search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு போக்குவரத்து கழக ஊழியர் கொலை- தி.மு.க. ஒன்றிய செயலாளர், பாதிரியார்  உள்பட 15 பேர் மீது வழக்கு
    X

    அரசு போக்குவரத்து கழக ஊழியர் கொலை- தி.மு.க. ஒன்றிய செயலாளர், பாதிரியார் உள்பட 15 பேர் மீது வழக்கு

    • அரசு போக்குவரத்து கழகத்தில் சேவியர் குமார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
    • மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரணியல்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மைலோடு ஆலய பாதிரியராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்கு பேரவை தலைவராகவும் உள்ளார். தற்பொழுது பங்கு பேரவை நிர்வாகத்தினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமாருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெமிலாவை மீண்டும் பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக பாதிரியார் ராபின்சனை சந்தித்து சேவியர் குமார் பேசினார். நேற்று மதியமும் சேவியர் குமார் பாதிரியார் ராபின்சனை சந்தித்து பேச ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஆலய வளாகத்திற்குள் பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெமிலா மற்றும் அவரது உறவினர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. குளச்சல் டி.எஸ்.பி. பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி. உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சேவியர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சேவியர் குமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நள்ளிரவு 1.45 மணிக்கு சேவியர் குமாரின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் சேவியர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமீலா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பங்கு தந்தைகள் ஆவார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்வோம். ஜெமிலாவிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    Next Story
    ×