என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுவிதா. இவரது மகள் ரஞ்சிதா(வயது22).
சுவிதாவின் தம்பி ஜெயராஜ்(வயது 26). இவர் புதுவையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜெயராஜ் தனது அக்காள் சுவிதா வீட்டில் தங்கியிருந்து புதுவைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் சுவிதா தனது மகள் ரஞ்சிதாவை ஜெயராஜிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தும் ரஞ்சிதா காட்டு மன்னார் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. கணவன்-மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். உறவினர்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் ரஞ்சிதா தனது கணவருடன் வாழமாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஜெயராஜிக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் ஜெயராஜ் 2-வது மனைவியுடன் புதுவையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். ரஞ்சிதா தனது பெற்றோருடன் இருந்து வந்தார்.
நேற்று காலை ரஞ்சிதா வீட்டில் இருந்தபோது தாயார் சுவிதா வீட்டுவேலை செய்யும்படி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சிதா மனவேதனை அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் தீ பற்றியதும் ரஞ்சிதா கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரஞ்சிதா உடல் மீது பரவிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் அவர் உடல் கருகினார். உடனே அவரை காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் தாயார் சுவிதா புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ரஞ்சிதாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனும் விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை சோதனை நடத்தியதில் அவரிடம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். இதையொட்டி வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அம்பேத்கார் நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பதும், அந்த பகுதியில் அவர் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. இதையொட்டி சக்திவேலை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யதனர்.#tamilnews
கடலூர்:
கடலூர் குட்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் உண்டு. தினமும் குடிப்பதால் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் பழனியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பழனி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடலூர் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையொட்டி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிகிருஷ்ணன், ராஜசேகர் தலைமையிலான போலீசார் இன்று காலை பலாப்பட்டு கெடிலம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கானஞ்சாவடியை சேர்ந்த செல்வராஜ் (வயது 58), மாயவேல் (50) என்பதும், அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கடாம்புலியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மாளிகம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பத்மநாபன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பின்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 25). இவர் இன்று மதியம் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பெரியகுமட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அஜித்குமார் வந்த மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் அஜித்குமாரும், அவருடன் சென்ற நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த அஜித்குமார், அவரது நண்பர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
சென்னை தண்டையார்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு சுருதி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
வினோத் கடந்த ஆண்டு கடலூர் வந்தார். அவர் கடலூர் முதுநகரில் தங்கி இருந்து மாணவ- மாணவிகளை காரில் ஏற்றிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிக்கு விட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 28-ந்தேதி வினோத் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பம் கடலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
இது பற்றிய தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் காணாமல் போன வினோத் என்பது தெரிந்தது.
மேலும் அவரின் கை, கால்களை கட்டி கடலில் போட்டு மர்மநபர்கள் கொலை செய்து இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து வினோத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆண்டவர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. மாணவி ஒருவரை வினோத் கடத்தி சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
மேலும் சிங்காரதோப்பு பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் வினோத்துக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது.
வினோத்தின் கொலைக்கும், ஏற்கனவே வினோத்தால் கடத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும் சம்பந்தம் உள்ளதா? அல்லது மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் வினோத் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வாலிபர் ஒருவர் புதுநகர் போலீஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம் கார் டிரைவர் வினோத்தை நான் தான் கொலை செய்தேன் என்று கூறி சரணடைந்தார்.
இந்த வழக்கு குறித்து கடலூர் துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அந்த வாலிபரை துறைமுக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ரகசிய அறையில் வைத்து அவரிடம் வினோத்தை கொன்றது ஏன்? இந்த கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கடலூர்:
கடலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்வு வழங்கி உள்ளது. 4 மாநிலம் சம்பந்தப்பட்டுள்ள இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது போல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பிரதிநிதிகள் தன்னை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்காமல் பிரதமர் காலம்தாழ்த்தி வருகிறார். இதற்கான காரணத்தை தமிழக அரசு கேட்டு அறிவிக்கவேண்டும். அதேப்போன்று தமிழகத்திற்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட வில்லையெனில் என்ன நடவடிக்கை எடுப்பதை என்பதையும் தமிழக அரசே அறிவிக்க வேண்டும்.
அதற்கு முன்பாக வேறு கட்சிகள் போராட்டம் அறிவிப்பை வெளியிட்டால் அது தமிழக விவசாயிகளுக்கே பாதகமாகமுடியும். இதனால் ஏதேனும் போராட்ட அறிவிப்பு என்றால் அதனை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே அறிவிக்க வேண்டும். மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரஸ் கட்சியும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.
இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்ட கூட்டாட்சி நடைபெறுகிறது உண்மை யென்றால் காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கை என்பது 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறையின் சோதனையில் அடிப்படையிலானது.
உண்மை நிலை என்ன என்பதை விசாரணை அமைப்புகள் விரைந்து விசாரித்து தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடு தப்புபவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதை வரவேற்கிறோம்.
ரஜினி, கமலோடு கூட்டணியா என்பதை இப்போது சொல்லமுடியாது. தற்போது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் நேரத்தில் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கட்சியின் மாநில துணைதலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், மாவட்டத் தலைவர்கள் ஞானச்சந்திரன், நெடுஞ் செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #tamilnews #gkvasan
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு தற்போது சோதனை காலம் ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு முன்பைவிட தற்போது குறைவான டி.எம்.சி. தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். ஆனால், பிரதமர் இதுவரை பதில் கூறவில்லை.

கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு குறைந்த அளவு டி.எம்.சி. தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுபோல் நான் பேசியதற்கு என் மீது வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரியும் பேசி உள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்படுமா? பிரதமரின் ஊதுகுழலாகதான் நிதின்கட்காரி உள்ளார்.
பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக இதுவரை ஏன் சந்திக்கவில்லை. வருகிற 7-ந்தேதி கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக பிரதமரை சந்திக்க போகிறோம் என தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அப்போது மத்திய அரசு இரு மாநிலத்திலும் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது எனக்கூறி யாரையும் சந்திக்க மாட்டார்கள். இதனை பார்க்கும்போது ஒருமைப்பாட்டுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார்.
பிரதமர் மோடி உள்நாட்டு அரசியல் குறித்து வெளிநாட்டிலும், புதுவையில் பேசி வருகிறார். இதில் காங்கிரசை அழிப்பேன் என பேசி வருகிறார். இதனை பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ். குரலாகதான் பிரதமரின் குரல் உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக்கட்சி மற்றும் விவசாய தலைவர்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இதனை உதாசீனம் செய்தால் வருகிற 6-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழுவில் இந்த பிரச்சனை குறித்து ம.தி.மு.க. சார்பில் சரியான முடிவு எடுக்க தீர்மானம் போட உள்ளோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ராம லிங்கம், நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். #Tamilnews
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 48 ஆயிரத்து 850 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு வந்தது. மேலும் வடகிழக்கு பருவமழை பெய்ததாலும் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.
இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
சென்னைக்கு குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இதனை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு 72 அடியில் இருந்து 70 அடியாக குறைக்கப்பட்டது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 67 கன அடியாக குறைக்கப்பட்டது.
இது குறித்து வீராணம் ஏரியின் பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீராணம் ஏரியில் தற்போது 40 அடியே தண்ணீர் உள்ளது. நீர்மட்டம் 39 அடி வரும் வரையில் சென்னைக்கு குடிநீர் அனுப்பலாம். தொடக்கத்தில் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 72 கனஅடி வீதம் அனுப்பப்பட்டது. நீர்மட்டம் குறைய தொடங்கியதால் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 67 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வந்தால் 7 முதல் 10 நாட்கள் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.
ஆனால், சிலர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தவறான தகவலை பரப்பி உள்ளனர். இவ்வாறு தவறான தகவல் பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காட்டு கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி(28). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு நிதிஷ் குமார்(8),நிஷாந்த்(7), என்ற மகன்களும், ஸ்ரீமதி(3), ஸ்ரீநிதி(3) என்ற மகள்களும் உள்ளனர்.
கனகராஜிக்கு மது குடிக்கம் பழக்கம் உள்ளது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கனகராஜ் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரின் மனைவி செல்வராணி தனது குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெரிதும் அவதிபட்டு வந்தார்.
இந்த நிலையில் கனகராஜ் நேற்று இரவும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரது மனைவி செல்வராணி எதற்காக இப்படி தினமும் மது குடிக்கிறீர்கள் என கணவரிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி செல்வராணியை சரமாரியாக தாக்கினார்.
இதை பார்த்த அவர்களின் குழந்தைகள் கனகராஜை தடுக்க முயன்றனர். குடிபோதையில் இருந்த கனகராஜ் குழந்தைகளையும் தாக்கினார். சிறிது நேரத்தில் கனகராஜ் தூங்க சென்றுவிட்டார். செல்வராணியும் அவரது குழந்தைகளும் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் அழுது கொண்டிருந்தனர்.
கணவர் தினமும் மதுகுடித்து விட்டு தகராறு செய்வதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வராணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
குடிகார கணவரிடம் தனது குழந்தைகளை விட்டு செல்ல மனமில்லாத செல்வராணி அவரது குழந்தைகள் 4 பேருக்கும் முதலில் விஷம் கொடுத்தார். பின்னர் அவரும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இன்று அதிகாலை செல்வராணியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது செல்வராணியும் அவரது குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வராணி மற்றும் அவரது குழந்தைகள் நிதிஷ் குமார், நிஷாந்த், ஸ்ரீமதி, ஸ்ரீநிதி ஆகிய 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் தலைமையில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.






