகுந்த இடமாக அமெரிக்கா இருப்பதற்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இந்த ரம்ஜான் மாதம் புனிதமானது. தான,தர்மங்கள் செய்யவும் சக மக்களுக்கு சேவை செய்யவும் அண்டை வீட்டார், சமூகத்தினர் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கவும் ரம்ஜான் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக உள்ளது.  

    நம்பிக்கை, சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இப்தார் விருந்தில் நாம் ஒன்றிணைகிறோம். நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், இலங்கை, கலிபோர்னியா, பிட்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியான கிறிஸ்தவ, யூத மக்களுக்கும் இதர கடவுளின் பிள்ளைகளின் நினைவுகளால் இந்த வேளையில் நமது இதயம் வேதனைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப் பட்டணம், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக் கோட்டை, சூளகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் ராயக் கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதே போல கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

    தேன்கனிக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பல்லி என்ற இடத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜானை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினர்களுக்கும் வழங்கினார்கள். மேலும் இனிப்பு வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். 
    ×