என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
- ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மதுரை:
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா மற்றும் ஆன்மீக பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 19-ந்தேதி மாலை சென்னை வருகை தந்தார். நேற்று ஸ்ரீரங்கம் சென்ற அவர், பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தரிசனம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பகல் 12.40 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
முன்னதாக 11.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லி புறப்படும் முன்பாக அவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. உள்ளிட்ட 39 பேரை சந்தித்தார்.
பின்னர் அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
- ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
- ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.
அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.
இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.
- அரிச்சல்முனை கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
- அங்கு பூஜை முடித்து மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.
மதுரை:
மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்கிடையே, இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.
இந்நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மதுரை சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
- டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
- அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும். மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது.
டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.
தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும்.
- அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
சென்னை:
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும்.
அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் கமல்ஹாசன் இருந்து வருகிறார். இது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.
- அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- தொடர்ந்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு பூஜைகள் செய்தார்.
ராமேஸ்வரம்:
மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.
#WATCH | Tamil Nadu: Prime Minister Narendra Modi performs puja and darshan at Sri Kothandarama Swamy temple in Dhanushkodi.
— ANI (@ANI) January 21, 2024
The name Kothandarama means Rama with the bow. pic.twitter.com/BM0I7sqBNJ
- தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
- பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.
சேலம்:
சேலம் தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.
1. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அனுமதி தந்த தி.மு.க. தலைவருக்கு நன்றி.
2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்.
3. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பெண்களுக்கு இலவச பயண திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் சேமிப்பை உயர்த்தி இருப்பதற்கு மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் தலா 1000 ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப பெண்களின் உரிமைக்கான மதிப்பை மேம்படுத்திய முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
5. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். மாணவர்களின் உடல் நலனை காத்து ஊக்கம் அளிக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
6. நான் முதல்வன் திட்டங்கள் மூலம் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதம் தலா ரூ.1000 பெறுகிறார்கள். இப்படி நாளைய தலைமுறையை வளர்த்து எடுக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
7. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலன் பெற்றுள்ளனர். 2 லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
8. நிதி நெருக்கடியான நேரத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட 2 கோடியே 19 லட் சத்து 71 ஆயிரம் 113 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சரை மாநாடு பாராட்டுகிறது.
9. வரலாறு காணாத மழையிலும் மக்கள் துயர் துடைக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கியதற்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
10. முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றும் வகையில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என கலைஞர் புகழ் போற்றும் அமைப்புகள் மூலம் அவர் வழிநடப்போம்.
11. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் தமிழகத்தில் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்த முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
12. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற இளைஞர் அணி தொடர்ந்து முன்னெடுக்கும்.
13. தமிழகத்தில் உயிர்பலி வாங்கிய நீட் நுழைவு தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.
14. தமிழகத்தின் கல்வி கட்டமைப்பு சிறந்து விளங்குகிறது. அதை சிதைக்கும் வகையில் இந்தி, சமஸ்கிருதம் திணித்து குல கல்வி முறையை கொண்டு வர நடக்கும் முயற்சியை இளைஞர் அணி எதிர்க்கிறது. தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும்.
15. நீட் தேர்வு, முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி ஆதிக்கம் செய்யப்படுகிறது. எனவே மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
16. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிக்கிறது.
17. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான கவர்னர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் மத்திய அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கவர்னர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்த திட்டமிடும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.
மேலும் கவர்னர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
18. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
19. மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதற்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
20. கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க மாநாடு கேட்டுக் கொள்கிறது.
21. அமலாக்கத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
22. பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழிக்க மாநாடு உறுதி ஏற்கிறது.
23. பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இதை மறைத்து ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கலாம் என்று நினைக்கும் பாரதிய ஜனதாதான் இந்துக்களின் உண்மையான எதிரி என்பதை இந்த மாநாடு மூலம் அம்பலப்படுத்துவோம்.
24. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.
25. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி காட்டும் என இளைஞர் அணி சூளுரைக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார்.
- கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.
ராமேசுவரம்:
அயோத்தி ராமர் கோவில் சிறப்பு விழாவை யொட்டி தென்னகத்தில் உள்ள ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழகம் வந்த அவர் நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் ராமரின் குலதெய்வமான ரெங்கநாத பெருமாளை வழிபட்டார்.
பிற்பகலில் ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். இதையடுத்து இன்று காலை தான் தங்கி இருந்த ராமகிருஷ்ண மடத்தி லிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்றார்.
ராமாயணத்தில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க அரிச்சல் முனை பகுதியில் இருந்து ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்ற இடத்தில் பிரதமர் மோடி வழிபட்டார். அதேபோல் ராமர் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை செய்தார் என்று ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை கடற்கரையில் மணலால் சிவலிங்கம் உருவாக்கப்பட்ட இடத்தில் வண்ண மலர்களை தூவி சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர் கடற்கரை பகுதியில் காலார நடந்த அவர் அதிநவீன கேமிரா மூலம் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார். தொடர்ந்து கடல் நீரை கையில் எடுத்து சூரியனை நோக்கி தெளித்து சூரிய வழிபாடு செய்தார். மேலும் கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.
இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தூணிற்கு பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, ராமாயணத்தில் ராவணனின் தம்பி விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
- கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர்.
- யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர்.
அருவங்காடு:
குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம், கிரேக்மோர் உள்ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அவை காட்டுக்குள் செல்லாமல், தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளன. மேலும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நாக்குநெறி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து ருசி பார்த்தது. அந்த நேரத்தில் பழனியம்மாள் வீட்டில் எவரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் அந்த காட்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக விழித்துக்கொண்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்றனர்.
இதற்கிடையே கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கூட்டம் வழக்கம்போல் அருகே உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.
எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மனுநீதிநாள் முகாம், வனத்துறை அலுவலகம் மட்டுமின்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனாலும் அந்த யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகளை கும்கிகள் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அவருக்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பதால் கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
சட்டரீதியிலான அனைத்து போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வி அடைந்த அவர் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் அவர் கோவையில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி நடத்தினார்.
முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார். இந்த நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த அவரது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் மேலும் பின்னடைவை சந்தித்தார்.

என்றாலும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பதற்கு தனது சுற்றுப்பயணம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
அந்த வகையில் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளார். திண்டுக்கல்லில் இருந்து அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
தென் மாவட்டங்கள் மற்றும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிறைவு செய்ய உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஆதரவாளர் மேலும் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சற்று பின்னடைவுதான். என்றாலும் மூல வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.






