search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்"

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூகநல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அவர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவை சேர்ந்த வாலிபரை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாருடன் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு திருமண வயது எட்டாததை பெற்றோரிடம் விளக்கிக்கூறினர். இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    ஆரணியில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    பெரியபாளையம்:

    ஆரணி எஸ்.பி. கோவில் தெருவைச் சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றி வரும் 24 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா,சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூகநலத்துறை அலுவலர் சரளா ஆகியோர் ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது என்று கூறினர்.

    எனவே, பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர். சிறுமிக்கு 18 வயது ஆன பின்பு திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோர்கள் உறுதி கூறினார்.

    மேலும், இது குறித்து போலீசாரும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கும் பெற்றோர்கள் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களும் பெற்றோர்களுக்கும், சிறுமி மற்றும் வாலிபர்களுக்கும் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
    தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மகேஷ் (24) என்பவருக்கும் இன்று காலை, புதுப்பாளையத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    நேற்றிரவு மணக்கோலத்தில் சிறுமியை அலங்கரித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து செல்ல தடபுடலாக ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு புகார் சென்றது. அவர் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து, வருவாய்த் துறையினர் சிறுமி வீட்டிற்கு விரைந்து சென்று திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். ‘‘குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம், போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பின்னர், திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று பிளஸ்-2 மாணவியுடன் மாணவனுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக காதல் ஏற்பட்டது.

    இந்த காதலுக்கு மாணவர் வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்று தங்கினார்.

    பின்னர் இன்று திருமணம் செய்வதற்காக நண்பர்கள் உதவியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் தங்கி இருந்தனர்.

    இது குறித்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை தீவிரமாக தேடினர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அமலாராணி தலைமையிலான குழுவினர் அவர்களை தேடிய போது இருவரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவியை திண்டுக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோரிடம் எடுத்து கூறி அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    மானாமதுரை அருகே இன்று நடைபெற இருந்த 2 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் முத்துக்குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.

    இதேபோல் இளையான்குடி வட்டாரம் கீழாயி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், இருளாண்டி மகன் திருநாவுக்கரசுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த குழந்தை திருமணங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசிதர குமார், பணியாளர்கள் சத்தியமூர்த்தி, நாகராஜ், சமூக நல அலுவலர் காளீஸ் வரி ஆகியோர் 2 சிறுமிகளின் வீட்டுக்கும் சென்றனர்.

    அவர்களது பெற்றோரிடம் திருமண வயது, சட்ட எச்சரிக்கை போன்றவை குறித்து விளக்கினர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுமிகளின் பெற்றோர் குழந்தை திருமணங்களை நிறுத்த சம்மதித்தனர். அதன் பேரில் அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

    இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

    இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக வாலிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று நடக்க இருந்தது. திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து சமூக நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அவர், சிந்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசாரும், சமூக நல அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு முத்துப்பட்டி காப்பக இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ரஞ்சித்குமார், அவரது தந்தை முருகன், தாய் முத்துச்சரம் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    ×