என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசு போக்குவரத்து கழகத்தில் சேவியர் குமார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
    • மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரணியல்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மைலோடு ஆலய பாதிரியராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்கு பேரவை தலைவராகவும் உள்ளார். தற்பொழுது பங்கு பேரவை நிர்வாகத்தினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமாருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெமிலாவை மீண்டும் பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக பாதிரியார் ராபின்சனை சந்தித்து சேவியர் குமார் பேசினார். நேற்று மதியமும் சேவியர் குமார் பாதிரியார் ராபின்சனை சந்தித்து பேச ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஆலய வளாகத்திற்குள் பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெமிலா மற்றும் அவரது உறவினர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. குளச்சல் டி.எஸ்.பி. பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி. உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சேவியர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சேவியர் குமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நள்ளிரவு 1.45 மணிக்கு சேவியர் குமாரின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் சேவியர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமீலா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பங்கு தந்தைகள் ஆவார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்வோம். ஜெமிலாவிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    • தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
    • தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமார் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை தனியாகவும் தேர்தல் பொறுப்பாளர்களை தனியாகவும் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அதைத் தொடர்ந்து அஜய் குமார் நிருபர்களிடம் கூறும்போது, "தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 28-ந்தேதி நடைபெறும்" என்றார்.

    ஏற்கனவே இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள். பின்னர் மேலிடம் தொகுதிகளை உறுதி செய்யும்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது.
    • புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுவிடுமுறை அளித்துள்ளன.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவில் இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரமாண்டமான திருக்கோவில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடெபெறும் நாளான 22-ந்தேதி (நாளை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது.
    • பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    1986-ம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது. அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டி, ஒரு பனித் தீவாக மாறியது.

    உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்த பல் வடிவ பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. அதன் தடிமன் 1,312 அடி ஆகும். இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.

    இந்த பனிப்பாறை கடந்த 2022-ம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஏ23ஏ பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் இறுதிப் பயணமாக வடக்கு நோக்கி செல்கிறது. தற்போது யானைத் தீவு மற்றும் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு இடையே நகர்கிறது. இந்த பனிப்பாறை ஒரு டிரில்லியன் டன் தண்ணீரைக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து அண்டார்டிக் சர்வேயின் ஆண்ட்ரூ பிளெமிங் கூறும் போது, "2020-ம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நகருவது தெரிந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஏ23ஏ அதன் பனிக்கட்டிகளில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது" என்றார்.

    • பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி தமிழக அரசை நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.
    • பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை என சேகர் பாபு விளக்கம்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை.

    முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி "அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தனியாருக்கு சொந்தமான கோவில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களை மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

    • பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
    • அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம்.

    திருச்சி:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, சுந்தர் பட்டர் தலைமையில் தங்க குடத்துடன் கூடிய பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த அவர், கம்பராமாயணத்தின் பாராயணம் கேட்டு மகிழ்ந்தார்.

    அதன் பின்னர் தீபக் (எ) ராகவ் பட்டர், ஸ்தானிகர்கள் ரங்கராஜன், கோவிந்தராஜன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கான பட்டு வஸ்திரங்கள் கோவில் சார்பில் வழங்கினர்.

    இதுதொடர்பாக, கோவிந்தராஜன் கூறுகையில்:-

    அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிரதமர் அயோத்திக்குக் கொண்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    "இன்று சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று பணிமுடித்து புதுத் துணிகளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    இவர் செங்குறிச்சி சாலை யில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற கார் பெட்ரோல் பங்கிற்கு செல்ல திடீரென திரும்பி யது. பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.தகவல் அறிந்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
    • தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இணையதளபதிவில் கூறியிருப்பதாவது:-

    நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் உருவச்சிலை, நமது பிரதமர் நரேந்திர மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    சாதி, மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், மதசார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தமிழக கோவில்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

    கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் காவல் துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான கோவில் வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்பமாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது தி.மு.க. அரசு?

    மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப்பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை தி.மு.க. கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க.வின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர்.
    • சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் புனித யாத்திரை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவர் பத்தாவது நாள் விரதத்தில் உள்ளார். இந்த பதினோரு நாள் பிரதமர் விரதத்தில் கடைசி நாட்கள் தமிழகத்திற்கு வந்திருப்பது மிக சிறப்பாக உள்ளது.

    பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை ராமநாதபுரம் மக்கள் கொடுத்தனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் முதல்வர் இல்லம் உள்ளிட்ட 126 சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வார்கள் என்று நினைக்கிறேன்.


    கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட 55 மத வழிபாடு தளங்களை நாளை தமிழகத்தில் சுத்தம் செய்கிறோம். அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ராமர் என்ற உணர்வு தமிழக மண்ணில் கலந்திருக்கிறது. ராமரை தமிழக மண்ணில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

    சைவமும், வைணவமும் சேர்ந்ததுதான் சனாதன தர்மம். இதனை யார் எதிர்க்கிறார்களோ அப்போது அதன் பெருமை மேலும் அதிகரிக்கும். ராமேசுவரம் கோவிலுக்கு பிரதமர் வருகையொட்டி முழுமையாக அறநிலை துறை ஒத்துழைப்பு தந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீ ராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.
    • மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. நம் நாட்டில் புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகளுக் கும்மேலான போராட்டம். இதற்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். அயோத்தியின் சரயு நதியில் ரத்தம் ஓடியதெல்லாம் வரலாறு.

    அயோத்தியில் ராமர் கோவிலை தம் வாழ்நாளில் பார்த்து விடமாட்டோமா என கோடிக்கணக்கான மக்கள் ஏங்கினார்கள். ராமர் கோவிலை பார்க்காமலேயே போய்விடுவோமோ என பலர் கலங்கினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் என்பது சாத்தியமே இல்லை என பலர் நினைத்தார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, யாருக்கும் பிரச்சினையின்றி அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.


    இந்த நாள் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைப் போல மிகமிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. எது நடக்கவே நடக்காது என நினைத்தார்களோ அதை அனைத்துத் தரப்பினரும் மகிழும் வகையில் நடத்திக் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீராமர் தனக்கான கோவிலை எழுப்ப பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்கிறார்.

    அகிம்சை வழியில் போராடி சாதித்த மகாத்மா காந்தி, 'ராம ராஜ்ஜியம்' என்பதை தனது கனவாக, கொள்கை முழக்கமாக முன்வைத்தவர். மகாத்மாவின் கனவை அவரது மண்ணில் பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

    ராமர் கோவில் திறப்புக்கு முன்பாக நம் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்து பிரதமர் மோடி தரிசனம் செய்து உள்ளார். ராமர் கோவிலுக்காக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12-ந் தேதி முதல் தரையில் படுத்துறங்கி கடுமையான விரதம் இருந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செயற்கரிய செயலை செய்து முடித்த பிரதமர் மோடியின் புகழ் வரலாற்றில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இல்லங்கள் தோறும் விளக்கேற்றி புதிய விடியலை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×