search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்ட அணைப்பகுதிகளில் மழை நீடிப்பு
    X

    நெல்லை, தென்காசி மாவட்ட அணைப்பகுதிகளில் மழை நீடிப்பு

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×