search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl marriage stopped"

    கோட்டக்குப்பம் அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பத்தை அடுத்த கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விமலன். (வயது 28). சென்னையில் லேத் பட்டறையில் வேலை பார்த்து வரும் இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

    இவர்களது திருமணம் நேற்று கூனிமேடு அருகே வில்வநத்தம் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இவர்கள் மணமக்களின் இருவீட்டாரும் அங்கு குழுமி இருந்தனர்.

    இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க உள்ள தகவல் கோட்டக்குப்பம் மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, முத்துலட்சுமி, மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் மணமகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இரு வீட்டினரும் வாக்கு வாதம் செய்தனர்.

    17 வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை போலீசார் எடுத்து கூறினர். இதனை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மகேஷ் (24) என்பவருக்கும் இன்று காலை, புதுப்பாளையத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    நேற்றிரவு மணக்கோலத்தில் சிறுமியை அலங்கரித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து செல்ல தடபுடலாக ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு புகார் சென்றது. அவர் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து, வருவாய்த் துறையினர் சிறுமி வீட்டிற்கு விரைந்து சென்று திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். ‘‘குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம், போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பின்னர், திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரத்தில் இன்று காலை நடைபெற இருந்த 3 குழந்தை திருமணங்களை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கரைமேல்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மருது மகன் விஸ்வநாதன் (வயது26). இவருக்கும், நயினார்கோவிலை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இன்று காலை அங்குள்ள உச்சநத்தி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

    இதேபோல் பரமக்குடி அருகே எலந்தைக்குளம் நிறைதளம் மகன் செல்ல முத்து (28) என்பவருக்கும், பரமக்குடியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    ஏர்வாடி வெட்டன்மனை வீமராஜ் மகன் ஜெயக்குமார் (29) என்பவருக்கும் ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதுகுறித்த தகவல் ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் மாவட்ட சமூக நல அலுவலர் குண சேகரி தலைமையில் இளநிலை உதவியாளர் பாண்டியன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மனித வர்த்தக மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு கேசவன், வடிவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மகேஸ்வரன், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சத்யபிரியா, சைல்டு லைன் அணி தலைவர் ஜார்ஜ், ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருமணம் நடைபெறவிருந்த பெண்கள் அனைவரும் சிறுமிகள் என தெரியவந்தது. இந்த குழந்தைகளுக்கு திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். பின்னர் அமைப்பினர் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

    உறுப்பினர்கள் வீரு, ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி குழந்தை திருமணம் குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.

    மானாமதுரை அருகே இன்று நடைபெற இருந்த 2 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் முத்துக்குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.

    இதேபோல் இளையான்குடி வட்டாரம் கீழாயி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், இருளாண்டி மகன் திருநாவுக்கரசுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த குழந்தை திருமணங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசிதர குமார், பணியாளர்கள் சத்தியமூர்த்தி, நாகராஜ், சமூக நல அலுவலர் காளீஸ் வரி ஆகியோர் 2 சிறுமிகளின் வீட்டுக்கும் சென்றனர்.

    அவர்களது பெற்றோரிடம் திருமண வயது, சட்ட எச்சரிக்கை போன்றவை குறித்து விளக்கினர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுமிகளின் பெற்றோர் குழந்தை திருமணங்களை நிறுத்த சம்மதித்தனர். அதன் பேரில் அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

    16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக வாலிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று நடக்க இருந்தது. திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து சமூக நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அவர், சிந்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசாரும், சமூக நல அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு முத்துப்பட்டி காப்பக இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ரஞ்சித்குமார், அவரது தந்தை முருகன், தாய் முத்துச்சரம் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    ×