என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு - 2 பேர் கைது!
- ஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள அர்த்தமசாலா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெடித்துச் சிதறியது.
இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அளித்த புகாரை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர்.
பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இருவர் ஜெலட்டின் குச்சிகளை உள்ளே வைத்துவிட்டு சென்றது தொடர்பான ஆதாரங்கள் சிக்கன. இதைதொடர்ந்து விஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய ஒரு கிராமவாசி, இந்த கிராமத்தில் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் உள்ளது
இந்துக்கள் பண்டிகையான குடி பத்வா பண்டிகையின் போது, மசூதிக்கு அருகிலுள்ள ஹஸ்ரத் சையத் பாட்ஷா தர்காவிற்கு இந்துக்கள் வருகை தருவர்.
இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி மசூதியை வெடிக்கச் செய்ய முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் கிராமத்தினர் ஒன்றிணைந்து மசூதியின் சேதங்களை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






