என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

    காட்டுமன்னார்கோவில் அருகே திருமணம் ஆன 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுவிதா. இவரது மகள் ரஞ்சிதா(வயது22).

    சுவிதாவின் தம்பி ஜெயராஜ்(வயது 26). இவர் புதுவையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜெயராஜ் தனது அக்காள் சுவிதா வீட்டில் தங்கியிருந்து புதுவைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் சுவிதா தனது மகள் ரஞ்சிதாவை ஜெயராஜிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தும் ரஞ்சிதா காட்டு மன்னார் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. கணவன்-மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். உறவினர்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் ரஞ்சிதா தனது கணவருடன் வாழமாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.

    இதைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஜெயராஜிக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர்.

    பின்னர் ஜெயராஜ் 2-வது மனைவியுடன் புதுவையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். ரஞ்சிதா தனது பெற்றோருடன் இருந்து வந்தார்.

    நேற்று காலை ரஞ்சிதா வீட்டில் இருந்தபோது தாயார் சுவிதா வீட்டுவேலை செய்யும்படி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சிதா மனவேதனை அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் தீ பற்றியதும் ரஞ்சிதா கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரஞ்சிதா உடல் மீது பரவிய தீயை அணைத்தனர்.

    இருப்பினும் அவர் உடல் கருகினார். உடனே அவரை காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் தாயார் சுவிதா புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ரஞ்சிதாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×