search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
    • அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிஷிகேஷ்:

    பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. இங்கு 5-வது கட்டமாக மே 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் மேலிடத்தின் பாரம்பரிய தொகுதியாகும்.

    கடந்த முறை ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிவடைந்து விட்டது. அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. மேல்சபை எம்.பி.யாக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என நாடே விரும்புகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் இருந்தும் எனக்காக குரல் எழுகிறது. நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் (பா.ஜனதா) மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவை அகற்ற மக்கள் நினைக்கிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்து நாட்டு மக்கள் காந்தி குடும்பத்துடன் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

    இந்த மாதம் தொடக்கத்திலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். தற்போதும் அவர் அதே மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அமேதி தொகுதியில் ராபர்ட் வதேராவுக்கு 'சீட்' கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
    • நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    எடப்பாடி:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.

    தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

    இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.

    மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
    • விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் ஆகியோர் அழைப்பின் பேரில் இருவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    அப்போது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி ஏற்படும் நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு இழக்கின்ற நிலையை தவிர்க்கவும் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து வீழ்த்தவும் இதுவே நல்ல நேரம் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    அதனை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதி வேட்பாளர்களையும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

    இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

    கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூர் சென்ட்ரல், தெற்கு, புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
    • முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை கருநாக பாம்பு என தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு மூன்று சட்டங்களை திரும்ப பெற செய்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடிக்கு எதிராக போராடினார்கள்.


    இதனால் அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மோடியை வற்புறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்க மாட்டார். அவர் கருநாகம் போன்றவர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்.

    அதுபோல் நடந்தால் விவசாயிகளை கடிக்க மோடி மீண்டும் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • ராஜசேகர ரெட்டி போல வேடமணிந்த தொண்டர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதல் மந்திரியாக உள்ளார். அவருடைய தங்கை சர்மிளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

    மேலும் தேர்தல் பிரசாரத்தில் அவருடைய தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் மற்றும் ராஜசேகர ரெட்டி போல வேடமணிந்த தொண்டர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    ராஜசேகர் ரெட்டியின் உண்மையான வாரிசு நான் தான் அவருடைய கொள்கைகளை என்னால் மட்டுமே பின்பற்ற முடியும் என அவர் பேசி வாக்குறுதி அளிக்கிறார். ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • அன்வர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
    • அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. அன்வர். இவர் பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார்.

    அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். மேலும் அவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.

    அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அன்வர் எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.
    • கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்கன்னட பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெல்தங்கடி வட்டத்தின், பஞ்சருமலே குக்கிராமத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கிராம வாக்குச்சாவடியில் மொத்தம் 111 வாக்குகள் உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் வருகை தந்து வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே 111 பேரும் வாக்களித்துவிட்டனர்.

    காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொழியும் நீரில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். காட்டில் 8 கி.மீ. நடந்து வந்து முடிகெரே நகரில் பஸ்சைப் பிடித்து, தாலுகா அலுவலகம் அமைந்திருக்கும் பெல்தங்கடிக்கு வரும் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

    இத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், அனைவரும் தவறாமல் வாக்களித்ததற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்னி மலேகுடியா கூறுகையில், 'நகரங்களில் செய்யப்படும் வசதிகள் கிராமங்களில் செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக வாக்களிக்கும் எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை 500 வாக்காளர்கள் இருந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் வாக்களித்திருப்பார்கள்" என்றார். இந்தக் கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் புதுச்சேரி சமூக அமைப்பினர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது. ஆனால் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களிலும் எத்தகைய தாக்கம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.

    தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு இந்தியாவில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
    • தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர்.

    சிக்பள்ளாப்பூர் டவுன் வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    இவர்களை அந்த பகுதியில் 'பாதாம் குடும்பம்' என்று அழைக்கிறார்கள். தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×