என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
- வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.
- மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தமிழகத்துக்கும் ஏற்கனவே 3 முறை வந்து ஆதரவு திரட்டி உள்ளார். தற்போது 4-வது முறையாக மீண்டும் நாளை (18-ந் தேதி) தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். நாளை கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நாளை மாலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார்.
அவர் செல்லும் வழிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு பா.ஜ.கவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மாலை 5.45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். பேரணி நடைபெற உள்ள சாலையானது 2 வழிச்சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் வழியாக பிரதமர் மோடி பேரணியாக செல்கிறார். வலதுபுறம் பொதுமக்களும், தொண்டர்களும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் நின்றபடி அங்கு திரண்டு நிற்கும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சில இடங்களில் பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி மக்களை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வினர் திரட்ட உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசாரம் என்பதால் கோவை பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வாகன பேரணி கவுண்டம்பாளையம் எரு கம்பெனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீ தூரம் வரை நடப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ரோடு ஷோவானது 2 கி.மீ தூரமாக குறைக்கப்பட்டு உள்ளது.
வாகன அணிவகுப்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமானம் நிலையம் சென்று, கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளான சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், அவர் தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகளிலும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, கோவை சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல்,
நாகப்பட்டினம்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதற்காக நாகை மாவட்டத்தில் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்காலில் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து ரூ.1,53,400-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.
நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
- காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை :
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
- மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மதுரையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கார் மூலம் நேற்று வந்தார். வரும் வழியில் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அமைச்சர், அவரிடம் இருந்த துண்டுச்சீட்டை வாங்கி பார்த்து அது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், இது ஓ.பி. (புறநோயாளிகள்) பதிவு சீட்டு என்றார். அவரது பதிலை கேட்ட அமைச்சர், அங்கிருந்த டாக்டரை கண்டித்தார். நோயாளிகளுக்கு அச்சடித்து ஓ.பி.பதிவு சீட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருந்து குடோனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது தரையில் மருந்துகள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த அமைச்சர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி கொடுத்தால் அதனை பாதுகாப்பாக வைக்க கூட முடியாதா? என்று மருத்துவமனை ஊழியர்களை கடிந்து கொண்டார்.
இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்தபடியே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் மருத்துவ அதிகாரியிடம் செல்போனில் பேசிய அமைச்சர், சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவமனையை சரியாக பராமரிப்பு செய்யாததால், டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கிறது.
- நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையே எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசின் நாட்டுடமை ஆக்குவதும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 14-ம் தேதி கட லுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் பெரும்பாலான படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 5 ரோந்து கப்பலில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அச்சத்துடன் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசரம் அவசரமாக சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரோல் என்பவரது 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.
அந்தப் படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தர பாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, சந்திவேல், இஸ்ரோல் படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகர் (34), யோஸ்வா (35), அஜித்குமார், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவர்களை கைதுசெய்தனர்.
இதனைதொடர்ந்து, இன்று காலையில் 2 படகுகள் மற்றும் 21 மீனவர்களை காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பகுதிக்குள் வந்த மீன்பிடித்ததாக கூறி 2 படகுகள் மற்றும் படகில் பிடிக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யக் கூறி, யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இந்திய அரசின் பதிவு எண் இல்லை. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என இலங்கை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
- விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
- ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.
பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான கால அவகாசம் வருகிற 26-ந்தேதி வரை நிலுவையில் உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவம் ஏ மற்றும் பி-யில் கையெழுத்திடுவதற்காக உள்ள அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும். சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டி சட்ட விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிவில் வழக்கு காரணமாக இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என்று அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என அங்கீகரித்து தங்கள் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது.
- விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. இது விமான நிலைய எதிர்ப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர். இன்று முதல் இரவு நேர போராட்டத்தை நிறுத்திவிட்டு சட்ட போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும், வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
- 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இரண்டு சான்றிதழ்கள் பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர், அரசாணை (நிலை) எண்.26. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20% reservation) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர், எனவும் மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/Nqrw48irWY
— TN DIPR (@TNDIPRNEWS) March 16, 2024
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.
- தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது.
சென்னை:
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.
கூட்டணி குறித்த செய்திகள் தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பு உண்மையானது. தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.






