search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை பொது விடுமுறை அளிக்க அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
    X

    நாளை பொது விடுமுறை அளிக்க அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது.
    • புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுவிடுமுறை அளித்துள்ளன.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவில் இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரமாண்டமான திருக்கோவில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடெபெறும் நாளான 22-ந்தேதி (நாளை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×