search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுக சிறுக சேமித்த பணத்தால் விமானத்தில் பறந்த கிராம மக்கள்
    X

    சிறுக சிறுக சேமித்த பணத்தால் விமானத்தில் பறந்த கிராம மக்கள்

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    Next Story
    ×