என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ADMK"
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
- 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
சென்னை:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக முறைகேடு புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
- மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
- ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 28-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என நீதிபதி தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம்சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது' என்று கூறப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்றனர்.
அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
- அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.
- தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.
கருமத்தம்பட்டி:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மாநாடு மற்றும் முப்பெரும் விழா இன்று மாலை நடக்கிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
மாநாட்டில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் அ.தி.மு.க. சார்பில் அவினாசி சாலையில் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றிரவு, அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் திரண்டனர். அவர்கள் பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதற்கிடையே மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேனர்கள் அகற்றப்பட்ட தகவல் அறிந்ததும், அங்கு சென்று, நிர்வாகிகளை சமாதானப்படுத்தி போலீசாருடன் பேசினார்.
தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி விடுமாறும், தனியார் இடத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டும் இருக்கட்டும் என அ.தி.மு.க.வினரிடம் கூறி விட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிறிஸ்தவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிற கட்சி நிகழ்வுகளின்போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் தற்போது அதனை அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது.
- ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தனிப்பட்ட காரணத்திற்காக மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிட்டு சிவில் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் தான் விசாரணையை தள்ளி வைக்கும் கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து வருகிறார். எனவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இருவர் சார்பிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைக்குமா? அல்லது நாளையே உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம்.
- கடந்த 30 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- இதுவரை காய்ச்சலால் 229 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையும், சுமார் இரண்டு மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு, இனியாவது இந்த விடியா திமுக அரசும், சுகாதாரத்துறையும் விழித்துக்கொண்டு தமிழகம் முழுவதும் அம்மாவின் ஆட்சியில் நடத்தியதைப் போன்று காய்ச்சல் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, நோய்களைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 30.7.2023, 29.9.2023 ஆகிய தேதிகளில் வெளியிட்டுள்ள எனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் வாயிலாக விடியா திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், விடியா திமுக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எப்போதும்போல் தனது துறை சரியாக செயல்படுவதாக பேட்டி அளித்துவிட்டு, பெயரளவிற்கு ஓரிரு நாள் மட்டும் காய்ச்சல் முகாம்களை நடத்திவிட்டு, மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு சென்றுவிட்டார். நேற்று (26.11.2023), மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1 வயது குழந்தை, 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர்; புறநகர் பகுதிகளில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் என்று மொத்தம் 13 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிய வருகிறது.

இதேபோன்று நேற்று, ஒரே நாளில் மதுரையில் 67 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; மாவட்டம் முழுவதும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும்; கடந்த 30 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், புதுக்கோட்டையில் ஓரிரு நாளில் புதிதாக 59 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை காய்ச்சலால் 229 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஏற்கெனவே, டெங்கு காய்ச்சலுக்கு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் நிலவும் அவலங்களை சுட்டிக்காட்டும் போது, அதிலுள்ள உண்மைகளை புரிந்துகொண்டு, தமிழக மக்களின் நலன் சம்பந்தமான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும், விடியா திமுக அரசுக்கும் உண்டு.
ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, பின்புற வாசல் வழியாக பதவியேற்ற இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரும், அமைச்சர்களும், எப்போதும் போல், எனது தலைமையிலான அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதிலேயே உள்ளனர்.
உதாரணமாக, சென்னை மத்திய கைலாஷ் அருகில் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2019-ஆம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 'யு' வடிவ பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2 வருடங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றால் இப்பணி தாமதமாகியது. ஆனால், இந்த விடியா அரசு பதவியேற்று 30 மாதங்கள் கழித்து, சென்ற வாரம்தான் இரு பாலங்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்து, தங்கள் ஆட்சியில் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டுள்ளது. மற்றொன்றை எப்போது கட்டி முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார்கள் என்று, அப்பகுதியில் பயணம் செய்யும் மக்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த விடியா அரசின் குறைகளை எனது அறிக்கைகள் மூலம் குறிப்பிட்டு வெளியிடுகிறேன். எனவே, நான் அறிக்கைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை உடனடியாகக் களைய இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
சூலூர்:
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. சமீபத்தில் முறித்துக்கொண்டது.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. பெற முடியாமல் போனதாக கட்சியினர் கருதினர். இதைத்தொடர்ந்து சிறுபான்மையினரின் வாக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி கோவை கருமத்தம்பட்டியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் இந்த விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
அதே பகுதியில் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
பா.ஜ.க.வில் இருந்து பிரிந்த பிறகு கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அ.தி.மு.க. பெறும் மாநாடாக அமையும் என அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
- பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்றம், ெஜயலிலதா பேரவை, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவு, மீனவரணி, நெசவாளர், இலக்கியம், அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் அணி உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நியமித்து கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் மற்றும் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மோகனூர் ஒன்றியம் கீழ்பாலப்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று புரட்சித் தமிழர் பேரவை சார்பில் என குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.
இதை கட்சி நிர்வாகிகள் பலர் பார்த்து விட்டு சென்றனர். கட்சி தலைமை இப்படி ஒரு பேரவையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் புரட்சித் தமிழர் பேரவை என பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர்-க்கு எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதாவுக்கு ஜெயலலிதா பேரவை என்பது போல் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பேரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதா? என அக்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
- பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்
- மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன்இருந்தனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் நாக்குபெட்டா நலசங்க தலைவர் தும்மனட்டிபாபு தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.பி.ஏ தலைவர் தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்தை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன்இருந்தனர்.
- வர்த்தக அணி இணை செயலாளர்-ராஜன், துணை செயலாளர்களாக மான்மல், மாரியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- சேலம், திருப்பூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பாபு, மாணவர் அணி துணை செயலாளர் மான்மல், திருப்பத்தூர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லிபாபு, திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சல்மான் ஜாவித், வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் திருமால் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாபு, புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளர்களாக டில்லிபாபு, சிவன்பாபு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர்-திருமால், மாணவர் அணி துணை செயலாளர்-சல்மான் ஜாவித், மருத்துவ அணி இணைச் செயலாளர்-பேராசிரியர் டாக்டர் ராமசாமி, வர்த்தக அணி இணை செயலாளர்-ராஜன், துணை செயலாளர்களாக மான்மல், மாரியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதே போன்று சேலம், திருப்பூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.