என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது வாக்குகள் திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்- ராகுல் காந்தி
    X

    பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது வாக்குகள் திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்- ராகுல் காந்தி

    • அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
    • வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.

    பாட்னா:

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.

    சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.

    பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.

    உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.

    அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.

    பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.

    கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.

    வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    Next Story
    ×