என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.
- கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.
* ஊழலில் சிக்கியதால் மக்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும்.
* பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. நிதி திரட்டி உள்ளது.
* நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் தேர்தல் நன்கொடை வழங்கியது எப்படி? தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டதா?
* சீனா ஆக்கிரமிப்பை அகற்றாமல் வாய்மூடி மெளனம் காக்கிறது பா.ஜ.க.
* பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திராவிடக் கட்சிகள் தான்.
* கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் பேசியது வெற்று முழக்கம்.
* கச்சத்தீவை மீட்க பா.ஜ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?
* வெளிநாட்டில் சிக்கியிருந்த மீனவர்களை தமிழக அரசுதான் மீட்டது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
- ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகு நல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ரகு வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
இதையடுத்து மனவேதனையில் இருந்த ரகு வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் (வயது 34), மீன்பிடி தொழிலாளி.இவரது மனைவி ஜெனிபா ஆல்பர்ட் (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெனிபாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.கணவன் சமீர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் சமயத்தில் ஜெனிபாவும் ஆசிக்கும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் சமீருக்கு தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெனிபா மங்குழி பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். ஜெனிபாவுடன் ஒரு குழந்தையும் சமீருடன் ஒரு குழந்தையும் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று வேலை முடிந்து சமீர் மனைவி ஜெனிபாவை பார்க்க அவருக்கு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆசிக் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சமீர் அவரை அந்த பகுதியில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிக் மயங்கி விழுந்தார். இதையடுத்து சமீரும் அவரது மனைவி ஜெனிபாவும் மயங்கி விழுந்த ஆசிக்கை மோட்டார் சைக்கிள் மூலமாக தூக்கி சென்று கேரள எல்லை பகுதியான அம்பிளி கோணம் பகுதியில் வீசி சென்றனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிக்கை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கைதான ஜெனிபா, சமீர்
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சமீர், ஜெனிபா இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக்கை அடித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து சமீர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி யிருப்பதாவது:-
எனக்கும் ஜெனிபாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது ஆசிக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எனக்கு தெரிய வந்தது. இதனால் எனது மனைவியை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.தொடர்ந்து ஆசிக்கை சந்தித்து வந்தார். இந்த நிலையில் எனது மனைவி ஜெனிபா என்னுடன் கோபித்துக் கொண்டு மாங்கொளியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஒரு குழந்தை என்னுடனும் மற்றொரு குழந்தை எனது மனைவியுடனும் இருந்தது. மனைவி ஜெனிபா உடன் இருந்த எனது குழந்தையை பார்க்க செல்ல நான் முடிவு செய்தேன். இதையடுத்து எனது மாமியார் வீட்டிற்கு சென்றேன். அப்போது ஆசிக் எனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து இருந்தார். மனைவியிடம் கேட்டபோது அவர் சில நாட்களாக இங்கே தங்கி இருந்தது தெரிய வந்தது. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிக்கை சரமாரியாக தாக்கினேன். அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து எனது மனைவியும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் மாட்டிக் கொள்வோம் எனவே அவரை சாலையில் வீசிவிட்டு விபத்து நடந்ததாக நாடகம் ஆடி விளையாடலாம் என்று எண்ணினோம். ஆசிக்கை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சாலை ஓரத்தில் வீச முடிவு செய்தோம். இதையடுத்து நான் மோட்டார் சைக்கிளை ஓட்டினேன்.
எனது பின்னால் ஆசிக்கை அமரவைத்து எனது மனைவி அவரை பிடித்துக் கொண்டார். ஆள் நடமாட்டம் இல்லாத அம்புளிக்கோணம் பகுதியில் வீசிவிட்டு வந்து விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. .
- மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி- பழவேற்காடு சாலை மெதூரில் இருந்து அரசூர் சாலை வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், ஐயநல்லூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மெதூர்-அரசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மணல் ரோடாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலையால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து மெதூர்-அரசூர் சாலையை சீரமைக்க கோரி விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெதூரில் பொன்னேரி-பழவேற்காடு செல்லும் 8 அரசு பஸ்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்ததை நடத்திய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மெதூர்-அரசூர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர்.
அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர். திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார்.
- சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
விழாவையொட்டி அம்மன் சப்பரம் வீதி உலா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலம் மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சப்பரம் முன்பு படுத்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.
இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என வேண்டி கொண்டனர்.
தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஊருக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் பரிசலில் அக்கறை தத்தப்பள்ளி மற்றும் உத்தண்டியூரில் திருவீதி உலா நடந்தது.
இதில் சாலைகளில் வழி நெடுக பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.
இதில் மினி லாரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
- குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.
உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.
தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
- அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி.
- பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.
மதுரை:
மதுரை கோச்சடையில் புதிய ரேசன் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது தி.மு.க.
நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. தி.மு.க. காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.
மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா? தொடர்வாரா? என்பது தெரியும்.
கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மனவேதனை.
பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.
கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பா.ஜ.க.வை விட்டு வாருங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பா.ஜ.க.வை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?
விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சிறு பிள்ளைகள். 2026-ம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு தி.மு.க.வுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.க.வுக்கு கோபம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும்.
- தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது.
அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
- தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.
அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.
குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






