search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது 67 கனஅடியாக குறைப்பு
    X

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது 67 கனஅடியாக குறைப்பு

    வீராணம் ஏரியில் தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் 67 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கி வருகிறது.

    ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 48 ஆயிரத்து 850 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு வந்தது. மேலும் வடகிழக்கு பருவமழை பெய்ததாலும் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.

    இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    சென்னைக்கு குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    இதனை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு 72 அடியில் இருந்து 70 அடியாக குறைக்கப்பட்டது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 67 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இது குறித்து வீராணம் ஏரியின் பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீராணம் ஏரியில் தற்போது 40 அடியே தண்ணீர் உள்ளது. நீர்மட்டம் 39 அடி வரும் வரையில் சென்னைக்கு குடிநீர் அனுப்பலாம். தொடக்கத்தில் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 72 கனஅடி வீதம் அனுப்பப்பட்டது. நீர்மட்டம் குறைய தொடங்கியதால் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 67 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வந்தால் 7 முதல் 10 நாட்கள் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.

    ஆனால், சிலர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தவறான தகவலை பரப்பி உள்ளனர். இவ்வாறு தவறான தகவல் பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×